sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நேர்மறையான எண்ணங்கள் நம் நோயை நீக்கும்!

நேர்மறையான எண்ணங்கள் நம் நோயை நீக்கும்!

நேர்மறையான எண்ணங்கள் நம் நோயை நீக்கும்!


PUBLISHED ON : ஏப் 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2011


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மிக அரிதான இடத்தில், எனக்கு ஏற்பட்டிருந்த நோயால் எவ்வளவு அவதிப்படுகிறேன் என்பதைக் கடந்த வாரம் கூறியிருந்தேன். என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகளுக்கு, நானும் ஒரு நோயாளி என்பது தெரிந்ததால், அவர்களுக்கெல்லாம் கடுமையான அதிர்ச்சி! எனினும், என் கட்டுரையைத் தொடர்ந்து படித்து, தாங்களும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப் போவதாக உறுதி பூண்டனர். இனி, கடந்த வாரத்தின் தொடர்ச்சி...



பிஸ்டுலா (ஆசனவாய் பகுதி, தோலின் மேற்பரப்புடன் இணைவது. இதனால், ஆசனவாய் வழியே மலம் ஏறாமல், உடலின் மற்ற பகுதிகள் வழியே வெளியேறும்) அறுவை சிகிச்சையின் போது, எனக்கு அளிக்கப்பட்ட மயக்க மருந்தையும் மீறி, கடும் வலி எடுத்தது. என் அலறலைப் பார்த்து, அதிகளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, நரம்பில், சொட்டுநீர் வடிவிலும் மயக்க மருந்து அளிக்கப்பட்டது. இதனால், என் கால்கள் உணர்ச்சி இழந்தன. அதன் தாக்கம், இன்னும் கூட என் கால்களில் உள்ளது.



அறுவை சிகிச்சை செய்யப்படுபவர்களுக்கு, நெஞ்சில் சளி கட்டும். அது போல், எனக்கு சளி கட்டி, இருமல் வரும். ஆனால், முற்றிலும் குழல்களால் சூழப்பட்ட எனக்கு, இருமக் கூட முடியாது. திரும்பி படுக்கவே, ஐந்து உதவியாளர்கள் தேவைப்பட்டனர். இருமல் தொடர்ந்தது. 7ம் நாள், கடவுள் என்னை மீண்டும் புரட்டிப் போட்டார். மீண்டும், 'பிஸ்டுலா' தோன்றி விட்டது. மீண்டும் ஸ்கேன் எடுப்பது, மீண்டும் அறுவை சிகிச்சை, மீண்டும் வலி என, நடைமுறைகள் துவங்கின. வலி என்றால், சாமானிய வலி அல்ல. முந்தைய சிகிச்சையின் போது ஏற்பட்ட வலியை விட, மூன்று மடங்கு கடுமை. ஒரு மாதம், தொடர்ந்து சிகிச்சை மேற் கொண்டேன். பின், மெதுவாக உணவருந்த துவங்கினேன். உடனே, மருத்துவர்கள் என்னை வீடு செல்லுமாறு, கூறி விட்டனர். வீட்டில் என்னை பராமரிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மருத்துவமனை சவுகரியங்கள் எதுவும் வீட்டில் கிடையாது. தூங்குவதில் சிரமம், திரும்பி படுப்பதில் சிரமம். இவற்றுடன், என் குடலில் சேரும் மலத்தை, மலப்பையில் எடுத்து, அதை சுத்தம் செய்ய வேண்டிய கொடுமை.



