PUBLISHED ON : ஆக 27, 2023

ஒரே ரத்த வகை, திசு உடையவரிடம் உறுப்பு தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தான் வழக்கம். உறுப்பு தானம் பெற முடியாத அவசர நிலையில், மாற்று ரத்த வகை உள்ளவரிடம் கல்லீரல் தானமாக பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்கிறோம். சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை போன்ற பிற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், வேறு ரத்த வகை உறுப்பு மாற்று, எதிர்பார்த்த பலனை கொடுக்காத நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முழு வெற்றி பெற்றுள்ளது.
ரத்த வகை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. இதில், கோடிக்கணக்கான ஆன்டிஜென் எனப்படும் தானாகவே உற்பத்தி செய்யும் நோய் கிருமிகள் உள்ளன; வேதிப் பொருட்கள் உள்ளன. 'ஏ' வகை ரத்தத்தில் உள்ளதை போன்ற ஆன்டிஜென், 'பி'யில் இருக்காது. கல்லீரலிலும் இதே போன்ற தனித்தன்மையான ஆன்டிஜென், திசுக்கள் இருக்கும்.
வேறு ரத்த வகையைச் சேர்ந்த உறுப்பை பொருத்தும் போது, அதை நிராகரிக்காமல் இருக்க, 'டி சென்ஸ்சிடைஸ்' மருந்துகள் உள்ளன. மாற்று உறுப்பை பொருத்துவதற்கு முன், 14 நாட்களுக்கு இந்த மருந்துகளை கொடுக்க வேண்டும். உடல் எடைக்கு ஏற்ப மருந்துகளின் அளவு மட்டுமே மாறுபடும். வேறு ரத்த வகை மாற்று உறுப்பை ஏற்றுக் கொள்ளும் தன்மையை, ரத்த பரிசோதனை மூலம் உறுதி செய்த பின் பொருத்துவோம். பொருத்திய 14 நாட்களுக்கு பின், தானமாகப் பெற்ற கல்லீரலை தன் சொந்த கல்லீரல் என்று உடல் ஏற்றுக்கொள்ளும். குழந்தைகள், பெரியவர்கள் என்று பலருக்கும் இந்த முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.
துவக்கத்தில் இந்த தொழில்நுட்பத்தின் வெற்றி 60 சதவீதம் இருந்தது; தற்போது 85 - 90 சதவீதம் உள்ளது. மருத்துவ தொழில்நுட்பத்தில் 90 சதவீதம் என்பது முழுமையாக வெற்றி.
டாக்டர் ஜாய் வர்கீஸ், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை
