மனசே, மனசே குழப்பம் என்ன! - தொடர்பு எல்லையில் இருந்து விலகி...!
மனசே, மனசே குழப்பம் என்ன! - தொடர்பு எல்லையில் இருந்து விலகி...!
PUBLISHED ON : மார் 31, 2019

குரங்கிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்து உள்ளோம். குரங்காக இருந்த போது, கிளைக்குக் கிளை தாவுவதற்கு வசதியாக, கைகள் நீளமாக இருந்தன.
காலப் போக்கில், பரிணாம வளர்ச்சி அடைந்து, மனிதன், குகைகளில் வாழ துவங்கிய போது, மரங்களில் தாவ வேண்டிய அவசியம் இருக்கவில்லை; 10 லட்சம் ஆண்டுகளில், கைகள் குட்டையாகி விட்டன; உடல் முழுவதும் இருந்த முடிகள் காணாமல் போய் விட்டன. நமக்குத் எவையெல்லாம் தேவையில்லையோ, அது மறைந்து விட்டது.
குகையில் வாழ்ந்த கற்காலத்தில், காட்டுக்குப் போய், இலை, தழைகளை, 'இது நல்ல செடியா, நஞ்சா' என, முகர்ந்து பார்த்து, மருந்து எடுத்து வருவது, சாப்பாடு தேவைப்படும் நேரத்தில், அலைந்து திரிந்து, சேகரித்து வருவது, கொடிய விலங்குகள் தாக்க வருவதை துாரத்தில் இருந்தே பார்த்து தப்பிப்பது, இதற்கு நம் கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, தொடு உணர்வு, என எல்லாப் புலன்களும் கூர்மையாக இருந்தன.
தலைமுறைகள் தாண்டி வந்த போது, நம்முடைய ஐம்புலன்களை, நாம் முழுமையாக பயன்படுத்தத் தவறி இருக்கிறோம். காதால் கேட்டு, கண்ணால் பார்த்து, உணர்வுகளை வெளிப்படுத்துவது குறைந்து விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியில், நம் முன்னோர்களைப் போன்று தேவைகளுக்கான சவால் நமக்கு இல்லை; வாழ்க்கை எளிதாகி விட்டது.
புலன்களை முழுமையாக உபயோகித்து, உணர்வுகளை வெளிப்படுத்தவும், உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கும், மூளையில் இருக்கும் உணர்வு நரம்புகளின் பங்கு மிக அதிகம். ஆனால், நவீன காலத்தில், முழுமையாக பயன்படுத்த தேவையில்லா நிலை வந்து விட்டது.
அறிவியல், நம் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது; முழுமையாக அதை சார்ந்து வாழும் போது, அறிவை பயன்படுத்தி வளர்ச்சி பெற்ற அளவிற்கு, புலன்களை பயன்படுத்த தவறி இருக்கிறோம். அதனால், மூளையில் உள்ள புலன்களைத் துாண்டும் கார்டெக்ஸ் என்ற பகுதி சுருங்கி விட்டது. இதனால், வெளியில் இருப்பவைகளுடன் தொடர்பு கொள்ள முடிவதில்லை. விளைவு, ஆட்டிசம் கோளாறு.
மொபைல் போன், சிம் கார்டு எல்லாம் தயாராக இருந்தாலும், நெட்வொர்க் இல்லாவிட்டால், வெளி உலகுடன் தொடர்பு கொள்ள முடியாததைப் போல.
உதாரணமாக, காது ஆரோக்கியமாக இருக்கும்; சப்தம் கேட்கும்; காது கேட்பதில் பிரச்னை இல்லை. ஆனால், உள்ளே செல்லும் சப்தம், மூளையில் உள்ள செவியை துாண்டும் நரம்போடு தொடர்பு கொள்ளவில்லை என்றால், யார் பேசினாலும் சப்தம் கேட்கும். ஆனால் பொருட்படுத்த முடியாது.
சுற்றி இருப்பதோடு, தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், என்ன செய்ய முடியும்? தனக்குத் தானே பேசிக் கொண்டு, தன் கையையே பார்த்தபடி, இருப்பர். அந்த வகையில், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வர்.
பிறந்ததில் இருந்து, 2 வயதிற்குள் பெற்றோர் இதை கவனித்து, சரியான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அப்போது தான், ஆட்டிச பாதிப்பிற்கு பயிற்சி தர முடியும்.
ஆட்டிசத்திற்கான காரணம், மரபியலாக இருக்கலாம்; ஆட்டிசத்திற்கு இதுதான் காரணம் என்று, உறுதியாக கூற முடிவதில்லை. கருவில் உள்ள சிசுவிற்கு ஆட்டிச பாதிப்பு உள்ளதா என்று கண்டறியும் வசதி இல்லை.
தகவல் தொடர்பு சாதனங்களையே, முழுமையாக சார்ந்திராமல், மனிதர்களோடு பேசிப் பழகி, அன்பு, நம்பிக்கையை ஏற்படுத்தினால், ஒருவேளை வரும் தலைமுறையில் இந்தப் பிரச்னையைக் குறைக்கலாம்.
கூட்டுக் குடும்பத்தில், ஆட்டிசம் பிரச்னை மிகவும் குறைவு. சமூகத்தோடு ஒன்றி, அனைவருடனும் இணைந்து வாழ்வதே ஆரோக்கியம். இயற்கை அப்படித்தான் உருவாக்கி இருக்கிறது.
டாக்டர் மனு அருண், குழந்தைகள் நல மருத்துவர், ஆட்டிசம் ஆலோசகர்,
சென்னை. மொபைல்: 89399 94777
