PUBLISHED ON : அக் 02, 2022

இதயத்தின் முக்கிய ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகள், மூன்றில் ஒரு பங்கு பேரின் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. இதய ரத்த நாள பாதிப்பு, ஆண்களை விட பெண்களுக்கு குறைவாக இருந்த போதிலும், தற்போது அதிகரித்து வருகிறது.
உலக அளவில் நடத்தப்பட்ட 'இன்டர்ஹார்ட்' ஆய்வில், பெண்களுக்கு இதய ரத்த நாள பாதிப்பு, ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வயதை விட, 10 ஆண்டுகள் கழித்து, மாதவிடாய் நின்ற பின் ஏற்படுவதாக தெரிவிக்கிறது.
சிகரெட் பழக்கம், சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு இருக்கும் பெண்களுக்கு, மாதவிடாய் நிற்பதற்கு முன்னரே பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
கடந்த 50 ஆண்டுகளில், ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு வழக்கமான, 'ஆஞ்சினா' எனும் மார்பு வலி ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை பயம், துக்கம் அல்லது மன அழுத்தத்தால் மார்பு வலி அதிகம் ஏற்படுகிறது. ஆஞ்சியோ செய்யும்போது, மார்பு வலியுடன் இருக்கும் ஆண்களை விட, பெண்களுக்கு இதய நாள பாதிப்பு குறைவாக உள்ளது.
'பிர்மிங்ஹாம் ஹார்ட்' ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், மாரடைப்பைத் தொடர்ந்து பெண்களின் இறப்பு விகிதம் 44 சதவீதமாகவும், ஆண்களில் 27 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
டாக்டர் விவேக்,
இதய நாள மருத்துவ ஆலோசனை,
சென்னை.
