லிப்ஸ்டிக், பெர்ப்யூமை பெண்கள் வைத்திருப்பது போல மலப் பை சுமந்தபடி வைத்தியம் பார்க்கிறேன்!
லிப்ஸ்டிக், பெர்ப்யூமை பெண்கள் வைத்திருப்பது போல மலப் பை சுமந்தபடி வைத்தியம் பார்க்கிறேன்!
PUBLISHED ON : ஏப் 10, 2011
டாக்டர் குமரேஷ் கிருஷ்ணமூர்த்தி. பலருக்கும், இவர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் என்பது தெரியும். ஆனால், அவரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து, புத்துயிர் பெற்றிருக்கிறார் என்பது அதிகம் பேருக்கு தெரியாது. மனவலிமை, ஒருவரின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் பிரகாசிக்க வைக்கிறது என்பதற்கு உதாரணமாய் திகழ்கிறார் டாக்டர் குமரேஷ்.
மிகவும் கொடிய நோயாக கருதப்படும் புற்றுநோயை, தகுந்த சிகிச்சை எடுத்தால் கட்டுக்குள் வைத்து விடலாம், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்தலாம் என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறும், அவருடைய அனுபவங்கள், அனைவருக்கும் பாடமாக அமையும் என்பதற்காக, அவருடைய பேட்டி இதோ: உங்களை பற்றி கூறுங்களேன்...
நாட்டிலேயே மிக அரிதான, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை மற்றும் நியூரோட்டாலஜி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற்ற மிகச் சிலரில் ஒருவர், டாக்டர் குமரேஷ். தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை என்பது, தைராய்டு, உமிழ் நீர் சுரப்பியில் ஏற்படும் கட்டிகள் மற்றும் தீவிரமான புற்றுநோய் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதுடன் தொடர்புடையது. நியூரோடாலஜி என்பது, காதில், வண்டு ரீங்காரம், தலை சுற்றல், ரத்தக்குழாயில் கட்டிகள், காது கேளாதோருக்கு செய்யப்படும், 'காக்லியர்' கருவி பொருத்துவது ஆகியவற்றுடன் தொடர்புடையது.
புற்றுநோய் என்றால் என்ன?: பொதுவாக, செல்கள் வளர்ந்து, சீரான முறையில் பிரிந்து, புது செல்களை உருவாக்கும். சில நேரங்களில், பழைய செல்கள் இறக்காமல், உடலுக்கு தேவையற்ற வகையில், அதிக செல்களை உருவாக்கி விடுகின்றன. அதிகப்படியாக வளர்ந்த செல்கள், சதை திரட்சியாக மாறி விடுகிறது. இதை தான் கட்டி அல்லது வளர்ச்சி
என்கிறோம். இது, அருகில் உள்ள உடல் பாகங்களை பாதிக்கிறது. மற்ற பாகங்களுக்கும் பரவி விடுகிறது.
உங்களை நோய் பாதித்துள்ளது என்பதை எப்படி கண்டறிந்தீர்கள்?: இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது, 2009,
செப்டம்பரில், என் வயிற்றில் வலி ஏற்பட்டது. உடல் எடையும் குறைந்தது. பரிசோதனைகள், எனக்கு புற்றுநோய் இருப்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், 'பயாப்சி' பரிசோதனையில், புற்றுநோய்க்கான அறிகுறிகள் இல்லை என கண்டறியப்பட்டது. ஆனால், சிறுநீர் கழிக்கும் போது, அதனுடன் மலம் வெளியேறியது. அப்போது தான், மிக மோசமான நோய் என்னை பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். அறுவை சிகிச்சை மேற்கொள்ள துணிந்தேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்தபோது கூட, என்னை பாதித்திருப்பது மிகச்சிறிய நோய் தான் என கருதினேன். எனக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் என கருதவில்லை. சிகிச்சை முடிந்த பிறகு தான், வயிற்றில், மிக அரிதான பகுதியில் எனக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. மிக அரிதான பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டதால்,'பயாப்சி'யில் கூட, புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறி இல்லை என்று முடிவு கூறப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் இதுவரை 1 சதவீதத்தினர் மட்டுமே, இது போன்று பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து அதிலிருந்து மீள்வது மிகக் கடினமாக இருந்தது. முதல் 10 நாட்களுக்கு, என் உடல் முழுவதும், மெல்லிய குழல்கள் பரவிக் கிடந்தன. சிறுநீரை வெளியேற்ற இரண்டு குழல்கள், மூக்கில் ஒரு குழல், இ.