தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே... கொரோனாவை விரட்டியடிக்கட்டுமே...
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே... கொரோனாவை விரட்டியடிக்கட்டுமே...
PUBLISHED ON : மே 16, 2020

இன்னும் சில நொடிகளில் மரணம் நிச்சயம்! தப்பிக்க ராஜேஷ் ஓடினார்... ஓடினார்...மலை உச்சிக்கே ஓடினார். இனி, ஓடி ஒளிய இடம் இல்லை.பின்னால் கையில் பயங்கர ஆயுதங்களுடன், துரத்தும் எதிரிகள் கூட்டம். ராஜேஷ் நின்ற இடத்திலிருந்து சில அடிதுாரத்தில், அதலபாதாளம் துவங்கியது.எதிரிகள் கையில் சிக்கி, சித்ரவதைப்பட்டு, சாவதை விட, மலை உச்சியில் இருந்து குதித்து விட வேண்டியதுதான் என, கண்ணை மூடிக் கொண்டு குதித்தார்!
கட்டில் கால்களை மிதித்தபோதுதான், 'அடச்சே... அத்தனையும் கனவு' என்று உணர்ந்தார். உடல் முழுவதும் வியர்த்திருந்தது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு படுத்தார். அதன் பின் துாங்கவே முடியவில்லை. இது ராஜேஷூக்கு மட்டுமல்ல, ஊரடங்கு அறிவிப்பால் பலருக்கும் இப்போதெல்லாம், துர்சொப்பனங்கள் அதிகரித்து விட்டன. துாக்கம் தொலைந்து போனது.
ராஜேஷின் வாழ்க்கை கனவுகள்!
எல்லோரையும் போல, சாதாரண வாழ்க்கை வாழ்கிறவர்தான், 35 வயது ராஜேஷ். திருமணமாகி குழந்தை, அழகான மனைவி என, நிம்மதியாகதான் வாழ்க்கை இருந்தது. குழந்தையை நல்ல பள்ளியில், சேர்த்து படிக்க வைக்க வேண்டும், சொந்த வீடு கட்ட வேண்டும், மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும், அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு பொருளாதார உத்தரவாதம் அளிக்க வேண்டும்... இப்படி ஒரு பொறுப்பான குடும்பத்தலைவன் காணும் அத்தனை கனவுகளும், அவருக்கும் இருந்தன.
தொலைந்தது துாக்கம்!
ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக 'டிவி'யில் கொரோனா குறித்த செய்தி அளித்த பீதி, கனவு கோட்டையை தரைமட்டமாக்கி விட்டது. இப்படியே போனால், குடும்பத்தை எப்படி பாதுகாப்பது, எதிர்கால தேவைகளை எப்படி சமாளிப்பது என, மனதில் அச்சமும், கவலையும் அதிகரித்தது. இந்த கவலையால், துாக்கம் வராமல் தினசரி இரவு நெடுநேரம் கண் விழிப்பது, முற்பகல், 11:00 மணிக்கு எழுவது என, மொத்த வாழ்க்கையும் குறிக்கோள் இல்லாமல், எங்கோ சென்று கொண்டு இருப்பதாக உணர்ந்தார்.
நண்பரின் ஆலோசனையின்படி, நஞ்சப்பா ரோடு, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மனநல மருத்துவர் டாக்டர் பவித்ரா மோனியை சந்தித்தார். ''சமீபகாலமாக இது போன்ற பிரச்னைகளுடன், நிறைய பேர் கவுன்சிலிங்குக்கு வருகின்றனர்,'' என்றார் டாக்டர் பவித்ரா மோனி. கொரோனா பீதியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க, தமிழ்நாடு மனநல மருத்துவர்கள் சங்கம் நடத்தும், இலவச 'டெலி கவுன்சிலிங்' கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனா, கடந்த நுாற்றாண்டில் யாரும் எதிர்கொண்டிராதது. இதனால் ஏற்பட்டுள்ள பீதியை, 'கலெக்டிவ் டிராமா' (Collective Trauma) என்று கூறுகிறோம். இதனால் ஏற்பட்டுள்ள அச்சம், மக்களை பலவிதங்களில் பாதித்துள்ளது. மனநிலையில் அடிக்கடி மாற்றம், கோபம், எரிச்சல், நோய் குறித்த அதிக பயம், எதிர்காலம் பற்றிய கவலை, கொடும் கனவு (Pandemic Nightmare), வாழ்க்கை முறை மாறுதலை ஏற்க முடியாத நிலை ஆகியவை இதன் அறிகுறிகள்.இவையனைத்தும் உள்ளவர்களுக்கு, துாக்கமின்மைதான் முதல் பாதிப்பு. இந்தியாவில், 93 சதவீத மக்கள் துாக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். துாக்கம் வரவில்லை என்றால், பிற பாதிப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து விடும். ஆகவே, இது போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மனநல மருத்துவரை சந்திப்பது நல்லது.
துாக்கம் கொரோனாவை விரட்டும்
துாக்கத்தின்போது, உடலில் சுரக்கும் வேதிப்பொருட்கள், உடல் சீராக இயங்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. நல்ல துாக்கம், சாந்தமான மனநிலையை தரும். இவை அனைத்தும் கிடைக்கும் போது, தற்போதைய சூழலை எளிதாக கடக்க முடியும்.இவ்வாறு, டாக்டர் பவித்ரா மோனி கூறினார்.
என்னென்ன அறிகுறிகள்
எப்போதும் பதட்டமாகவே இருப்பது, அடிக்கடி காரணமே இல்லாமல் வாய் வறண்டு, தொண்டை உலர்ந்து போய்விடும். படபடப்பு, மூச்சுத்திணறல், வயிற்றில் கலக்கம், கை கால் நடுக்கம் உள்ளிட்டவை, இப்பிரச்னையின் முக்கிய அறிகுறிகள்.
துாக்கம் வர என்னதான் வழி?
தினசரி 8 மணி நேர துாக்கம் அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரம் துாங்கச் செல்ல வேண்டும். அதற்கு முன், மொபைல் போன், லேப்டாப், உள்ளிட்டவற்றை கட்டாயம் அணைத்து விட வேண்டும். புத்தகம் படிப்பது, பிடித்த இசையை கேட்பது, தியானம், மூச்சுப்பயிற்சி செய்வது உறக்கத்தை எளிதாக்கும். சத்தம் இல்லாத, வெளிச்சம் இல்லாத அறையில் உறங்க வேண்டும்.
கனவு என்பது என்ன?
'ஆசை, அச்சம் போன்றவைதான் கனவுகளாக வெளிப்படுகிறது. கனவுகளுக்கும், நிஜ வாழ்க்கைக்கும் தொடர்பு கிடையாது. உள்ளத்து ஆசை, வருத்தம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும்தான் கனவு. கனவுக்கும், உடலுக்கும் ஒரு இணைப்பு உள்ளது. நல்ல மனநிலையில் இருப்பவர்களுக்கு, நல்ல கனவுகள் வரும். அதனால், எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். கனவுகளை கொண்டு, எதிர்காலத்து உடல் நலன்களை கணிக்க முடியாது. இரவில் கனவு கண்டு எழுந்தால், கனவில் வந்த விபரங்களை எழுதி வைத்துக் கொண்டு, அதை காலையில் நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால், டென்ஷனில் இருந்து விடுபடலாம்,'' என்கிறார் டாக்டர் பவித்ரா மோனி.
டாக்டர் பவித்ரா மோனி
மன நல மருத்துவர்
87540 34043
www.psychiatristdrpavithramony.com
