மனசே, மனசே குழப்பம் என்ன!: தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
மனசே, மனசே குழப்பம் என்ன!: தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
PUBLISHED ON : ஏப் 14, 2019

இரவில் துாங்கி, பகலில் வேலை செய்வது, இயற்கை.இந்த சுழற்சியில், மாற்றம் ஏற்பட்டால், பல உடல், மனப் பிரச்னைகள் வரும். இரு பாலரிடமும் தற்போது அதிகரித்து வருவது, குழந்தையின்மை பிரச்னை.
துாங்கும் நேரத்தில், மாற்றம் ஏற்படுவது, இரவு முழுவதும் வேலை செய்வது, பல மணி நேரம் ஓய்வில்லாத வேலை செய்து விட்டு, தொடர்ந்து 10 - 14 மணி நேரம் துாங்குவது.
குறைந்த நேரம் மட்டும் இரவில் துாங்குவது, இரவுப் பணியில், வேலைக்கு நடுவே அவ்வப்போது துாங்குவது, இவையெல்லாமே, துாக்க ஒழுங்கின்மையைத் தரும்.
துாக்கம் இல்லாமல், தொடர்ச்சியாக பல மணி நேரம் வேலை செய்யும் போது, நரம்பு தொடர்பான ஹார்மோன், அதிக அளவில் சுரக்கும். இதில் முக்கியமானது, கார்ட்டிசால் ஹார்மோன்.
பிட்யூட்டரி சுரப்பியைத் துாண்டிக் கொண்டே இருக்கும். மெலடோனின் என்ற ஹார்மோன், இரவு நேரத்தில், நல்ல இருட்டறையில் துாங்கும் போது, அதிக அளவில் சுரந்து, நல்ல துாக்கத்தைத் தரும்.
வைரஸ் தொற்று ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரசை அழிப்பதைப் போல, இரவில், 11:00 - 5:00 மணி வரை, ஆழ்ந்து துாங்கும் போது சுரக்கும், மெலடோனின் ஹார்மோன், ஆரோக்கியமான கரு முட்டை, விந்தணு உற்பத்திக்கு வழி செய்யும்.
இரவில் சரியான நேரத்தில், துாங்காதவர்களுக்கு, இது குறைவாகவோ, அதிகமாகவோ சுரந்து, உடல் உள் செயல்பாட்டில், மாற்றங்களை ஏற்படுத்தும்.
இது தவிர, கவனக் குறைவு, மறதி, மன அழுத்தம், நினைவு இல்லாமல் போவது போன்ற பிரச்னைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
இரவு முழுவதும் வேலை செய்து, பகல் முழுவதும் துாங்கினாலும், பாதிப்பு இருக்கவே செய்யும். பகலில் வெளிச்சம் இருக்கும்; இதனால், இரவில் சுரக்கும் மெலடோனின் குறைவாகவே சுரக்கும்.
பகலில், ஆழ்த்த துாக்கம் வராது. ஆழ்ந்த துாக்கத்தில் மட்டுமே, உடல், மனம் இரண்டும் தளர்வாகி, முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்.
டாக்டர் மதுபிரியா அனந்தகிருஷ்ணன்,
மகப்பேறு மருத்துவர், சென்னை. மொபைல்: 99620 90552