என் மனைவி, காலையில் எழுந்ததும், முதல் வேலையாக இதை தான் செய்வார். எவ்வளவு கொடுமை... என்னை குளிப்பாட்டவும், மூன்று பேர் தேவைப்பட்டது. இதையெல்லாம் நினைத்து, தினமும் அழுதேன்; எதற்காக கடவுள் என்னை படைத்தார் என்ற கேள்வியுடன்! கடவுள் என்னை கைவிட்டு விட்டார் என்ற எண்ணத்திலிருந்து, என்னை வெளிக் கொண்டுவர, மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. ஏனெனில், அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு மாதங்களில் குடலில் சொருகி இருந்த குழல்கள் அனைத்தும், ஒன்றன் பின் ஒன்றாக கழறத் துவங்கின. மன அழுத்தத்திலிருந்து வெளிவர, என் குழந்தைகளுடன், பெங்களூரு சென்று விட்டேன். அதற்குள், இரண்டு முறை கீமோ தெரபி சிகிச்சை. வாரத்திற்கு ஒரு மருந்தும், மூன்று வாரத்திற்கு ஒரு முறை ஒரு மருந்தும் போட்டுக் கொள்ள வேண்டும். இதற்கான குழல்கள் பொருத்துவதற்கும் ஒரு சிகிச்சை. மீண்டும் வாந்தி... என் குடலிலிருந்து எழும் துர்நாற்றம், சகிக்க முடியவில்லை. உணவு இடைவேளைகளில், மலத்தை வெளியே எடுப்பதற்கான பையையும் சுத்தம் செய்ய வேண்டிய நிலை... கழிவறையில் தங்கி உணவு சாப்பிடுவது போன்ற பிரமை ஏற்பட்டது எனக்கு! என்னுடன் பணிபுரிபவர்கள் இரண்டு பேர், என்னை இரவும், பகலும் பார்த்து கொண்டனர். கீமோவில் நான் பட்ட பாடு, கதிரியக்கத்தின் போது இல்லை. ஆனால், மனதளவில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. இரண்டு சுற்று சிகிச்சையை தவிர்க்கும் நிலைக்கு, வெறுப்பு ஏற்பட்டது. யோசித்ததில், பயம் நம்மை கொன்று விடும் என்பதை உணர்ந்தேன். எனவே, நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொண்டேன். நமக்கு ஏற்பட்டுள்ள தடைகளை, கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள, நேர்மறையான எண்ணம் முக்கியம்

என்பதை உணர்ந்தேன்.



ஆம்; என் நோயும், என் குடல் அறுவை சிகிச்சையும், என்னை வெளியிடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்தினாலும், சாதாரண வாழ்க்கை வாழப் பழகிக் கொண்டேன். இப்போது, மெதுவான ஓட்டப் பயிற்சி வரை, அனைத்தையும் செய்கிறேன். ஒரே ஒரு உபாதை என்னவெனில், சில நேரங்களில் வயிற்றிலிருந்து குடல் வெளியே வந்து, மலப் பையை முட்டும். அந்நேரத்தில் அதிக உபாதையும், ரத்தப்போக்கும் ஏற்படும். சில நேரங்களில், மலப் பை தளர்ந்து போய், கீழே விழுந்து விடும். அதைக் கண்டு, மிகவும் மிரண்டு விடுவேன். இப்போது, அப்படி மிரளக் கூடாது என்று, என்னையே சமாதானம் செய்து, மனஉறுதியை ஏற்படுத்திக் கொண்டேன். ஆனால், திடீரென சோர்வு ஏற்படுவதை மட்டும் தவிர்க்க முடியவில்லை. என் கதை, பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் எனக் கருதுகிறேன். என்னை நேரில் பார்ப்பவர்கள், நான் பிறரை போல சாதாரண வாழ்க்கை வாழ்வதைக் கண்டு, ஆச்சரியப்படுகின்றனர். ஆனால், நான் இப்படி வாழவில்லை எனில், துவண்டு விடுவேன்; பயத்திற்கு பலியாகி விடுவேன். எனவே, பயத்தை விட்டொழித்தேன். இது போன்ற நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, என் கதை ஒரு பாடமாக அமையும். இதுவும் தீர்வு காணக் கூடிய நோய் தான் என்ற நினைப்பே, நமக்கு அதிகளவு தன்னம்பிக்கையை வளர்க்கும். எதிர்மறையான எண்ணங்கள், நம்மை பலவீனப்படுத்தி, நோயை, சிகிச்சையை, பக்க விளைவுகளை அதிகரிக்கச் செய்து விடும்.



'என் நோய் மீண்டும் தோன்றி விடுமோ, வாழ்நாள் முழுக்க, மலப் பையுடன் அலைய நேரிடுமோ, பக்கவிளைவுகள் தொடருமோ...' என, நான் நினைத்தபடியே காலத்தை கழிப்பது, என் தொழிலுக்கும், என் குடும்பத்துக்கும், என் பிறப்புக்கும் ஏற்றதல்ல என்ற முடிவுடன், தொடர்கிறேன் என் வாழ்க்கை பயணத்தை!



- டாக்டர் குமரேஷ் கிருஷ்ணமூர்த்தி

drkumaresh@drkmaresh.com



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us