PUBLISHED ON : செப் 26, 2014
'நீங்கள் சாதித்த தருணத்தைப் பற்றி எழுதுங்கள்' என, கடந்த வாரம், 'நாயகி' சொன்னது தான் தாமதம், கடிதங்களைக் குவித்து வருகின்றனர், சாதனைப் பெண்கள். இனி அவர்களே...
பிடிவாதமாய் இந்தி கற்றதால் இன்று பெருமிதமாய் இருக்கிறேன்!
நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், 25 ஆண்டாக மக்கள் தொடர்பு அதிகாரியாக, இப்போது இருப்பதற்கு காரணம், 1989ல் நான் தடை தாண்டி வென்ற தருணம் தான்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட என் சக மாணவியர், வீட்டில் பெரியவர்கள் இந்தி கற்றுக் கொள்ளக் கூடாது என்று மிக கடுமையாக எதிர்த்த போது, நான் பிடிவாதமாக ஒவ்வொரு தேர்வையும் எழுதி, தேர்ச்சி பெற்றுக் கொண்டே வந்தேன்.
நான் சனி மற்றும் ஞாயிறு காலை இந்தி வகுப்புக்கு கிளம்பும் போது, எங்
கள் வீட்டில் காபி, டீ, டிபன் என்று எதுவுமே தர தயாராக இருக்காது. எதையும் பொருட்படுத்தாமல், இந்தி படிப்பது கண்டிப்பாக பிற்காலத்தில் உதவும் என்ற எண்ணத்தோடு ஓடினேன்.
இதோ அதே இந்தி தான் என் வாழ்வாதாரம். வாழ்க்கை தரம் உயர இன்று காரணமாக இருக்கிறது.
இந்தியை தன் மொழியாகவும், தமிழை தாய் மொழியாகவும், ஆங்கிலத்தை தொழில் மொழியாகவும் கற்பது சாலச் சிறந்தது.
- ப்ளோரா, பெங்களூரு.
என் அப்பா, அண்ணன் தான்என் முன்னேற்றத்துக்கு உதவினர்! ஒரு பெண் தன்னை பற்றி அடுத்தவர் தீர்மானிக்க வைத்ததெல்லாம் அந்த காலம். இன்று, எந்த பெண்ணும் அப்பாவுக்கோ, அண்ணனுக்கோ, ஏன் கணவனுக்கோ கட்டுப்பட்டு நடப்பதை விரும்புவதில்லை.
'எனக்கு இந்த வேலை வேண்டாம்; எதிர்காலத்தில் முன்னேற வாய்ப்பு இல்லை' என்பதை சொல்ல பயந்து, ஆண்கள் மீது பழி போட்டு அவர்களுக்கு அந்த வேலை வேண்டாம் என, சொல்லி விடுகின்றனர்.
நான், பிளஸ் ௧ முடித்தவுடன், என் அப்பா என் படிப்பை நிறுத்தி திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்தார். என் பெரிய அண்ணா, அப்பாவிடம், 'பெண்ணுக்கு குறைந்தது ஒரு டிகிரியாவது வேண்டும்' எனக் கூற, அப்பா அரை மனதுடன் சம்மதிக்க, இன்று நான் ஒரு தமிழ் இலக்கியம் படித்த பி.ஏ., பட்டதாரி. என் வாழ்க்கையில் நான் பட்டதாரி ஆக உதவிய தருணத்தை ஏற்படுத்தி கொடுத்த என் பெரிய அண்ணனை இன்றும் நினைத்து கொள்கிறேன்.
-உஷா முத்துராமன், திருநகர்.

