PUBLISHED ON : மே 11, 2016

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானவுடன், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள், என்னை அழைத்து, 'அப்பா, அம்மாகிட்ட பேசுவதற்கே பயமா இருக்கு... பெற்றோருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டேன்' என்ற குற்ற உணர்ச்சி ரீதியில் பேசுவர். தேர்வு முடிவுகளை தொடர்ந்து, அடுத்த, 10 நாட்களுக்கு இது போன்ற தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் வருவது, எனக்கு ஒவ்வொரு ஆண்டும் சகஜமாகி விட்டது. எதனால் இப்படி?
இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.பொதுத் தேர்விற்கு தங்களை சரியாக தயார்படுத்திக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து, கடைசி நேரத்தில் கடமையே என்று தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண் வந்தவுடன், அதை எதிர்கொள்ள முடியாமல் போவது, பெற்றோருக்கு பிள்ளைகள் மேல் இருக்கும் அதீத எதிர்பார்ப்பு. 'பிளஸ் 2வுல எப்படியாவது நல்ல மார்க் வாங்கிடு; அது தான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிறது' என்று, 10ம் வகுப்பு முடித்த நாளிலிருந்து சொல்லி சொல்லி மன அழுத்தத்தை ஏற்படுத்துவர். ஐ.ஐ.டி., மெடிக்கல் அல்லது பொறியியல் கல்லூரியில் சேர்த்தால், தங்கள் பிள்ளையின் எதிர்காலம் பாதுகாப்பாகி விடும் என்று நினைத்து, வீட்டில், 'டிவி' உட்பட பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தையும் நிறுத்தி விடுவர். சில பெற்றோர் அலுவலகத்திற்கே விடுமுறை போட்டு வீட்டிலேயே தங்கி, 24 மணி நேரமும், புத்தகமும் கையுமாக பிள்ளைகளை இருக்கச் செய்து, இவர்களும் அருகிலேயே இருப்பர். பள்ளிகளிலும் இதே பிரச்னை. தங்கள் பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்; மாநில அளவில், 'ரேங்க்' வாங்க வேண்டும் என்று, நன்றாகப் படிக்கும் மாணவர்கள், சுமாரானவர்கள் என்றெல்லாம் பிரித்து, அதற்கேற்றாற்போல பயிற்சி தருகின்றனர். நம்முடைய கல்வி முறையோ, மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதை அடிப்படையாகக் கொண்டது; வாழ்க்கை கல்வி என்பதே கிடையாது. 99 மார்க் வாங்கிய மாணவனுக்கும், 99.3 சதவீதம் மார்க் வாங்கிய மாணவனுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது? ஆனால், நாம் அந்த புள்ளி, 3 மதிப்பெண்ணில் இந்த மாணவனை விடவும், அந்த மாணவன் அறிவாளி என்கிறோம். இது எவ்வளவு அபத்தமான முறை.
'ரிசல்ட்' அன்று...
மாணவர்களைப் பார்த்தவுடன், 'எவ்வளவு மார்க், அடுத்து என்ன செய்யப் போறே?' என்று கேட்பதை முடிந்தளவு தவிர்த்து விடுங்கள்.
முடிவுகளைப் பார்க்கப் போகும்போது, தனியாக மாணவனை அனுப்பாமல், பெற்றோரே அல்லது நெருங்கிய உறவினர் யாராவதோ கண்டிப்பாக உடன் செல்ல வேண்டும். தேர்வு எழுதி, ரிசல்ட்டும் வந்து விட்டது. முடிவுகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அதனடிப்படையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்வோம். நீ ஒன்றும் கவலைப்படாதே என்ற ரீதியில் பெற்றோர், பிள்ளைகளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தை வாங்கிய மதிப்பெண்களை, யாருடனும் ஒப்பீடு செய்து பேசவே கூடாது. தமிழகத்தில், 2004ம் ஆண்டிலிருந்த, 'இம்ரூவ்மென்ட்' என்ற ஒருமுறை நடைமுறைக்கு வந்தபின், மாணவர்களிடையே எதிர்மறை எண்ணங்களும், செயல்களும் வெகுவாகக் குறைந்து இருக்கிறது. இன்னொரு வாய்ப்பு என்பது எல்லாவற்றிலும் உள்ளது. அதை, முதலில் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
டாக்டர் லட்சுமி விஜயகுமார்
மனநல சிறப்பு மருத்துவர்
