
பத்மா, மதுரை: கர்ப்ப பையில் நீர்கட்டிகள் உருவாவது ஏன். கர்ப்ப பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க எப்போது தடுப்பூசி போட வேண்டும்.
கர்ப்ப பையில் நீர்கட்டிகள் வருவதற்கான பாரம்பரிய காரணம் ஜீன்கள் தான். எல்லோருக்கும் அப்படி வராது. இது ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் ஏற்படும். உலகளவில் இந்திய பெண்களுக்கு தான் இந்த நீர்கட்டி பிரச்னை அதிகளவில் வருகிறது. நீர்கட்டி இருந்தால் எடை அதிகரித்தல், மாதவிடாய் பிரச்னை, கர்ப்ப பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு அதிக முகப்பரு, முகம், மார்பு, வயிறு பகுதிகளில் முடி அதிகம் வளரும். சில நேரங்களில் கருவுறுதல் கூட தாமதமாகும். சிறு வயதில் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் வரவும் வாய்ப்புள்ளது. ஹார்மோன் பிரச்னையால் ஏற்படுவதால் அதற்கான சிகிச்சை எடுப்பது நல்லது.
ஒன்பது வயது முதல் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடலாம். 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' கிருமி தான் கர்ப்ப பை வாய் புற்றுநோய் வரக் காரணம். திருமணமான பின் உடலுறவின் போது இந்த கிருமி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் திருமணத்தின் முன்பாக தடுப்பூசி போட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கர்ப்ப பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கும். முன்கூட்டியே தடுப்பூசி மூலம் தடுக்க முடிந்த ஒரே புற்றுநோய் இதுதான்.
- டாக்டர் ஹேமலேகா, மகப்பேறு மகளிர் நல நிபுணர், மதுரை
ப.செந்தில்குமார், சித்தையன்கோட்டை: குழந்தைக்கு காய்ச்சல் அறிகுறியுடன் இரவு நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும் சூழலில் என்ன முதலுதவி அளிக்கலாம்.
காய்ச்சல் ஒரு நோய் அல்ல; அறிகுறி மட்டுமே. குழந்தை சுறுசுறுப்பாகவும், நன்கு தாய்ப்பால், உணவு எடுத்து கொண்டாலும், போதிய சிறுநீர் கழித்தாலும் அச்சப்பட தேவையில்லை. மிதமான காய்ச்சலால் தீங்கு ஏற்பட வாய்ப்பு குறைவு. இரவு நேரத்தில் உடல் வெப்பம் அதிகரித்தால் துாய ஈரத்துணியால் உடலை துடைத்து வெப்பத்தை தணிக்கலாம். அவசர கால, இரவு நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காத சூழலில் பாராசிட்டமால் எடுத்து கொள்ளலாம். 6 மணிநேர இடைவெளியில் 10 முதல் 15 மில்லி கிராம் கொடுக்கலாம்.
- டாக்டர் கா.சாந்தபெரூபா, மகப்பேறு மருத்துவர், சின்னாளபட்டி
எஸ். மாதவி, கம்பம்: என் மகள் கர்ப்பமாக உள்ளார். பிரசவத்தில் சிசேரியனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.
கர்ப்பம் தரித்ததில் இருந்து சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் சீராக வைத்து கொள்ள வேண்டும் . தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால், கருவில் வளரும் குழந்தையின் எடை அதிகரிக்கும். அப்போது வேறு வழியின்றி தாயை காப்பாற்ற சிசேரியன் செய்யும் நிலை ஏற்படும். குழந்தை எடை 3.5 கிலோவிற்கு மேல் போகும் போது தாயின் இடுப்பு எலும்புகள் பிரசவத்திற்கு வளைந்து கொடுக்காது. உணவு கட்டுப்பாடு மிக அவசியம். ஜுஸ், பழங்கள், இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். உப்பும் இருக்க கூடாது. சிறுநீரில் அல்புமின் டிரேஸ் இருந்தாலும் அல்லது ஒன் பிளஸ் என இருந்தாலும் தாய்க்கு கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படும். அப்போது வேறு வழியின்றி சிசேரியன் செய்ய வேண்டியது வரும். எனவே குழந்தையின் எடை அதிகரிப்பு, தாய்சேயை காப்பாற்றவே சிசேரியன் செய்யப்படுகிறது. கர்ப்பம் தரித்ததிலிருந்து சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் சிசேரியன் தேவையிருக்காது.
- டாக்டர் பர்வீன் பேகம், மகப்பேறு சிறப்பு மருத்துவர், அரசு மருத்துவமனை, கம்பம்
அ. பாலமுருகன், சிவகங்கை: அதிகமாக மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் மூளை, மனநிலை பாதிப்பு சரி செய்ய இயலுமா.
பல வருடங்களாக அதிக மது அருந்துபவர்களுக்கு மூளையில் உள்ள பகுதி சுருங்கத் தொடங்கும். இதனால் ஞாபக மறதி, உடல் தள்ளாட்டம், அறிவுத் திறன் குறைபாடு, தசை பலவீனம், தன்னிலை இழப்பு, மாய எண்ணங்கள் தோன்றும். மன பதட்டம், மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள் தோன்றக்கூடும். இவ்வாறு தோன்றும் போது தீவிர மற்றும் நிரந்தர மனநோயாக மாற வாய்ப்புள்ளது. நீண்டநாள் மது அருந்துபவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருப்பின் டாக்டரின் ஆலோசனைப்படி மதுவை நிறுத்த வேண்டும். மனநல மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். சிகிச்சையின் போது தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
- டாக்டர் முகமது ரபி, மனநல மருத்துவர், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை