PUBLISHED ON : நவ 13, 2011
'நான் குண்டா... சராசரியா...' என்ற குழப்பமான கேள்வி, நம்மில் பலபேரின் மனதை குடைந்து கொண்டிருக்கும்.உடல்எடை, ஒவ்வொருவரின் உயரத்திற்கேற்ப, வயதுக்கேற்ப மாறுபடும் விஷயம். 4.5 முதல் 5 அடி உயரத்திற்கு 45 முதல் 55 கிலோ, ஐந்தரை அடி வரை 70 கிலோ, ஆறடி உயரம் வரை 80 கிலோ எடையிருக்கலாம். இந்த எடைக்கு மேலே, கூடுதலாக 15 கிலோ வரையிருந்தால், அது உடற்பருமன். வயிற்றுப் பகுதியின் சுற்றளவு, மார்பு சுற்றளவை விட கூடுதலாக இருந்தால், அதிக எடை எனச் சொல்லலாம் என்கிறார், மதுரை லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்
பி. வெங்கேடஸ்வரலு.
உடற்பருமனால் இருதயநோய், ரத்தக்கொதிப்பு உண்டாகும். வயிறு உட்பகுதியில் கொழுப்பின் எடையால், 'ஐ.வி.சி.,' ரத்தக்குழாய் அழுத்தப்படுவதால், மூளையின் ரத்த அழுத்தம் மாறுபட்டு, பக்கவாத நோய் ஏற்படும். உணவுக்குழாயின் அடிப்பகுதியில் உள்ள தசையில் கொழுப்பு படிவதால் 'ரிப்ளக்ஸ்' நோய் வரும். கொழுப்பு அணுக்கள் அதிகமாவதால், பித்தப்பை கற்கள் உண்டாகும். உடல் கொழுப்பு, இன்சுலின் சுரப்பை குறைப்பதால், சர்க்கரை நோய் வரும்.
மார்பகம் கனமாவதால், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும். கால்மூட்டு பாதிக்கப்பட்டும். புற்றுநோய், குழந்தையின்மைக்கும் காரணமாகிறது. என்ன காரணம்: தேவைக்கு அதிகமான கலோரிகளை, உணவில் எடுத்துக் கொள்வதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. ஒருகிலோ கொழுப்பை கரைப்பதற்கு, 8000 கலோரிகள் செலவிட வேண்டும். ஒருநாள் அரைமணி நேரம் நடந்தால், 70 கலோரிகள் தான் செலவாகும். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் எடையை கட்டுப்படுத்தலாம். உணவில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், சர்க்கரையை குறைத்து, புரோட்டீன், பழங்கள், காய்கறிகளை அதிகபடுத்தவேண்டும். டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் 'orlistat' மருந்தை, இரண்டு முதல் நான்காண்டுகள் சாப்பிடலாம். இது உடலில் கொழுப்பு சேருவதை 30 சதவீதம் தடுத்து, ஜீரணமாக்குகிறது. அதிக எடையிருந்தால், 'பேரியாட்டிக்' அறுவை சிகிச்சை மூலம், இரைப்பையின் அளவு குறைக்கப்படுகிறது. மேலும் 'பைபாஸ்' அறுவை சிகிச்சை முறையில், உணவின் வழிமுறை மாற்றப்பட்டு, ஜீரணிக்கும் தன்மை குறைக்கப்படுகிறது, என்றார்.
சந்தேகங்களுக்கு போன்: 98430 64036.
