தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/மன வேற்றுமையை உருவாக்கும் வியர்வை

மன வேற்றுமையை உருவாக்கும் வியர்வை

மன வேற்றுமையை உருவாக்கும் வியர்வை


PUBLISHED ON : டிச 29, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 29, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வியர்வை நாற்றம்... ஒரே கப் அடிக்குது...! நீ குளிச்சியா இல்லையா...!' என, சக நண்பர்களின் கேலி கிண்டல். 'ஏங்க...! எப்பவும் ஒரே வியர்வை நாற்றமாக இருக்குது... ஏதாவது டாக்டரை போய் பாருங்கள்..!' என்ற மனைவியின் ஆதங்கம்... நட்பு மற்றும் உறவு வட்டத்தை பிரித்து, மனத்தாங்கலை ஏற்படுத்துவது வியர்வை.

சமூக நிகழ்வுகளில் சாதாரணமானது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், மிகவும் மனச்சோர்வு அடைந்திருப்பர். வாசனை திரவியங்கள் உபயோகிக்க துவங்குவர்.வியர்வை சுரப்பிகளில் இரண்டு வகைகள் உண்டு. உடல் முழுதும் இருக்கும் வியர்வை சுரப்பிகள், வியர்வை மட்டும் சுரக்கும். மற்றொரு வகையில், தலை, அக்குள், பிறப்புறுப்பு போன்ற இடங்களில் மட்டும் சுரக்கும். இந்த வியர்வை சுரப்பிகள், எண்ணெய் சுரப்பிகள் சேர்ந்து, மயிர்கால் வழியாக வியர்வை சுரக்கும்.

வியர்வையின் பணி

உடலில் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்வது, வியர்வை சுரப்பிகளின் வேலை. மேலும், உடலில் ஏற்படும் கழிவு பொருட்களை, சீறுநீரகங்களின் வழியே வெளியேற்றுவதும், இதன் வேலை தான். தாது உப்புகள், உடலில் உள்ள நச்சுகள், வியர்வையில் வெளியேற்றப்படும்.வியர்வை, வெயில் காயும் போது, வெண்மையாக உப்பு படர்வதை, அனைவரும் உணரலாம். வியர்வையின் பணிகளை, ஆளுமை செய்வது மூளையும், நரம்புகளும் தான். எனவே, ஒவ்வொருவரின் உடல் இயக்கத்தை மையமாக கொண்டும், மனதை மையமாக கொண்டும் வியர்வை சுரக்கிறது.வியர்வையின் தன்மைகள், ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒரு சிலர், சிறிய வேலை செய்தாலோ, மனம் பயம் ஏற்பட்டாலோ, வியர்வையில் குளித்தது போல மாறிவிடுவர். ஒரு சிலர், எனக்கு வியர்வையே வராது என்று கூறுவதையும் கேள்விப்பட்டிருப்போம். ஒரு சிலர் முகத்தில், தலையில், மார்பில், உள்ளங்கால்களில் மட்டும் அதிகமாக வியர்க்கும். அலுவலகத்திற்கு வந்து அமர்ந்தவுடன், ஒரு சிலர் வியர்த்து, விறுவிறுத்து அமர்ந்திருப்பதை பார்த்திருக்கலாம். ஒரு சில மாணவர்கள், உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை அதிகமாகி, தேர்வு எழுதும் போது அவதிப்படுவர். விடைத்தாள் நனைந்து விடுகிறது என, மாணவர்கள் பெற்றோரிடம் முறையிடுவதை கவனித்திருக்கலாம்.

வியர்வை வாசனை

பொதுவாக, வியர்வைகளின் வாடை, அனைவராலும் சகித்துக் கொள்ளும்படி இருக்கும். ஆனால், ஒரு சிலருக்கு, வியர்வை துர்நாற்றுதுடன் இருப்பது உண்டு. இதற்கு அடிப்படை காரணம், சருமத்தில் இருக்கும் நோய் கிருமிகள் மற்றும் ஒரு சில நோய்களின் வெளிப்பாடு. ஒருவர் காய்ச்சலில் படுத்திருக்கும் போது தோன்றும் வியர்வை வாடை, நோய் கிருமிகளின் கழிவுகளில் இருந்து வருவது. இதனால் தான், துர்நாற்றுத்துடன் வெளிப்படுகிறது. சிலர், வியர்வையை தடுக்கும் மருந்துகளை, கடைகளில் வாங்கி உபயோகிக்கின்றனர்; வாசனை திரவியங்களையும் பயன்படுத்துபவர்கள் உள்ளனர்.

வியர்வை நிறமற்றது. ஆனால், ஒரு சிலருக்கு வியர்வை மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒரு சிலருக்கு, அணியும் துணிகள், உள்ளாடைகள் மஞ்சள் நிறத்தில் மாற, வியர்வை காரணமாக இருக்கும். ஒரு சிலருக்கு, வித்தியாசமாக, ஒரு பகுதியில் மட்டும் வியர்வை ஏற்படும். 'இதோ பாரு... மூக்கில் வேர்க்கிறது... கோபம் வருது...!' என்று, மனதுடன் ஒருமைப்படுத்தி பேசுவதை கேட்டிருக்கலாம். காய்ச்சல் ஏற்பட்டால் ஏற்படும் வியர்வை, 'சூடாக' இருக்கும். அதுவே மனப்பயம், மயக்கம் ஏற்படும் போது, குளிர்ச்சியாக இருக்கும். அதுவும், ஒரு நபர் மரண படுக்கையில் இருக்கும் போது, சருமம், 'களிமண்' போல காட்சியளித்து, குளிர்ந்த வியர்வை அரும்புகள் தென்படும். அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்று அறிவுறுத்தும் வியர்வை இது.