சி.ஜி., குழல்கள் என, எக்கச்சக்க இம்சை. உடலை லேசாக அசைத்தாலே கடுமையான வலி. நானும், என் குடும்பத்தினரும் சிதைந்து போனோம். நோயை கண்டறிந்ததும், அதன் நிலை என்ன என்பது தான் என் முதல் சந்தேகமாக இருந்தது. நோய் உருவான இடத்தில், அதிகமாய் வளர்ந்திருந்தது. முழு சிகிச்சையை மேற்கொள்ள துவங்கினேன். ஆறு மாதம் கீமோதெரபி மற்றும் ஒரு மாதம் கதிரியக்க சிகிச்சை. கீமோதெரபி மேற்கொள்வது, நரகத்தில் இருப்பது போல். கடுமையான குமட்டல் ஏற்படும். அதைக் கட்டுப்படுத்த, அதிக வீரியம் கொண்ட மாத்திரை சாப்பிட வேண்டும். 'கீமோ'வுக்கு தினமும் மாத்திரை, வாரத்திற்கு ஒரு முறை நரம்பில், மூன்று வாரங்களுக்கு ஒரு முறை நரம்பில் என, என் சிகிச்சை தொடர்ந்தது. கீமோ சிகிச்சையால், உடல் முழுவதும் ரத்த சொறி ஏற்பட்டு, உடை உடுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த கொடுமையுடன் நான் உயிர் வாழ வேண்டிய நிலை; அது இன்னும் தொடர்கிறது. வயிற்றிலிருந்து மலத்தை வெளியேற்ற,
உடலுக்கு வெளியே ஒரு பை (கோலோஸ்டமி) தொங்க விட்டுக் கொண்டிருப்பது தான், தற்போதைய என் நிலை.
பெண்கள், தங்கள் கைப் பையில் எப்போதும், பெர்ப்யூம், லிப்ஸ்டிக் வைத்திருப்பது போல, என் மலப் பையை சுத்தம் செய்ய துடைப்பான்கள் முதல் அனைத்தையும், என்னுடனேயே வைத்திருக்கிறேன். தினமும் மூன்று வேளை, நான் இந்த பையை சுத்தம் செய்ய வேண்டும். இதனால், வெளியிடங்களுக்கு செல்வது தடைபடுகிறது. துவக்கத்தில் மனம் வெறுத்தேன்; மன அழுத்தம் ஏற்பட்டது. பின், நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டு, தர்க்க ரீதியாக சிந்திக்க துவங்கினேன். எனக்கு ஏன் புற்றுநோய் ஏற்பட்டது? புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்பவருக்கு, புற்றுநோயின் அபாயம் அறிந்தவருக்கு, மக்களுக்கு பயம் ஏற்படுத்தும் நோய் ஏன் வந்தது? கடவுள் எனக்கு ஏதோ ஒரு தகவல் சொல்கிறார் எனப் புரிந்தது. பின், நேர்மறையான எண்ணங்களை வளர்க்க துவங்கினேன். புற்றுநோய் மற்றும் அபாயமான நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு, முன்னுதாரணமாய் விளங்க முடிவு செய்தேன். என் குடும்ப உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில், 'இன்டர்நெட்'டில் நிறைய
கட்டுரைகள் எழுத துவங்கினேன். நோயாளிகளை இழந்து விடுவேன் என்றும், என் மீது அளவுக்கு அதிகமாக கழிவிறக்கம் ஏற்பட்டு விடும் என்றும், குடும்ப உறுப்பினர்கள் கூறியதை புறந்தள்ளி, எழுத துவங்கியதும், எனக்கு மனநிறைவு ஏற்பட துவங்கியது. இப்போது, என்னை முன்னுதாரணமாக கொண்டு நிறைய பேர் பலனடைவதாக, எனக்கு நிறைய இ-மெயில்கள் வருகின்றன. தங்கள் கட்டுப்பாடுகளை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொள்வதாக எழுதுகின்றனர். அவற்றைப் படிக்கும் போது தான், என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதை நான் முழுவதுமாக உணர துவங்கினேன். என்னுடைய அடுத்த இலக்கு, புற்றுநோய், குணப்படுத்த வல்ல நோய் தான் என்பதை மக்களுக்கு எடுத்து சொல்வதே.
அடுத்த வாரம் தொடரும்.
