PUBLISHED ON : ஜன 27, 2019

நம் மரபணுவில், என்ன உணவு இருக்கிறதோ, அதைத் தான் சாப்பிட வேண்டும் என்பது, 100 சதவீதம் சரி. அதற்காக, மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடக் கூடாது. நம் முன்னோர், அப்படி சாப்பிட வில்லை. இரண்டு வேளை அரிசி சாப்பிட்டு, நன்றாக உடலுழைப்பு செய்தனர்.
சிறு தானியங்களில், அரிசியை விடவும், கார்போ ஹைட்ரேட் குறைவாக உள்ளது. நார்ச்சத்து அதிகம். ஆனாலும், வெறும் சிறு தானியங்கள் மட்டும் சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று சொல்ல முடியாது.
சரிவிகித உணவு, உடற்பயிற்சி தான் எடை குறைய அவசியமானது. 8:00 மணிக்கு காலை உணவு, எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். 1:00 மணிக்கு, மதிய உணவு, முக்கால் வயிறு சாப்பிட வேண்டும். அதில், புரதம் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும், கொழுப்பு மிகக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
இரவு உணவை, 8:00 மணிக்கு முன் சாப்பிட வேண்டும். அதில், நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் இருக்க வேண்டும். நடுவில், எப்போது பசித்தாலும், காய்கறி, பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டும்.
குறைந்தது, 20 நிமிடங்கள், வாரத்திற்கு நான்கு நாட்கள், ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதோடு படிகளில் ஏறுவது, சைக்கிள் பயன்படுத்துவது என்று செய்ய வேண்டும்.
டாக்டர் பி.ராஜ்குமார் பழனியப்பன்
உடல் பருமன் சிறப்பு ஆலோசகர், சென்னை.
