சைக்கிள ஓட்டுங்கள் பாஸ்... உடம்புக்கு ரொம்ப நல்லது!
சைக்கிள ஓட்டுங்கள் பாஸ்... உடம்புக்கு ரொம்ப நல்லது!
PUBLISHED ON : மே 17, 2015
சைக்கிளை இன்று ஏறக்குறைய மறந்தே விட்டோம். இன்று நம் வீடுகள் தோறும் பைக், கார்கள் இருக்கின்றன. சைக்கிள்கள் இருந்த இடத்தைத்தான் இவை இப்போது நிரப்பியிருக்கின்றன. அந்தளவுக்கு, சைக்கிள்கள் ஒவ்வொரு குடும்பத்தின் போக்குவரத்திலும் முக்கியம் இடம் பிடித்திருந்தது.
நவீனமும், அறிவார்ந்த கண்டுபிடிப்புகளும் நிறைந்த இன்றைய உலகில், ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு இடம் பெயர அதிநவீன ஊர்திகளை பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு, நாம் பயன்படுத்தி வருவதால், உடல் செயல்பாடு குறைந்து வருகிறது. கொழுப்பு சத்து அதிகரித்து, வியர்வை வெளியேறாமல் இருப்பதால், உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதால்தான், மருத்துவமனையை நாட நேரிடுகிறது. நம் முன்னோர்களின் உடல் வலிமையை, நம் உடல் வலிமையுடன் ஒப்பிடும் போது, நம் உடல் வலிமை ஆரோக்கியமானதாக இருக்காது.
பாஸ்ட்புட் உணவுகளும், மரங்களை அழித்து வருவதால் ஏற்படும் மாசுமே நம்மை ஆரோக்கியமற்ற சூழலுக்கு தள்ளியுள்ளன. மீண்டும் விலை நிலங்களை விவசாய பூமியாக மாற்றி, ஆரோக்கியத்தை தேடுவது என்பது நடக்காத காரியம் ஆகும். ஆகையால், நமக்கான ஆரோக்கியத்தை இச்சூழலிலே தேடிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், வாய்ப்பை முறையாக பயன்படுத்தி, இருக்கும் இயற்கைக்கு ஆபத்து விளைவிக்காமல், நம்மை ஆரோக்கியமாக்கி கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இதில், சைக்கிள் ஓட்டுவது என்பது, உடலுக்கு நன்மை தரும்.
30 ஆண்டுகளுக்கு முன் மணல் ரோட்டில், சைக்கிளில் சுற்றித்திரிந்த காலங்கள் தற்போது மாறிப்போயின. சைக்கிளை ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பல உண்டு.
* அவசர உலகில், சொகுசாக காரிலும், பைக்கிலும் செல்லும் போது, உடல் தசை நரம்புகள் செயல்பாடின்றி இருக்கிறது. ஆகையால், தினமும், காலையில், 20 நிமிடம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு ஈடாக அமையும். இதனால், கை,
கால் தசை நரம்புகள் இறுக்கத்தை போக்கி, இலகுவான தேகத்தை தரும்.
* உடலின் அனைத்து பாகங்களும் இயங்கும் உடற்பயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுவதுதான். இதனால் சுறுசுறுப்புடன் அன்றைய நாளின் செயலை முடிக்க உதவும். காலையில் எழுந்து, இரண்டு கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவது, 10 கி.மீ., தூரம் ஓடுவதற்கு சமம். உடம்பில் இருக்கும் கெட்ட தண்ணீரை வியர்வையாக வெளியேற்ற உதவும் ஒரே உடற்பயிற்சியும் சைக்கிள் ஓட்டுவதுதான்.
* சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை அறிந்துதான், நமது பக்கத்து நாடான சீனாவில், அலுவலகம் செல்லும் பலர் சைக்கிளில் செல்கின்றனர். சைக்கிள் செல்வதற்கென அங்கு பிரத்யேக ரோடும் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, நம் இந்தியாவிலும் இன்றே சைக்கிள் ஓட்ட துவங்குவோம்... ஆரோக்கியமாக வாழ்வோம்.