PUBLISHED ON : செப் 26, 2014
'நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், பார்க்கும் தாவரம், ரசிக்கும் பறவை, உண்ணும் உணவு இவற்றோடு, நாம் அணியும் அணிகலன்களையும், ஆத்மார்த்தமான உணர்வோடு அணுகினால், நம் வாழ்வு மிக அழகாக மாறும்.
இந்த வார்த்தைகள், நாம் அணிகின்ற எந்த அணிகலன்களுக்கு பொருந்துகிறதோ, இல்லையோ... கண்டிப்பாக கால் பெருவிரலுக்கு, அடுத்த விரலில் வட்ட வளையமாக அணிகின்ற மெட்டிக்கு பொருந்தும். மெட்டி விரலுக்கு, அடுத்த விரலில் அணிவது மிஞ்சி, அதற்கும் அடுத்த விரலில் அணிவது வெற்றிலை பில்அணி (பில்லணி) என்று குறிப்பிடப்படுகின்றன.
வீட்டில் வளைய வளைய வந்த பெண், வளையம் போல் உருண்டு வேறொரு
வனுக்கு இல்லாள் ஆகும் தத்துவம் தான், மெட்டிக்குச் சொல்லப்படுகிறது.
மெட்டி - பெற்றோரால் மணநாள் அன்று அணிவிக்கப்பட வேண்டும்.
மிஞ்சி - மணமகனின் தாய்மாமன், மணநாள் அன்று போட்டு விட வேண்டும்.
வெற்றிலைபில் அணி - மணமகன், மணமகளின் காலைப்பிடித்து அணிவிக்க வேண்டும்.
மற்ற நகைகளைப் போலவே, (நெத்திச் சூடி தவிர்த்து) இந்த கால் விரல் வளையமும், முன்பு ஆண்கள் தான்
அணிந்திருந்தனர்.
திருமணமான ஆண்கள், கால் விரலில் அணிந்திருக்கும் மெட்டியை, குனிந்த தலை நிமிராமல் நடந்து வரும் பெண்கள் பார்த்தவுடன், இவன் திருமணம் ஆனவன் என்பதை உணர்ந்து விலகிச்
செல்வதற்காகவாம்.
திருமணமான பெண்கள், குனிந்த தலை நிமிராமல் நடந்து வரும் போது, அவள் தலை உச்சி நெற்றியில் வைத்திருக்கும் குங்குமத்தை பார்த்து, அதற்கு மேல் ஆண்கள், அந்த பெண்களை உற்று நோக்க மாட்டார்களாம்.
இதெல்லாம், நாம் சமுதாய கட்டுப்பாட்டுகளுடன் நாகரிகமாக, ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று, நல்வழியில் நெறிப்படுத்துவதற்காக, நம் பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்த நியதிகள். இதை, 'மூடநம்பிக்கை... திருமணம் முடிந்த பெண்ணை தாலி கட்டிக்கோ, மெட்டிப் போட்டுக்கோ, தலைவகிட்டில் குங்குமம் வச்சுக்கோ என்று, இந்த சமுதாயம் அடிமைப்படுத்து
கிறது' என்று, பெண்ணியம்
பேசுபவர்களும் உண்டு.
அதற்காக தான், முன்னோர், அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் நாம் அணிகின்ற நகைகளை தொடர்புபடுத்தி வைத்துள்ளனர்.
கால் விரல்களின் நரம்பிற்கும், பெண்ணின் கருப்பை நரம்பிற்கும் தொடர்பு உள்ளது. வெள்ளி உலோகத்திலிருக்கும் காந்த சக்தி, கால் நரம்பிலிருந்து, உடலில் ஊடுருவி சில கர்ப்ப கால
பிணிகளை தீர்க்கிறது.
மசக்கையினால் ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்த, கால் விரல்களை அடிக்கடி அழுத்தி 'மசாஜ்' செய்ய வேண்டும். நம்மால் செய்ய முடிவதில்லை. அதனால், பெரியவர்கள் கண்டுபிடித்த, ஒரு கட்டாய பயிற்சி தான், கால் விரலில் வளையம் போடுவது. நடக்கும் போது, விரல் நரம்பு அழத்தப்பட்டு, காந்த சக்தி உடலில் கூடுகிறது.
அனைத்து வயதினரும், இரு கால் விரல்களிலும் வளையம் போல் அணிந்து கொள்வது, வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. முக்கியமாக, வயதுக்கு வந்த பெண்களின் (மாதவிடாய்) சுழற்சி சீரான முறையில் செயல்படும் என, வேதங்கள்
தெரிவிக்கின்றன.
மெட்டிகளில் ஒலி எழுப்பக் கூடிய மெட்டிகள், பல நிற கிறிஸ்டல் கற்கள் பதிக்கப்பட்ட மெட்டிகள், டிசைன் மெட்டிகள், வளைய வடிவ மெட்டிகள், சாதாரண வெறும் வளையங்கள் என, பலவகை மெட்டிகள் தற்போது கிடைக்கின்றன.
தங்கள் தோற்றத்தைப் பற்றி பொருட்
படுத்தாது, விருப்பப்படி, மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பெண்கள் கூட, சரித்திர காலத்திலும் சரி, இன்றைக்கும் சரி, தன் உடல் ஆரோக்கியத்திற்காக மெட்டி அணிய முன்வருவர்.
-வைத்தீஸ்வரி

