தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மனசே மனசே குழப்பம் என்ன! - பரிசோதனைகள் செய்வது மட்டும் சிகிச்சை அல்ல!

மனசே மனசே குழப்பம் என்ன! - பரிசோதனைகள் செய்வது மட்டும் சிகிச்சை அல்ல!

மனசே மனசே குழப்பம் என்ன! - பரிசோதனைகள் செய்வது மட்டும் சிகிச்சை அல்ல!


PUBLISHED ON : ஜூலை 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேன்சர் என்று உறுதியானதும், டாக்டரை சந்திக்கும் நோயாளி, அதீத பயம், பதற்றத்தில் இருப்பார். இந்த நிலையில், சிகிச்சையில் மட்டும் கவனம் செலுத்தாமல், நோயாளியின் உணர்வுப்பூர்வமான நிலையைப் புரிந்து, பாதுகாப்பு அளிப்பதும் டாக்டரின் கடமை.

'உங்களுக்கு கேன்சர்' என்று நோயாளியிடம் பக்குவமாகச் சொல்லுவதே, பல நேரங்களில், டாக்டர்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக உள்ளது.

அதே நேரத்தில், ஒவ்வொரு நோயாளிக்கும், வெவ்வேறு விதமான அணுகுமுறை தேவைப்படும்; எதை செய்தால், பலன் தரும் என்பது டாக்டருக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்; இதற்கு, நோயாளியின் நிலையில் இருந்து, புரிந்து கொள்ளும் தன்மை, நிலைமையை எளிமையாக புரிய வைக்கும் திறன் தேவை. இவை, அனுபவத்தில் மட்டுமே வரும்.

நவீன மருத்துவத் தொழில்நுட்பம் வசதியாக கிடைக்கிறது என்பதற்காக, அனைத்தையும் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பதில்லை; எந்த நேரத்தில், என்ன பரிசோதனை தேவை; எந்த நிலையில் இதை செய்கிறோம்; நோயாளிக்கு இதனால் என்ன பலன்; எவ்வளவு செலவாகும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

பரிந்துரைக்கும் மருந்துகள், பரிசோதனைகள், வர்த்தக ரீதியில் உள்ளதா என்பதையும், டாக்டர்கள் கவனமாக கண்காணித்து, நோயாளியின் நலனை மட்டும் கருத்தில் வைத்து, பரிந்துரைக்க வேண்டும்.

நோய் முற்றிய நிலையில் இருக்கும் நோயாளிக்கு, அவர்கள் வாழும் காலம் வரையில், பாதுகாப்பான, வலி இல்லாத, மருத்துவ உதவி தருவதும், ஒருங்கிணைந்த கேன்சர் சிகிச்சையின், ஒரு அங்கம்; பல நேரங்களில், இது போன்ற நோயாளிகளை, டாக்டர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதே நிதர்சனம்.

பல துறைகளைச் சேர்ந்த, மருத்துவ நிபுணர்கள் குழு இருக்கும் கேன்சர் மையங்களில் மட்டுமே, ஒருங்கிணைந்த அணுகுமுறை உள்ளது. உடனே அறுவை சிகிச்சை செய்யணும்; கீமோ கொடுக்கணும்; இல்லாவிட்டால், கேன்சர் பரவிடும் என்று அவசரப்படுத்துவதாகவும், நோயின் தன்மை என்ன என்று தெளிவாக டாக்டர்கள் சொல்வதில்லை, என்றும் பல நோயாளிகள் சொல்கின்றனர்.

டாக்டர்களின் அணுகுமுறை, 'நம் மீது அக்கறையுடன் இருக்கிறார்' என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். டாக்டருக்கும், நோயாளிக்கும் உள்ள உறவு, நம்பிக்கை, பாதுகாப்பு அடிப்படையிலானது.

ஆனால், தற்போது, பரிசோதனைக் கூடத்தில் செய்யப்படும் சோதனைகளுக்கு தரும் அளவிற்கு கவனத்தை, மருத்துவமனைகளில் டாக்டர்கள் நேரடியாக செய்யும் பரிசோதனைக்குத் தருவதில்லை. என்னிடம் வந்த கர்ப்பப்பை வாய் கேன்சர் நோயாளியை, அவரின் மகப்பேறு மருத்துவர், நேரடியாகப் பரிசோதிக்கவே இல்லை; வெறும், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பார்த்து, நோயை உறுதி செய்துள்ளார். இதை ஒத்துக் கொள்ள முடியுமா...

வாய், தொண்டைப் பகுதியில் கேன்சர் வந்த நோயாளி, 'பெட்' ஸ்கேன் சகிதம் வருகிறார்; இது அவசியம் தேவைதானா... நவீன மருத்துவ தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், அது நோயாளிக்கு நன்மை தருவதாகவே இருக்க வேண்டும். இருக்கும் எல்லா பரிசோதனையையும் செய்யச் சொல்லி, கட்டுக் கட்டாக ரிப்போர்ட்டுகளை பார்க்காமல், மனிதாபிமானத்தோடு நோயாளியை அணுக வேண்டும்.

டாக்டர் வி.சாந்தா, தலைவர்,

அடையாறு புற்று நோய் மையம்,

சென்னை.

044 - 2491 1526

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us