PUBLISHED ON : செப் 24, 2017

கடந்த வாரத்தில், ஒரு தம்பதி என்னிடம் வந்தனர். கணவர் சற்றே பதற்றத்துடன் இருந்தார். 'நேற்று இரவு முழுவதும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக என் மனைவி ஆர்ப்பாட்டம் செய்தார். தூங்காமல், அவர் அருகிலேயே கவனமாக, எப்போதுடா விடியும் என்று இருந்தேன். ஏன் இப்படி, என்று எனக்குப் புரியவில்லை' என்றார்.
அவர் மனைவியிடம் தனியாகப் பேசினேன். நகரத்தில் இருந்து சற்றுத் தள்ளி, தோட்டத்தில் அவர்கள் வீடு. பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கும் ஒரு குழந்தை. காலையில் எழுந்தால், சமையல் செய்வார். கணவருக்கு, 'டிபன் பாக்ஸ்' கட்டிக் கொப்பார்; குழந்தையை பள்ளிக்கு செய்வார்.
தோட்டத்தில் வீடு என்பதால், அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை. காலை 8:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை செய்வதற்கு வேலை இல்லை; பேசுவதற்கு அருகில் யாரும் இல்லை.
திருமணத்திற்கு முன் வரையிலும் யாருடனும் சகஜமாகப் பேசிப் பழகியதில்லை. திருமணம் ஆன பின், இந்தப் பெண்ணின் மொத்த கவனமும் கணவன் மேல் இருந்தது.
கணவர் பகல் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு, வீட்டில், 'டிவி' பார்ப்பது என்று இருந்தார். திருமணம் ஆன பின், 24 மணி நேரமும் கணவனோடு பேசிக் கொண்டு, அவரையே சுற்றி வர வேண்டும் என்ற கற்பனையில் இருந்தவருக்கு, நிஜம் வேறு மாதிரி இருந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து, தான் கற்பனை செய்த பல விஷயங்கள் நிஜத்தில் இல்லை என்பது அதீத மன அழுத்தத்தைத் தர, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வீட்டில், செய்வதற்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை. வாழ்க்கையில் எந்தவித குறிக்கோளும் இல்லை. மன அழுத்தம் வருவதற்கு, இதைவிட காரணம் என்ன வேண்டும்!
தனிமையில், வீட்டிற்கு உள்ளேயே இருப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு மிக அதிகம். பிரச்னை வந்தபின், தனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை, வீட்டிலேயே இருந்தபடி செய்தாலும், மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும். குறைந்தபட்சம், தோட்டத்தில் உள்ள செடி, மரங்களோடு பேசலாம்; புதிதாக செடி நட்டு பராமரிக்கலாம். தினமும் சிறிது நேரமாவது, கணவர் இவரோடு உட்கார்ந்து பேச வேண்டும், என்று இருவருக்கும் தனித்தனியே கவுன்சிலிங் கொடுத்தேன். மூளையில் சுரக்கும் கெமிக்கலின் சமச்சீரற்ற தன்மையால், மன அழுத்தம் வருகிறது. கவுன்சிலிங் மட்டுமே இவருக்கு போதாது. எனவே, மனோதத்துவ டாக்டரிடம் மருத்துவ ஆலோசனைக்கும் அனுப்பியுள்ளேன்.
srijancounsellingservices@gmail.com

