மனநலம் - மும்பையில் ஷாப்பிங்... சென்னையில் சாப்பாடு...
மனநலம் - மும்பையில் ஷாப்பிங்... சென்னையில் சாப்பாடு...
PUBLISHED ON : ஏப் 20, 2016

டில்லியைச் சேர்ந்த பீடர் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் - பி.ஐ.இ., 'மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள்' குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. சென்னையில், 650 இளம் வயதினர் உட்பட மும்பை, பெங்களூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களிடம், இந்த மனநல ஆய்வு நடத்தப்பட்டது.
இவர்கள் அனைவரும், 15 முதல் 20 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்களிடம், 'மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதில், சென்னையில் கலந்து கொண்டவர்களில், 34 சதவீதம் பேர், துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாகவும், 24 சதவீதம் பேர் தங்களுக்கு பிரச்னை இருப்பது உண்மை என ஒத்துக்கொண்டு, அதற்கு தேவையான மருந்துகளை சாப்பிடுவதாகவும், 21 சதவீதம் பேர் ஷாப்பிங் செல்வதாகவும் கூறியிருக்கின்றனர். எஞ்சியோர் புகைபிடிப்பதாக கூறுகின்றனர்.
பெங்களூரு, மும்பையை ஒப்பிடும் போது, சென்னையில் உள்ள இளைஞர்கள் படிப்பு, வேலை இரண்டிலும் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை, எந்த வகையிலும் பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாக கூறுகின்றனர். அதே சமயத்தில் தங்களின் பிரச்னைகள், மன அழுத்தம் பற்றி, குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது என்பது, எந்த மெட்ரோ நகரத்திலும் இல்லை என்றும் ஆய்வு கூறுகிறது.
மன அழுத்தத்திற்கு ரிலீப்...
சென்னையைப் பொறுத்தவரை குடும்பத்தை சார்ந்திருக்கும் தன்மை, பெங்களூரு, மும்பையை ஒப்பிடும் போது மிக அதிகம். சென்னையை விட மற்ற நகரங்களில் மன அழுத்தத்தில் இருந்து, உடனடியாக ரிலீப் தேடி, போதை, சிகரெட் பழக்கத்திற்கு
அடிமையாவதும் அதிகமாக உள்ளது.
'டீன் ஏஜ்' வயதில் உள்ளோர் வழக்கத்தை விடவும் அதிகமாக சாப்பிட்டுக் கொண்டே இருப்பது, குறிப்பாக துரித உணவுகளே, மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறி. இதுதவிர, மனநிலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றம், தற்கொலை எண்ணங்கள் போன்றவையும் மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகளே.
டீன் ஏஜ்ஜில் மன அழுத்தம் இருந்தால் ஒன்று அதிகமாக சாப்பிடுவர். அல்லது சாப்பிடவே மாட்டார்கள். பெற்றோர் இதை கவனிக்க வேண்டும். பெற்றோரிடையே ஏற்படும் சண்டை, பாலியல் ரீதியாக குடும்பத்தில் நெருக்கமானவரால் குழந்தை பாதிக்கப்படுவது, குடும்ப வன்முறைகள் உட்பட பல புற சூழல்களால் இந்த வயதில் மன அழுத்தம் வருகிறது.
மன வளர்ச்சியின்மை
ஆய்வில் தெரிய வந்துள்ள மிக முக்கியமான விஷயம், சென்னையைச் சேர்ந்த, 66 சதவீதம் பேர் மன அழுத்தத்திற்கு தற்கொலை தான்
சரியான தீர்வு என்று நினைக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல். 59 சதவீதம் பேர், தாங்கள் ஏதாவது ஒரு சமயத்தில், அதற்கான முயற்சி செய்ததாகவும்; 55 சதவீதம் பேர், தங்களுக்கு நெருக்கமானோர் தற்கொலை முயற்சி செய்தது, தங்களுக்கு தெரியும் என்றும் கூறுகின்றனர்.
தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை மற்ற நகரங்களை ஒப்பிடும்போது சென்னையில், 20 மடங்கு அதிகம்.
டீன் ஏஜ்ஜில் உடல் வளர்ச்சியை விடவும், மன வளர்ச்சி மிக குறைவாக இருக்கிறது. அதனால் இந்த தலைமுறையினருக்கு, தங்கள் பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்ற மனப் பக்குவம் இல்லை. பெற்றோர் இந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தான். அதனால் டீன் ஏஜ் பிள்ளைகளின் உடல், மன வளர்ச்சியைப் புரிந்து, தேவையான பாதுகாப்பை தர வேண்டியது அவசியம்.
டாக்டர் லட்சுமி விஜயகுமார்
மனநல சிறப்பு மருத்துவர்
