PUBLISHED ON : மார் 23, 2025

நீண்ட நாட்களாக தொடர்ந்து வெப்பத்திலேயே இருப்பவர்களுக்கு காலப்போக்கில் சிறுநீரகங்கள் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதை, பல ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.
குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் நீர் தினமும் தேவை. வெயிலிலேயே நாள் முழுதும் இருப்பவர்களுக்கு, இதை விடவும் அதிகமாக நீர்ச்சத்து தேவைப்படலாம்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் விட்டால், உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால், சிறுநீரகங்களில் கற்கள் உருவாகலாம்.
வெப்பமான சூழ்நிலையிலேயே அதிக நேரம் இருந்தால், சிறுநீர் அடர்த்தியாகி, தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது தவிர, சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், தொடர்ந்து வலி நிவாரண மாத்திரை சாப்பிடுவது, மரபியல் காரணங்களால், பல சமயங்களில் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
இதில், நிரந்தர, தற்காலிக சிறுநீரக செயலிழப்பு என்ற இரண்டு வகைகள் இருந்தாலும், அதீத வெப்பத்தால் தற்காலிகமாகவே சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
அதிக வெப்பத்தால் தசைகள் இறுகும் போது, அதிலிருந்து வெளிப்படும் நச்சுகள், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவையும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
வெயில் அதிகமாகி, 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு, நீர்ச்சத்து குறைந்து, மறைமுகமாக சிறுநீரகங்களை பாதிக்கும்.
இதனால், தற்காலிக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, வெயில் காலத்தில் பலரும் மயங்கி விழுவது பொதுவான விஷயமாக உள்ளது. உடனடியாக சிகிச்சை அளித்தால், சிறுநீரக செயலிழப்பை தடுக்கலாம்.
உடற்பயிற்சி செய்யும் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து வெளிப்படும் நச்சுகளும் சிறுநீரகங்களை பாதிக்கும்.
சிறுநீரகம் தன் வடிகட்டும் வேலையை திறம்பட செய்ய வேண்டும் என்றால், ரத்த ஓட்டம் நன்றாக இருக்க வேண்டும். ரத்தம் தான் நச்சுகளை வடிகட்டுகிறது.
நீர்ச்சத்து குறைந்தால், ரத்த அழுத்தம் குறையும். யூரியா, கிரியாட்டினின் போன்ற நச்சுகள் சிறுநீரில் வெளியேறாமல் ரத்தத்தில் அப்படியே படிந்து விடும்.
கிரியாட்டினின் அளவு 1.2 எம்.ஜி.,/டி.எல்., என்ற அளவில் தான் இருக்க வேண்டும். 1.5 எம்.ஜி.,/டி.எல்., என்றால், சிறுநீரகப் பிரச்னை ஆரம்பித்துள்ளது என்று பொருள்.
8.1 எம்.ஜி.,/டி.எல்., என்ற அளவிற்கு அதிகரித்தால், டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயம் என்று அர்த்தம்.
சிறுநீர் பரிசோதனை செய்தால், சிறுநீரகங்களின் செயல்பாட்டை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதை தவிர்த்து விட வேண்டும். ரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.
ஹீட் ஸ்ட்ரோக்கால் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்; குறையலாம். பழங்கள், காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.
டாக்டர் ஈ. ராம்பிரசாத், பேராசிரியர், தலைவர்,
சிறுநீரகவியல் துறை, எஸ்.ஆர்.எம்.சி, சென்னை044-4592 8683/504ramprasadnephro@gmail.co.in