PUBLISHED ON : மார் 23, 2025

டோபமைன் என்ற வேதிப்பொருளை போதுமான அளவு நரம்பு செல்கள் சுரக்காதது தான் பார்க்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படும் நடுக்கு வாத நோய்க்கு காரணம்.
நரம்பு மண்டலம் படிப்படியாக செயலிழக்கும் இந்நோய் பற்றி ஆயுர்வேதத்தில் நேரடியான குறிப்பு இல்லை. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் வாயிலாக, மூளையின் அமைப்பு, செயல்படும் விதம், அதில் சுரக்கும் டோபமைன் உட்பட வேதிப் பொருட்கள் என்று பலவற்றையும் தெளிவாக புரிந்து கொண்டோம் என்று நினைக்கிறோம். யதார்த்தம் அதுவல்ல.
பார்க்கின்சன்ஸ் நோய்க்கு, ஆயுர்வேதத்தில்சிகிச்சை உள்ளதா என்று கேட்டால், நோயின் தன்மையை பொருத்தே சிகிச்சை என்று பதில் சொல்ல முடியும்.
இயற்கையிலேயே அவரவரின் உடல் தன்மைக்கு ஏற்ப வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களும் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டிய அளவை விடவும் எந்த தோஷம் அதிகரிக்கிறதோ, அது தொடர்பான உடல் கோளாறுகள் ஏற்படலாம். பார்க்கின்சன்சை பொருத்தவரையில் வாத தோஷம் பிரதான பங்கு வகிக்கிறது.
இருக்க வேண்டிய அளவை விடவும் வாதம் அதிகமாகும் போது, வறட்சி, உடல் இயக்கத்தில் சிரமம், திசுக்களில் மாறுபாடு ஏற்படலாம். நாளடைவில் இந்த நிலை மோசமாகலாம்.
பார்க்கின்சன்ஸ் என்றில்லை, கேன்சர் உட்பட படிப்படியாக தீவிரமடைகிற நோய்கள் அனைத்திற்கும் வாத தோஷம் தான் காரணம்.
வாதம் என்பது வெட்டவெளி, காற்று ஆகிய இரண்டின் தன்மையை உடையது. எனவே, எந்த ஆதாரமும் இல்லாமலேயே எளிதாக உடல் முழுதும் பரவக்கூடியது.
தனி நபர் வெளிப்படுத்தும் நோய் அறிகுறிகள், தோஷங்களின் தன்மையை பொருத்தே சிகிச்சை தரப்படும்.
பொதுவாக, 60 வயதிற்கு மேல் வாதம் அதிகரிப்பதாலே நரம்பு மண்டலம், எலும்பு, மூட்டு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன. இளம் வயதில் பார்க்கின்சன்ஸ் நோய் வந்தால், குணப்படுத்துவது எளிது.
துரித, பதப்படுத்திய, அதிக மசாலா கலந்த உணவுகள் சாப்பிடுவது, அதிகம் மதுப் பழக்கம் இருப்பவர்களுக்கு நரம்பு மண்டலம் செயலிழக்கும் வாதம் குறையாது. பால், மோர், பழங்கள் என்று வாயுவை கட்டுப்பாட்டில் வைக்கும் உணவுகளை சாப்பிட்டால், எளிதாக சமாளிக்கலாம்.
பார்லி தவிர மற்ற சிறுதானியங்களை அதிகமாக உணவில் சேர்ப்பது கூடாது.
கொழுப்பு அதிகரிக்கும் என்ற அச்சத்தில் நெய், தேங்காய் எண்ணெய் தவிர்க்கிறோம். இது வறட்சியை அதிகரித்து, நோயின் தன்மையை தீவிரப்படுத்தலாம். ஷிரோவஸ்தி, நஸ்யம், வஸ்தி போன்ற பல சிகிச்சைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன.
இவை, நோய் தீவிரமாகாமல் தடுப்பதோடு, நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும். 100க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மூலிகைகள், பார்க்கின்சன்ஸ் நோய்க்கு நல்ல தீர்வை தருவதாக நவீன ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.
வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் குளியல், சரியான அளவில் துாக்கம் உட்பட தினசரி செய்ய வேண்டியது, அதை பின்பற்றினாலே, டாக்டரிடம் செல்ல வேண்டிய தேவை 50 சதவீதம் குறைந்து விடும்.
டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர்
ஸ்ரீ ஹரியம் ஆயுர்வேதம், சென்னை86101 77899sreehareeyam.co.in