உடல் இயக்க கோளாறுகளான உடல் பருமன், ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, துாங்கும் போது வியர்வை ஏற்படும். அக்குள், பிறப்புறுப்புகளில் தோன்றும் எண்ணெய் பசையுடன் கூடிய வியர்வைக்கு, ஆண், பெண் இருபாலருக்கும், பால் உணர்வை துாண்டும் சக்தி உள்ளது. இது விலங்கினங்களில், அதிகமாக இருக்கும். இதன் அடிப்படையில் தான், ஆண், பெண் இருபாலருக்கும், பிரத்யேக வாசனை திரவியங்கள் விற்பனை செய்யப்படுவதை, விளம்பரங்களில் பார்க்கலாம்.

பசி

உடலின் இயக்கம் சீராக இருக்கிறது என்பதை அரிய வைப்பது, பசி உணர்வு தான். எனவே தான், 'பசி நன்றாக இருக்கிறதா?' என, மருத்துவர்கள் கேட்பர். அடுத்த கேள்வி, 'மன நலம் எப்படி?' என்ற கேள்வி மூலம், சிறுநீரகங்களும், உணவு உபாதைகளும் நன்றாக வேலை செய்கிறது என, அறிந்து கொள்வர். ஆனால், ஹோமியோபதி மருத்துவத்தில் மட்டுமே, 'உங்களுக்கு வியர்வை அதிகப்படுமா?' என, கூடுதல் கேள்விகளை கேட்பர். மேலும், முழுமையாக வியர்வையின் தன்மைகளை கேட்டறிவது, உடல் இயக்கம் எப்படி உள்ளது என்பதை அறிவதற்காக தான்.ஒரு சிலர், 'என் உடம்பு சூடாக இருக்கிறது...' என குறிப்பிடுவது, வேடிக்கையாக தோன்றும். ஆனால், இதற்குள்ள அர்த்தம் பல உண்டு.இவர்கள், இயல்பாக நரம்பு மண்டலத்தின் துாண்டுதல் காரணமாக, 'துருதுரு'வென இருப்பர். சிந்தனைகள் விறுவிறுப்பாக இருக்கும்.ஏதாவது சாதிக்க துடிப்பர். ஆனால், 'குளிர்ந்த உடம்பு' இருப்பவர்கள் 'ஏனோ தானோ' என இருப்பர். பணியை முழுமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பர். இதுபோன்ற வித்தியாசமான கருத்துக்களுக்கு, ஹோமியோபதி மருத்துவர்கள் முக்கியத்துவம் கொடுப்பர். அதோடு மட்டுமல்லாமல், தாகம், துாக்கம், இவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுப்பர்.பள்ளியில் படிக்கும், 15 வயது மாணவனுக்கு, முகத்திலும், கைகளிலும் புறங்கை பகுதியில் ஏற்பட்ட மருக்களுக்கு, ஹோமியோபதி சிகிச்சை பெற அணுகினர்.அவர், உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் அதிகமாக வியர்ப்பதை கூறினார். தான் தேர்வு எழுதும் போது, கையில் கைக்குட்டை வைத்து, துடைத்துக் கொண்டே எழுதுவதாகவும், இல்லையென்றால், விடைத்தாள் நனைந்துவிடுவதாகவும், தான் தனது தனித்திறமையை காட்ட முடியாமல் வியர்வையால் தவிப்பதாகவும் கூறினார்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

'மரு' என்ற நோய்க்குறி, 'வியர்வை' என்ற உடல் குறி மற்றும் மனக்குறிகள் அடிப்படையில், அந்த ஹோமியோபதி மருந்து அளிக்கப்பட்டது. மருக்களும் மறைந்து விட்டன. வியர்வையும் குறைந்துவிட்டது. ஒரு பெண்ணுக்கு, மாத விடாய் கோளாறு. அவருக்கு கருப்பையில் கட்டிகள் இருப்பதாக, மருத்துவர்கள் கூறினர். அவர் மருத்துவ ஆலோசனை பெற வந்த போது, உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தார். அவருடைய வியர்வை சகிக்க முடியவில்லை என, அனைவரும் கூறுவதாக கூறினார். தனக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆவாதாகவும், விவகாரத்து பெற நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மிகுந்த மனஉளைச்சலில் காணப்பட்டார். அவருக்கு, வியர்வையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மருந்து, மாத விடாய் கோளாறுகளை சீராக்கியது. கருமுட்டை கட்டிகளும் காணவில்லை. வியர்வையின் தன்மையும் மாறிவிட்டது. மனநலத்திலும், மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.

இதிலிருந்து, நோயின் அறிகுறிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், உடல் அறிகுறிகள், மன அறிகுறிகள் அடிப்படையில் மருந்துகள் வழங்கினால், முழுமையான குணம் கிடைக்கும். ஒரு நோய், உடலில் மெதுவாக தோன்றும் போது, நம் உடலின் மைய இயக்கங்களான பசி, தாகம், மலம், சிறுநீர், வியர்வை என, மாற்றத்தை கொடுக்க மூளை பிறப்பிக்கும் உத்தரவுகள், உடல் குறிகளாக ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தோன்றும். அதே போல, மன அளவில் கோபம், தாபம் என, மனக்குமுறல்களை வெளிப்படுத்தும். ஹோமியோபதி சிகிச்சையில், இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க காரணம், உடல் தன்னைத் தானே தயாராக்கிக் கொண்டு, நோய் எதிர்ப்பு ஆற்றலை உடலில் ஏற்படுத்த தான். இதுவே முழுமையாக குணம் அளிக்கும். இது பல்வேறு நோய்களுக்கும் பொருந்தும்.

டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம்

ஹோமியோ டைம்ஸ்

மருத்துவ இதழ், சென்னை

044 2811 3300

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us