PUBLISHED ON : அக் 01, 2017
நல்ல வளர்த்தி, ஒல்லியான தேகம். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையனைப் போல தோற்றம். என்னைப் பார்க்க அம்மாவுடன் வந்த போது பிரவீனுக்கு வயது, 18.
ஏரோநாடிக்கல் மாணவன். அப்பா இல்லை; அம்மாவிற்கு வங்கியில் வேலை. வீட்டில் அம்மாவும், பையனும் மட்டும் தான் உள்ளனர். இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. அப்பா இல்லாமல் வளரும் மகனை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது, அம்மாவின் விருப்பம்.
அதனால், மற்றவர்கள் வியப்பாக பார்க்கும் வகையில் அவனின் பொறியியல் படிப்பு இருக்க வேண்டும் என, ஏரோநாடிக்கல் படிப்பை தேர்வு செய்துள்ளார்.
கவுன்சிலிங்கிற்கு என்னிடம் வந்த போது, தலை முதல் கால் வரை அவனுக்கு எடுத்திருந்த மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட்டுகள் மட்டும், ஒரு பை நிறைய இருந்தது.
வயிறு சரியில்லை என, தொடர்ந்து பல மாதங்களாக சொன்னதால், இத்தனை டெஸ்ட்கள். பின், 'கவுன்சிலிங் போகலாம்' என, என்னிடம் வந்தனர்.
பிரவீனிடம் பேசிய போது, கல்லூரியில் சேர்ந்த சில வாரங்களிலேயே ஏரோநாடிக்கல் பிரிவில் தனக்கு ஆர்வம் இல்லை என்பது, அவனுக்கு தெரிந்து விட்டது. அம்மாவிடம் சொன்ன போது, 'ஆயிரக்கணக்கில் பணம் கட்டியாகிவிட்டது, எல்லாம் வேஸ்ட் ஆகிவிடும். நீ பாதியில் படிப்பை விட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பர்? அசிங்கமாயிடும். அதனால் படிப்பைத் தொடர வேண்டும்' என, கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
கல்லூரிக்குப் போவதில் இருந்து எப்படி தப்பிப்பது என யோசித்து, கடைசியில், யாருக்கும் தெரியாமல், ரின் சோப்பை சாப்பிட ஆரம்பித்து விட்டான். இதனால், தொடர்ந்து வயிறு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தான், என்னிடம் வந்தனர். பிரவீனிடம் பேசப் பேச வியப்பாக இருந்தது.
அவனுக்குள் நிறைய திறமைகள் ஒளிந்து இருந்தன. பள்ளியில் சிறந்த ஓட்டப் பந்தய வீரன். கற்பனை வளம் அதிகம் உள்ள அவனுக்கு, கலைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதிலேயே ஆர்வம் அதிகம். குழந்தைகளுக்கு, குறிப்பாக கல்லூரிப் படிப்பை தேர்வு செய்யும் போது, அவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அப்போது தான் அவர்களின் நுண்ணறிவு வளரும். அவர்களுக்குள் இருக்கும் திறமையை முழுமையாக வெளிப் படுத்த முடியும். ஒரு சில படிப்புகள் மட்டுமே உறவினர்கள் மத்தியில் மதிப்பை தரும் என்பதெல்லாம், நம்முடைய கற்பிதம் என்பதை, அவனின் அம்மாவிற்கு விளக்கினேன். அவனிடம் இருந்த மனஅழுத்தம் குறைய ஆரம்பித்த பின், இப்போது கலைக் கல்லூரியில் அவனுக்குப் பிடித்த பாடத்தில் சேர்ந்து உள்ளான்.
பி.இளையராஜா,
மனநல ஆலோசகர், சென்னை.
counselling0610@gmail.com

