PUBLISHED ON : மே 11, 2016

கோடையில் சுற்றுலா செல்வது நல்லதா?
கோடை விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம் என்றே, பல குடும்பங்கள் நினைக்கின்றன. கோடை விடுமுறைக்கான மவுசே சுற்றுலா செல்வது தானே.
சுற்றுலா செல்வதற்கான இடத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
அதிகம் கூட்டம் இல்லாத, அமைதியான இடங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
பயணத்திற்கு முன் எந்தெந்த விஷயங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்?
சுற்றுலா செல்லும் இடம். எதில் பயணம் செய்யப் போகிறோம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து கொள்ள வேண்டும். பிரதான இடம் தவிர, சுற்றியிருக்கும் முக்கிய இடங்களையும் பட்டியலிட்டு குறித்து கொண்டால், நேரம் இருந்தால் அந்தந்த இடங்களுக்கும் சென்று வரலாம்.
வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கு முன், எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்?
வீட்டைப் பூட்டி கிளம்புவதற்கு முன், காஸ் இணைப்பு, மின் இணைப்பு, மோட்டார் சுவிட்ச், தண்ணீர் குழாய்கள் போன்றவை அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என, ஒருமுறைக்கு இருமுறை கவனித்த பின் பயணத்தை துவக்குவது நல்லது.
சுற்றுலாவின் போது எவ்வகை உணவுகளை உட்கொள்வது நல்லது?
வெளியிடங்களுக்கு செல்லும் போது அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. இதனால், வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்த்து, ஆவியில் வேகவைத்த உணவுகளான இட்லி, இடியாப்பம் போன்றவற்றை சாப்பிடலாம்.
பயணத்தின் போது சாதாரண தண்ணீர் பருகலாமா?
சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால், உடல்நலக் குறைபாடு ஏற்படலாம். எனவே, பாதுகாப்பான நீரை பருகுவது நல்லது.
பயணத்தின் போது நீர்ச்சத்து குறைந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும்?
நா வறட்சி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மயக்கம், தலைசுற்றல் மற்றும் வாந்தி ஏற்படலாம். எனவே ஒரு நாளைக்கு, குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகுவது அவசியம்.
சுற்றுலா செல்லும் போது என்னென்ன மருந்துகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்?
காய்ச்சல், வாந்தி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதோடு, மருத்துவரின் பரிந்துரையின்படி, வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள், வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளை எடுத்துச் செல்ல மறக்கக்கூடாது.
குழந்தைகளை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும் இடத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது?
சுற்றுலாவின் போது சுகாதாரமான தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். மிதமான வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது. அதோடு டயாப்பர் பயன்படுத்தினால், குறிப்பிட்ட இடைவெளியில் மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தொற்று ஏற்படும். முடிந்தவரை ஆவியில் வேக வைத்த உணவுகளை கொடுப்பது நல்லது.
பயணத்தின் போது எவ்வகையான ஆடைகளை அணிய வேண்டும்?
வெயில் அதிகமான இடமென்றால் பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. குளிர் அதிகமாக உள்ள இடமென்றால் ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
- ரா.விஜய் சக்ரவர்த்தி
பொதுநல மருத்துவர்
சென்னை
97513 10211

