PUBLISHED ON : செப் 25, 2022

எட்டு - 12 மணி நேரம் வரை தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்க வேண்டியுள்ளது. அப்படி செய்யும் போது, கழுத்துக்கு போதிய கவனம் தருவதில்லை. எந்த நிலையில் அமர்ந்து கணினியில் வேலை செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.
நேராக அமர்ந்து, கண்களின் நிலைக்கு நேரான உயரத்தில் கணினியை வைத்து பார்க்க வேண்டும். குனிந்து, நாற்காலியில் வளைந்து சாய்ந்து உட்காருவதை தவிர்க்க வேண்டும். படுத்துக் கொண்டு பார்ப்பது தவறு.நிமிர்ந்து உட்கார்ந்து, கழுத்து நேராக இருக்கும்படி கம்ப்யூட்டரை வைத்து பார்த்தால், எந்தப் பிரச்னையும் வராது. இது கழுத்துக்கு மட்டும் தான். முதுகு வலி வராமல் இருக்க, உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டும். அதிக உடல் எடையுடன் இருந்தால், அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் போது, அத்தனை எடையையும் உடல் தான் சுமக்கப் போகிறது. உட்காரும் போது நிமிர்ந்து உட்கார்ந்து, 90 டிகிரி வளைந்து இருக்க வேண்டும். வசதி, சவுகரியம் என்ற பெயரில் தற்போது தயாராகும் நாற்காலிகள், சோபா எல்லாம் வளைந்தோ, ஒரு பக்கம் சாய்ந்தோ உட்காரும் நிலையில் தான் உள்ளன. உட்காரும் இடத்தில் 90 டிகிரி வளைவு இருக்க வேண்டும். தொப்பை இருக்கவே கூடாது. தொப்பை இருந்தாலும் முதுகு வலி வரும்.இன்னொரு முக்கியமான விஷயம்...முன் காலத்தைப் போல, தற்போது நாம் யாரும் நடப்பதே இல்லை. இரண்டு கால்களோடு இறைவன் படைத்ததே, நாம் நடப்போம் என்ற எதிர்பார்ப்போடு தான். ஆனால், நடக்கும் போது தான் முதுகு தசைகள் வலிமையாக இருக்கும். நடக்காமல் இருப்பதால், முதுகு பக்கத்தில் இருக்கும் பிரதான தசைகள், காலப்போக்கில் நம் அனைவருக்கும் பலவீனமாகி விட்டன.முடிந்த வரை உட்காரும் நேரத்தைக் குறைத்து, நடந்தபடியே இருக்க வேண்டும். முதுகிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துவது உட்காரும் போது தான்.எவ்வளவு நேரத்திற்கு நடப்பது என்ற கேள்வியே இல்லை; முடிந்த வரை நடக்கலாம்.- ஸ்போர்ட்ஸ் மெடிசின், மருத்துவ இதழ்
