PUBLISHED ON : மே 17, 2015
மலர்கள் அழகானது, வாசம் நிறைந்தது. அதை தலையில் சூடிக்கொள்ளலாம். கழுத்தில் மாலையாக அணிந்து கொள்ளலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதில் நோய் போக்கும் அரிய மருத்துவ குணம் இருப்பது பலருக்கு தெரியாது. மலரில் எந்த மாதிரியான மருத்துவ குணம் உள்ளது என்பதை பார்க்கலாம்.
ஆவாரம்பூ: ஆவாரம் பூவை உலர்த்தி, வேளை ஒன்றுக்கு, 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து பருகி வந்தால் உடல் சூடு, நீரிழிவு, நீர்க்கடுப்பு போன்ற நோய்கள் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்துக் குளித்தால் உடல் நாற்றம் நீங்கும். தோல் வியாதிகள் குணமாகும்.
அத்திப்பூ: அத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி, பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.
நெல்லிப்பூ: நெல்லிப்பூவுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட்டு வந்தால், காலையில் சுகபேதி உண்டாகும். மலச்சிக்கலுக்கும் இது உகந்த மருந்தாகும்.
செம்பருத்திப்பூ: இதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள், இந்த பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.
ரோஜாப்பூ: இந்த மலரின் மணம் மனதுக்கும், இதயத்துக்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால், நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். ரத்த விருத்திக்கு துணை செய்யும்.
வேப்பம்பூ: வேம்பு சிறந்த கிருமி நாசினி என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வேப்பம் பூவும் அப்படித்தான். வேப்பம்பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். குடிநீரில் போட்டு வடிகட்டி குடித்தால், உடல் குளிர்ச்சியாகும்.
முருங்கைப்பூ: ஆண்மையை விருத்தி செய்து, சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை முருங்கை பூவில் உள்ளது. வயிற்றுப் புண்ணை ஆற்றி, கிருமியை ஒழிக்க கூடியது.
மல்லிகைப்பூ: மல்லிகையை கண்களில் ஒத்தினால் கண் பார்வையை கூர்மையாக்கும். உணர்ச்சிகளை தூண்டும். கிருமி நாசினியாகவும் இப்பூ செயல்படுகிறது. படுக்கையில் தூவி உறங்கினால் உடல் வலி குணமாகும்.
குங்குமப்பூ: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு, 5-10 இதழ்களை, இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால், சீதளம் சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ பயன்படும்.