PUBLISHED ON : ஏப் 15, 2018

இது கேன்சர் மாதிரியா டாக்டர்? - வலி தந்த பயத்துடன், என் மகப்பேறு டாக்டரைக் கேட்டேன். 'இல்லை... ஆனால், கேன்சரை விடவும் வலிமையாக, இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்' என்றார் மென்மையாக.
கடந்த பத்து ஆண்டுகளாக, அனேகமாக ஒவ்வொரு நாளும், வலி, பயம், வலி வந்துவிடுமோ என்ற பீதியுடனேயே வாழ்கிறேன். வலியை முதன்முறையாக எப்போது உணர்ந்தேன் என்பது சரியாக நினைவில்லை.
பள்ளி வகுப்பிலிருந்து, ஒருமுறை தாங்க முடியாத வலியோடு, அழுதபடி வீட்டிற்கு வந்தது, உடனடியாக இன்ஜெக் ஷன் போட்டது நினைவில் இருக்கிறது. அதன்பின், 20 வயதில், ஸ்டுடியோவில், எடிட்டிங்கில் பிசியாக இருந்த இரவில், முதலில் வந்ததை விடவும் இரு மடங்கு அதிக வலி வந்தது; உறைந்து போனேன்.
அடுத்த முறை, அதிகாலை, 3:00 மணி, கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப் பகுதி பயணத்தின் போது, துாக்கத்திலிருந்து அலறியபடி எழுந்தேன்.
'எண்டோமெட்ரியோசிஸ்' என்ற வியப்பான வஸ்துவுடன் நான் வாழ்கிறேன் என்று, பத்து ஆண்டுகளுக்கு முன் உறுதி செய்யும் வரை, யாரும் சொல்லவில்லை.
என் கணவர் வெளியூர் சென்ற ஒரு வெப்பமான மதிய வேளையில், தனியாக இருந்தேன். என் வயிற்றை கூர்மையான கத்தியால் விடாமல் குத்திக் கிழிப்பது போல, உணர்ந்தேன். வயிற்றில் ஆரம்பித்த வலி கால்களில், இடுப்பில் பரவியதை உணர முடிந்தது.
அது மாதவிடாய் நாளும் இல்லை. வலியால் நிலைகுலைந்து விழுந்து, எப்படியோ சமாளித்து எழுந்து, மருத்துவமனையில், 'அட்மிட்' ஆனேன். ஸ்கேன் டெஸ்ட்டில் எதுவும் தெரியவில்லை.
என் மகப்பேறு மருத்துவர், ஒரு உடைந்த கட்டி இருப்பதை அறிந்து, 'இது எண்டோமெட்ரியோசிசாக இருக்கலாம்' என்றார். சுவாசிப்பதற்கு நான் சிரமப்படுவதைப் பார்த்து, 'உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும்' என்றார். ரத்தத்தில் தோய்ந்த சிறிய கட்டியை வெளியில் எடுத்தனர்.
அதுவரையிலும், 'எண்டோமெட்ரியோசிஸ்' என்ற வார்த்தையை நான் கேள்விப்பட்டதில்லை. என்ன காரணத்தால் வருகிறது என்று தெரியாமலேயே, உலகளவில் கோடிக்கணக்கான பெண்களுக்கு, இந்த கட்டி வருகிறது. 'லேப்ராஸ்கோப்' எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை மூலமே பொதுவாக இந்தக் கட்டியை மருத்துவர்கள் அகற்றுகின்றனர்.
எனக்கு அப்போது, 36 வயது. அதுவரையிலும் நான் செய்து வந்த ஊடகப் பணியிலிருந்து முற்றிலும் மாறி, பல புதிய இடங்களுக்கு பயணம் செய்து, அனுபவங்களை எழுதும், பயண எழுத்தாளராகி இருந்தேன். என் வாழ்க்கை முழுவதையும் இந்நோய் எடுத்துக் கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய உடம்பு பிளஸ் மனதில் வலி; தன்னம்பிக்கை போய்விட்டது.
