தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/போகட்டும் புழுத்தொல்லை: யானை திப்பிலி

போகட்டும் புழுத்தொல்லை: யானை திப்பிலி

போகட்டும் புழுத்தொல்லை: யானை திப்பிலி


PUBLISHED ON : மே 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடலில் புழுக்கள் தங்கி, குடலுறிஞ்சிகளில் ரத்தத்தை உறிஞ்சி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இவை நமது உணவை மலமாக மாறுவதற்கு உதவி புரிகின்றன. இவ்வாறு புழுக்கள் நமது செரிமான மண்டலத்திற்கும், உணவு கழிவு மண்டலத்திற்கும் பேருதவி புரிந்தாலும், அளவுக்கு மீறும் பொழுது, இந்த புழுக்கள் உடலில் பலவித உபாதைகளை ஏற்படுத்துகின்றன. வட்டப்புழுக்கள், உருண்டை புழுக்கள், தட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள் என பலவகையான புழுக்கள் நமது குடலில் வசிக்கின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் இனப்பெருக்கம் செய்து, ஒருவித நிலைத்தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.



இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு, வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல், சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன. அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.



அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன. நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன. இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன. யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.



(கேள்வி-பதில்)



எனக்கு வயது 27 ஆகிறது. ஆனால் எப்பொழுது பார்த்தாலும் மன அழுத்தத்துடனேயே காணப்படுகிறேன். இது எதனால் ஏற்படுகிறது? இதற்கு என்ன செய்வது?



மன அழுத்தம் என்பது சுற்றுப்புறம், உடல் மற்றும் மனம் சார்ந்தது. தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல் மன அழுத்தத்தைக் குறைக்கும். பிரம்மி நெய்-5 கிராம் தினமும் ஒரு வேளை, அமுக்கிரா பொடி-1 கிராம் தினமும் இரண்டு வேளை சாப்பிட்டுவர புத்துணர்ச்சி உண்டாகும். அசுவகந்தா பலலாட்சாதி தைலம் என்னும் தைலத்தைக் கொண்டு, தலைமுழுகி வந்தாலும் மன இறுக்கம் குறையும்.



ஆற்று நீர் குடித்தால் மேனி அழகு பெறும்: நீரின் குணங்களை, பதார்த்த குண சிந்தாமணி என்னும் நூல் தெளிவாக விளக்குகிறது. தண்ணீர் சோதனை இல்லாத பண்டைய காலத்திலேயே, அனுபவ வாயிலாக தண்ணீரின் குணத்தை சித்தர்கள் விளக்கியுள்ளனர். சூரியன், சந்திரன் மற்றும் காற்று புகாத இடங்களில் தேங்கியுள்ள அல்லது ஊறுகின்ற நீரையும் கிருமி, துர்நாற்றம், சகதி நிறைந்த இடத்திலுள்ள நீரையும் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது. லேசாக ஊறும் சுனை நீரை குடித்தால், உப்புச்சத்து அதிகரித்து, காற்று ஊதி, வயிறு பெருக்கும். சருகுகள் விழுந்து கிடக்கும் கரையோர நீரை உட்கொண்டால் காய்ச்சல் உண்டாகும். பாசி படிந்த குளம், குட்டை நீரை குடித்தால் உடல் வலியும், பலவித நோய்களும் உண்டாகும். ஓட்டமில்லாத, தேங்கி நிற்கும் குளத்து நீரை குடிப்பதால், குடல் நோய் மற்றும் குத்தல் உண்டாகும். பயன்படுத்தாத கிணற்று நீரை உண்டால் சளித்தொல்லையும், மாசடைந்த நீரை குடிப்பதால் பித்தம் சார்ந்த நோய்களும் உண்டாகும். அதே நேரம் ஓட்டமுள்ள ஓடை மற்றும் குளத்து நீரை குடிப்பதால் வியாதிகள் உண்டாவது தடுக்கப்படும். ஆற்று நீரை குடிப்பதால் மேனி அழகுபெறும். மழை நீரை குடிப்பதால் தளர்ந்த உடல் இறுகும். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம், நீர்வளம் சிறப்பாக உள்ள இடங்களின் நீரை அருந்தினோமானால், ஆரோக்கியமாக வாழலாம் என்பதே சித்தர்களின் தீர்க்கம்.



- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us