PUBLISHED ON : ஏப் 20, 2016
என் வயது 42. உடல் எடை 77 கிலோ; உயரம் 5 அடி. 10 கிலோ குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன் முடியவில்லை. சாப்பாட்டைக் குறைத்து உடற்பயிற்சி, யோகா செய்து பார்த்தும் பலன் இல்லை. உடல் எடையைக் குறைக்க பாதுகாப்பான
வழிமுறைகளை கூறுங்கள் ப்ளீஸ்?
எஸ்.சங்கீதா, கோவை
அதிக உடல் எடைக்கு தைராய்டு பிரச்னை, ஹார்மோன் பிரச்னை என்று, பல காரணங்கள் உண்டு. உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். அதனடிப்படையில், உடல் எடையை குறைக்க வேண்டும். பல பேர் புரத பானங்களை வாங்கி குடிப்பதால், ஒரே மாதத்தில், 10 முதல் 15 கிலோ குறையும் என்ற விளம்பரங்களை நம்புவது, இது தவறான வழிமுறை.
தேவைக்கு அதிகமான புரதம், பல பிரச்னைகளுக்கு வழி செய்யும். முறையற்ற சாப்பாடு, தேவையான உடற்பயிற்சி இவை தான் உடல் எடை அதிகரிக்க காரணம் என்றால், மூன்று வேளை சாப்பிடுவதை, 6 வேளையாக பிரித்து சாப்பிடுங்கள்.
அதிக பசி நேரத்தில் கார்போஹைட்ரேட் உணவை சாப்பிடுவதற்கு பதில் காய்கறி, பழங்கள் சாப்பிடலாம். தினமும், 45 நிமிடம் சீராக நடைபயிற்சி செய்யுங்கள்.
தினமும், 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதோடு, உணவில் கார்போ ஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து சத்துக்களும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் உடல் தன்மையும் தேவையும் வேறானவை என்பதால், நீங்கள் ஒரு ஊட்டச்சத்து நிபுணரை அணுகி, உங்கள் உடல் தேவைக்கு ஏற்ப உணவு முறைகளையும், உடற்பயிற்சியையும் அவரின் ஆலோசனையின் படி பின்பற்றுவது நல்லது.
திவ்யா சத்தியராஜ், நியூட்ரிஷியனிஸ்ட்
அதிகமாக வெயிலால், என், 8 வயது மகள் கறுத்து விடுவாள் என்ற பயத்தில், பகல் நேரத்தில் அவளை வெளியில் விளையாட அனுமதிப்பதில்லை. வெயில் படாமல் இருந்தால் வைட்டமின் டி உட்பட பல குறைபாடுகள் வரும் என்கிறாள் என் தோழி. உண்மையா டாக்டர்?
எம்.சித்ரா, திருப்பூர்
வளர்கிற பருவத்தில், வெயில் படாமல் இருப்பது குழந்தைகளுக்கு, பல உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். மாநில திட்டக் குழுவின் நிதியுதவியுடன் தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், 80 சதவீதம் குழந்தைகள், ஒரு நாளில் அரை மணி நேரம் கூட, வெயிலில் இருப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது. இது, 'நம் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்பட்ட பிரச்னை. அப்படியே வெளியில் விளையாடினாலும் மாலை 3:00 முதல் 5:00 மணி வரை தான் வெயிலில் விளையாடுகின்றனர்.
இந்த வேளை வெயில், போதுமான வைட்டமின் 'டி'யை உற்பத்தி செய்யாது. சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள்,
வைட்டமின் டி உற்பத்தியை தூண்டுவதற்கான சரியான நேரம் காலை, 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை தான்.
வைட்டமின் டி குறைபாடு இருந்தால் எலும்பு, பற்களில் போதிய வளர்ச்சி இருக்காது. அல்லது தாமதமான வளர்ச்சி இருக்கும். இதனால் இதயப் பிரச்னை, தொற்றுகள், புற்றுநோய், காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. வெயிலில் வேலை செய்வோரை தவிர, நம்மில் பெரும்பாலானோருக்கு போதுமான அளவு புற ஊதாக் கதிர்கள் பகல் வெயில் மேலே படுவதில்லை.
வைட்டமின் டி குறைபாடு பெண் குழந்தைகளுக்கு இருந்தால், இடுப்பெலும்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும். இது குழந்தைப் பேறு சமயத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். உணவு அல்லது மாத்திரைகள் மூலம் கிடைப்பதை விடவும் இயற்கையான வழியில் சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைப்பது தான் ஆரோக்கியமானது.
டாக்டர் எஸ்.குமுதா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்