பயணத்தில், வீட்டில் இருக்கும் போது, மாதவிடாய் சமயத்தில், திருமணத்தில் கலந்து கொள்ளும் நேரத்தில், கோயிலில், சாலையைக் கடக்கும் போது, மீட்டிங்கில், நண்பர்களை பார்க்கச் செல்லலாம் என்ற நேரத்தில், அதிகாலையில்... இப்படி எந்த நேரத்தில் வலி வரும் என்று தெரியாமல் நிலை குலைந்து, பத்து ஆண்டுகளாக வலி, அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சைகள், பயாப்சி, கருவுறுவதற்கான சிகிச்சை என்று, என் கட்டியை சுற்றியே ஒவ்வொரு நாளும் போனது.
பதற்றமும், மனஅழுத்தமும் வர, பயண எழுத்தாளரான நான், பயணம் செய்வதைத் தவிர்க்க துவங்கினேன்.
புதிய இடங்களில், அறிமுகம் இல்லாத மனிதர்கள் நடுவில், என் வலியால், காட்சிப் பொருளாக நான் விரும்பவில்லை. மனிதர்களை சந்திக்காமல் இருப்பதற்கு காரணங்களை தேடினேன்.
எனக்கு இருந்த மூன்றாம் நிலை, 'எண்டோமெட்ரியோசிஸ்' கட்டி, நான்காம் நிலைக்கு வளர்ந்தது. விளைவு, தாங்க முடியாத இடுப்பு வலி, மைக்ரேன், மலச்சிக்கல், சீரற்ற தைராய்டு சுரப்பு, வாயுத் தொல்லை என, என் உடல் பிரச்னைகளின் வரிசை நீண்டது. தொடர்ந்த உடல் பிரச்னையால், எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டேன். எல்லா விஷயங்களும் என்னை மிகவும் பாதித்தன; பலவீனமாகி விட்டேன்.
ஆயுர்வேதம் மற்றும் வேறு மாற்று சிகிச்சை முறைகளையும் முயன்று பார்த்தேன். உடம்பில் உள்ள நச்சுகளை வெளியேற்றினர். அவர்கள் ஆலோசனையில், உணவு பழக்கத்தை மாற்றினேன். மீண்டும் எனக்குள் நம்பிக்கை வந்தது.
'பயணம் செய்வதை எந்தக் காரணத்திற்காகவும் தவிர்க்கக் கூடாது' என்று கூறினர். என் வலிக்கான சஞ்சீவி மருந்தாக, அவர்கள் பயணத்தைப் பார்த்தனர்.
அதன்பின், ஒவ்வொரு பயணமும், எண்டோமெட்ரியோசிஸ் வலியிலிருந்து எனக்கு விடுதலை தந்தது. என்னுடைய சில நண்பர்கள், குடும்பம், என் வலியோடேயே என்னுடன் வாழும் கணவர்... இவர்களுக்கு நான் நிறைய கடமைப்பட்டுள்ளேன். என்னைப் போன்று வலியுடன் வாழும் பெண்கள், சமூக வலைதளங்களில் குழுக்கள் அமைத்து, பிரச்னைகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
அதில் நான் உறுப்பினரான பின் தான், இது போன்ற அமைப்பு இந்தியாவிலும் வேண்டும் என்று தோன்றியது. முகநுாலில் ஒரு குழு ஆரம்பித்துள்ளேன். வலி முதல் மாதவிடாய் வரை அனைத்தையும் இதில் பகிர்ந்து கொள்கிறோம்.
என்னுடைய அனுபவத்தை பகிர, முதலில் தயக்கமாக இருந்தது. இப்போது பகிர்ந்து கொள்கிறேன்... காரணம், எண்டோமெட்ரியோசிஸ் என்பது, நோய் என்பதை விடவும், அதீத வலி. பெண்கள் அனுபவிக்கும் தொடர் வலி, பல நேரங்களில், மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிப்பதேயில்லை.
இன்றும், எனக்கு ஒவ்வொரு நாளும் போராட்டம் தான். வலியும், பயமும் என்னை வலிமையாக்குமா... என்றாவது ஒரு நாள் வலியிலிருந்து முற்றிலும் வெளியில் வருவேன் என்ற நம்பிக்கை, பிரார்த்தனையுடன் வாழ்கிறேன்.
லட்சுமி ஷரத், பயண எழுத்தாளர், பெங்களூரு.
lakshmi.sharath@gmail.com

