PUBLISHED ON : மார் 04, 2018

கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, முதியோருக்கான மனநல மற்றும் பராமரிப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறேன். சுயநலம் மிகுந்த தலைமுறையாக வாழ்கிறோம் என்பதை, அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சம்பவம் - 1
கணவரை இழந்த பெண் அவர்; ஒரு மகன், ஒரு மகள். பெங்களூரில், தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக இருந்தவர். இருவரையும், அப்பா இல்லாத குறை தெரியாமல், சகல வசதியுடன் வளர்த்தார். இருவரும் நன்கு படித்து, மகன் அமெரிக்காவிலும், மகள் சென்னையிலும், 'செட்டில்' ஆயினர்.
பணி ஓய்வு பெற்ற அம்மாவை, தன்னுடன் அழைத்து வந்தார், மகள். சில நாட்களிலேயே, சொத்துகளை தன் பெயருக்கு மாற்றச் சொன்னார். இந்தத் தகவலை மகனிடம், அம்மா சொல்ல, 'வேண்டாம்... உன்னிடமே இருக்கட்டும்; உன் காலத்திற்கு பின் தங்கைக்கு கொடு. எனக்கு எதுவும் வேண்டாம்' என்றார்.
மகள் வற்புறுத்தலின்படி, மொத்த சொத்தையும் மாற்றிக் கொடுத்தார். விளைவு... சொத்து வந்ததும், அம்மாவை பெங்களூருக்கே திருப்பி அனுப்பி விட்டார், மகள்.
அம்மாவுக்கு பக்கவாதம் வந்து, படுத்த படுக்கையாக ஆனார். படுக்கை புண் வேறு. பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால், பராமரிப்பு இல்லத்தில் சேர்ந்தார். வெளிநாட்டில் இருந்து, மருமகள் மட்டும் வந்து பார்த்தார்.
ஏழு ஆண்டுகள் இங்கேயே இருந்து, 'டிமென்ஷியா' எனும் மறதி நோயும் வந்து, இறந்த பின், அனைவரும் வந்தனர்.
சம்பவம் - 2
தொண்டையில் கேன்சர் உள்ள, 92 வயது முதியவர் அவர். உணவுக் குழாயில் பொருத்தப்பட்ட குழாய் வழியே தான், திரவ ஆகாரம் கொடுக்க வேண்டும். அவரின் தேவைக்கு ஏற்ப, பார்த்து பார்த்து உணவு தர வேண்டும்.
ஒரு கட்டத்தில், துளி கூட உணவு உள்ளே செல்லாத நிலையில், பராமரிப்பு இல்லத்தில் விட்டு விட்டனர். 11 நாட்களுக்கு பின், மெதுவாக திரவ ஆகாரம், அதன்பின் கஞ்சி போன்ற, திட ஆகாரம் சாப்பிட துவங்கினார்.
உடனே குடும்பத்தினரை வரவழைத்து, வீட்டிற்கு அழைத்துச் செல்லச் சொன்னேன்; யாருக்கும் அவரை வைத்துக் கொள்ள விருப்பமில்லை. இங்கேயே விட்டு போய் விட்டனர்.
அடுத்த, 11வது நாளில் இறந்து விட்டார். அதன்பின் வந்த குடும்பத்தினர், 'பசியால் இறக்கவில்லை என்பதில் எங்களுக்கு மன திருப்தி' என்றனர்.
சம்பவம் - 3
தெலுங்கானா மாநிலத்தில், அரசின் உயர் பதவியில் இருந்த பெண். கணவர் இளம் வயதிலேயே இறந்து விட, ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். சொந்த மகனை விட, அதிக பாசத்துடன், தத்து மகனை வளர்த்தார்.
அந்த பையனும், பெரிய கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்து, திருமணம் செய்து, அமெரிக்கா போய் விட்டான். தன்னை விட்டு மகன் போவான் என்பதை எதிர்பார்த்திராத அம்மா, அதிர்ச்சியானார்.
மன அழுத்தம் காரணமாக, உடம்பில் சில தொந்தரவுகள். இங்கே சேர்த்தனர். 'என் மகனோடு பேச வேண்டும்' என, அடம் பிடித்தார்.
என்ன செய்வது எனத் தெரியாமல், டாக்டர்களும், நர்சுகளும் அமெரிக்காவில் இருக்கும் மகன் பேசுவதைப் போல, தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு போனில் பேசினர்.
இப்படியே ஓராண்டு நடந்தது. மகன், தன்னோடு பேசுகிறான் என்ற திருப்தியிலேயே, அம்மா காலமானார்.
டாக்டர் கே.ஆர்.கங்காதரன்,
உளவியல் ஆலோசகர், ஐதராபாத்.
gangadharankr@gmail.com

