PUBLISHED ON : நவ 06, 2022

நம் உடம்பில் இருக்கும் சில அணுக்கள், உடம்பில் இருக்கும் உறுப்புகளுக்கு எதிராக வேலை செய்வதால் ஏற்படும், 'ஆட்டோ இம்யூன் டிசாடர்' பிரச்னை மூட்டுகளை பாதித்தால் ரூமடாய்டு ஆர்த்ரடீஸ்; தசைகளை பாதித்தால் மயோசிடிஸ். பொதுவாக, இது போன்ற பிரச்னைகள், குழந்தைகள் முதல், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வரை அனைத்து வயது பெண்களையும் பாதிக்கும் என்றாலும், 20 - 40 வயதிற்குள் இருப்பவர்களை மிக அதிகமாக பாதிக்கிறது.
பிரச்னைக்கு முக்கிய காரணம் மரபணு.
இந்த நோயை உண்டாக்கும் மரபணு யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களுக்கு ரூமடாய்டு ஆர்த்ரடீஸ் வரும் அபாயம் அதிகம். அதற்காக பரம்பரை பரம்பரையாக, நிச்சயம் வரும் என்றும் சொல்வதற்கில்லை.
இந்த மரபணு இருப்பவர்களுக்கு காய்ச்சல், தொற்றுகள், வாயில் இருக்கும் கிருமிகள், சிகரெட், மது பழக்கம் போன்றவை, இந்தப் பிரச்னைக்கான மரபணுவை துாண்டலாம்.
உறுதி செய்யலாம்
உடம்பில் இருக்கும் எல்லா மூட்டுகளையும் பாதிக்கும் பிரச்னை இது. மூட்டு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. இந்த நோயை சரியான நேரத்தில் கவனித்து, சிகிச்சை எடுக்காவிட்டால், மற்ற உள் உறுப்புகளையும் பாதிக்கும். பொதுவாக, கண்கள், நுரையீரலை அதிகம் பாதிக்கும். இதற்கு நிரந்தர தீர்வு கிடையாது; சரியான மருத்துவ சிகிச்சையால், நோயின் தன்மையை கட்டுக்குள் மட்டுமே வைக்கலாம்.
மூட்டுகளில் வலி, வீக்கம், விரைப்புத் தன்மை, குறிப்பாக காலையில் எழுந்தவுடன் கைகளில் இறுக்கம் இருப்பது, வேலை செய்ய துவங்கிய சிறிது நேரத்தில் இறுக்கம் தளர்ந்து விடும்; படுக்கையில் இருந்து எழுந்தவுடன், தரையில் கால்களை ஊன்றவே முடிவதில்லை என்று சொல்வர். கணுக்கால்கள், பாதங்கள், கால் மூட்டுகளில் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறி.
கைகளின் மணிக்கட்டுகள், மூட்டுகளில் பாதிப்பு அதிகம் இருக்கும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் வலி இருந்தால், மாத்திரைகள் கொடுத்து சரியாகி விட்டால் பிரச்னை இல்லை.
மூன்று மாதங்கள் வலி இருக்கிறது: காய்ச்சல் வரும் உணர்வு உள்ளது என்றால், துறை சார்ந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ரத்த பரிசோதனையில் உறுதி செய்யலாம்; சிலருக்கு, 'அல்ட்ரா சவுண்டு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' எடுத்து உறுதி செய்யலாம்.
பிரச்னைகள் வரும்
தொடர்ந்து மருத்துவ ஆலோசனை முக்கியம். துவக்கத்தில் வலியை கட்டுப்படுத்த, ஸ்டிராய்டு, வலி நிவாரண மாத்திரைகள் தர வேண்டியிருக்கும். இந்த இரண்டும் அதிக நாட்கள் சாப்பிட்டால், சிறுநீரகங்கள் கெட்டு விடும் என்று பயந்து, மாத்திரைகளை தவிர்ப்பர்.
மருத்துவர் ஆலோசனையில், எத்தனை நாட்கள் சாப்பிடச் சொல்கிறாரோ அவ்வளவு மட்டும் சாப்பிட்டால், எந்தப் பிரச்னையும் வராது.
ஒரு முறை டாக்டரிடம் ஆலோசனைக்கு வந்து, மறு ஆலோசனைக்கு வராமல் ஆண்டுக்கணக்கில் ஒரே மாத்திரை எடுத்தால், பிரச்னைகள் வரும்.
சில மாத்திரைகள் பரிந்துரைக்கும் போது, இது கேன்சர் மாத்திரை என்று நினைத்து பயப்படுவர். நாங்கள் தரும் சில மாத்திரைகளை, கேன்சருக்கும் பயன்படுத்துகின்றனர்; ஆனால், இவை கேன்சருக்கான பிரத்யேக மாத்திரைகள் கிடையாது.
மாத்திரைகளுடன் பிசியோதெரபி எடுத்தால் நல்லது; உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவையில்லை; காபியை தவிர்க்க வேண்டும். சிகரெட் ரூமட்டாய்டை அதிகப்படுத்தும்.
ஆரம்பத்திலேயே வந்தால், சிகிச்சை எளிது. தாமதித்தால், கை மூட்டுகள் மடங்கத் துவங்கும்; அவற்றை மாத்திரைகள் கொடுத்து, பழைய நிலைக்கு கொண்டு வருவது சிரமம்.
டாக்டர் ஏ.ஆர்.கேசவன்
எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.
