கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - விடாத காய்ச்சலா... உஷார்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - விடாத காய்ச்சலா... உஷார்!
PUBLISHED ON : அக் 01, 2017
பல வாரங்களாக, வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. காய்ச்சல் காரணமாக, என்னிடம் வரும் நோயாளிகளில் பலர், 'டாக்டர், என்னை அட்மிட் பண்ணிடுங்க' என்கின்றனர். 'டெங்கு' குறித்த பயம் அந்த அளவிற்கு உள்ளது. டெங்கு வரும் முன் அல்லது வந்தபின், கவனமாக இருக்க வேண்டியது அவசியம்; ஆனால், பீதியடைய வேண்டியதில்லை.
தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு காய்ச்சல் குறையாமல் இருந்தால், டாக்டரின் ஆலோசனையைப் பெறுவது கட்டாயம். அதேநேரத்தில், அவசியம் இருந்தால் தவிர, மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டியதில்லை.
இதுபோன்ற சூழலில், டாக்டரின் ஆலோசனைகளைக் கேட்டு, வீட்டிலேயே இருப்பது தான் பாதுகாப்பானது. 99 சதவீதம், எல்லா வைரஸ் காய்ச்சலும் தானாகவே சரியாகிவிடும்.
இன்னும் சிலர், என்னிடம் வரும்போதே, டெங்கு பரிசோதனை செய்ததற்கான, 'ரிசல்ட்'டோடு வருகின்றனர்.
'டாக்டர், என்னோட பிளேட் லெட் எண்ணிக்கை இவ்வளவு தான் உள்ளது.
'இந்த எண்ணிக்கை இருந்தால், டெங்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்றாங்க' என, தங்களுக்கு வந்திருப்பது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சம் உள்ளது.
டெங்கு மட்டுமல்ல, வேறு சில வைரஸ் தொற்றுகளாலும், தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
சாதாரணமாக தட்டணுக்களின் எண்ணிக்கை, ஒரு மைக்ரோ லிட்டரில், 1.50 லட்சம் முதல், 4.50 லட்சம் வரை இருக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல்
காரணமாக, 50 ஆயிரம் அல்லது அதற்கும் கீழ் குறைந்தால், உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
காய்ச்சல், 100 டிகிரிக்கு மேல், உடல் வலி, உடலில் சிவப்பு நிறத்தில் திட்டுக்கள், ரத்தக் கசிவு போன்றவை, டெங்குவின் அதிதீவிர அறிகுறிகள். இதுபோன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
சில சமயங்களில் காய்ச்சல் குறைந்தபின் கூட, தட்டணுக்களின் எண்ணிக்கை குறையலாம். தட்டணுக்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்தாலும், தீவிர அறிகுறிகள் இருந்தாலும், உடனடியாக, டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டியது கட்டாயம்.
டெங்கு பாதிப்பிற்கு காரணம், பகலில் கடிக்கும், 'ஏடிஸ் ஏஜிப்டி' என்ற பெண் கொசு என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
அதிலும், காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த கொசுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். தேங்கி இருக்கும் சுத்தமான நீரில் தான் இந்த கொசுக்கள் முட்டையிடுகின்றன. வீட்டில் நீர் சேமிக்கும் தொட்டிகளை மூடி வைப்பதோடு, அடிக்கடி சுத்தம் செய்வதும் முக்கியம்.
வாட்டர் கூலர் போன்றவற்றில் வாரத்திற்கு ஒருமுறை தண்ணீரை மாற்றி விடுவதோடு, எந்த இடத்திலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் குப்பை சேர விடக் கூடாது.
கொசு மருந்து அடிப்பது, உடனுக்குடன் குப்பையை அப்புறப்படுத்துவது போன்றவற்றை, மாநகராட்சி தொடர்ந்து செய்ய வேண்டியது கட்டாயம்.
காய்கறி, பழங்களில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் என்பதால், தினசரி உணவில், குறிப்பாக, நோய் பாதிப்பு இருக்கும் சமயங்களில், நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். வைரஸ் பாதிப்பு இருந்தால், டாக்டரின் ஆலோசனையைப் பெற்று, அதை சரியாக பின்பற்றினாலே போதுமானது. வைரசை எதிர்க்கும் சக்தியை உடல் பெற்றுவிடும்.
தாய்லாந்து, பிரேசில் போன்ற டெங்கு பாதிப்பு மிக மோசமாக உள்ள நாடுகளில், தடுப்பு ஊசி உள்ளது; ஆனால், அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. நம் நாட்டில், டெங்கு தடுப்பு ஊசி பரிசோதனை நிலையில் உள்ளது. இன்னும் ஒருசில ஆண்டுகளில், வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு வரும் என்ற
நம்பிக்கை உள்ளது.
டாக்டர் சுமந்த சி ராமன்,
பொதுநல மருத்துவர். சென்னை.
sumanthcraman@gmail.com

