PUBLISHED ON : மே 17, 2015
எலுமிச்சை, ஆரோக்கியம் மற்றும் அழகு பராமரிப்புக்கு சிறந்த மருந்தாகும். வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை, உணவு வகைகளை மணமூட்டவும், ருசியை கூட்டவும் முக்கிய இடம் பெறுகிறது. தலைமுடி, கைகள், பாதங்கள் மற்றும் உடம்பின் அழகு பராமரிப்பில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது.
சருமத்தில் ஏற்படும் நிற மாற்றங்களை எலுமிச்சை பழம் சரிசெய்யும். சருமத்தில் ஏற்படும் கொப்பளங்கள் நீங்க, எலுமிச்சை பழத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி, கொப்பளம் உள்ள இடத்தில் தேய்த்தால், அது காணாமல் போய்விடும். இது தவிர கழுத்து, தொண்டை பகுதியில் சருமத்தை மென்மையாக்க, எலுமிச்சை துண்டை தேய்க்கலாம். எலுமிச்சை சாற்றுடன் சம அளவில் சர்க்கரை கலந்து, லோஷன் தயாரிக்கலாம். அந்த கலவையை கையில் தேய்த்து நீரில் கழுவ வேண்டும்.
இப்படி தவறாமல் செய்து வந்தால், கைகள் மிருதுவாகும், நல்ல நிறமும் கிடைக்கும். உடைந்து போன நகங்களை உறுதிப்படுத்த, எலுமிச்சை சாற்றை உபயோகிக்கலாம். சாற்றைக்கொண்டு அழகு சிகிச்சைக்கு தேவைப்படும் மாய்ச்சரைசர் தயாரிக்கலாம். முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க, அரை மூடி எலுமிச்சையை முகத்தில் தேய்க்கலாம். சாறு தலையில் உள்ள பொடுகை நீக்கும்.
பாதத்தில் வீக்கம் இருந்தால் குளித்த பின் எலுமிச்சை சாற்றினால், பாதத்தை தேய்க்கவும். அதன் பின் காலை சற்று உயர்த்திய நிலையில், 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். எலுமிச்சை தோலை பயன்படுத்தி பல்லை தேய்த்தால், பற்களில் ஏற்பட்டுள்ள கறைகள் நீங்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து மவுத் வாஷ் ஆக பயன்படுத்தினால், வாய்நாற்றம் மறைவதுடன், எலுமிச்சையில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் சருமத்துக்கு புத்துணர்வு தரும்.
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், உணவுக்குழாயில் உள்ள நுண்ணுயிர்களை அழித்துவிடும் தன்மை கொண்டது. எந்த ஒரு நிலையிலும் எலுமிச்சை சாற்றை திரவமாக தான் பயன்படுத்த வேண்டும். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதில் உப்பும், மிளகு தூளும் தூவி, உறிஞ்சினால் அஜீரண கோளாறு நீங்கும். கோடை வெயில் உடலை குளிர்ச்சியூட்ட, ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு குடித்தால் களைப்பு நீங்கும். எலுமிச்சையின் பல்வேறு பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகிறது. இந்த சாறு பசியை தூண்டும் சக்தி கொண்டது.
இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். ஜலதோஷம், தொண்டைப்புண், கல்லீரல் தொந்தரவுகளுக்கும் எலுமிச்சை சிறந்த மருந்தாகும். வைட்டமின் சி பற்றாக்குறையினால் உண்டாகும் சொறி, சிரங்குகள் குணமாக, ஒரு பங்கு எலுமிச்சை சாற்றுடன், மூன்று மடங்கு தண்ணீர், போதிய அளவு சர்க்கரை அல்லது தேன் கலந்து உட்கொள்ளலாம். தொண் டை பிரச்னைகள், ஜீரணக்கோளாறு, உடல் பருமன் ஆகியவற்றிற்கு எலுமிச்சை சிறந்த மருந்தாகும். உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும் எலுமிச்சை பழத்தை உட்கொண்டால், நோய் அருகில் அண்டாது.