PUBLISHED ON : நவ 25, 2012

ஒருவர் புகை பிடிப்பது எவ்வளவு ஆபத்தானதோ, அவ்வளவு ஆபத்தானது, கொசுவர்த்திச் சுருள்களை பயன்படுத்துவது. பல ஆண்டுகளாக நாம் இதை பயன்படுத்தி வருவதால், குழந்தைகளுக்கும், நமக்கும், ஆஸ்துமா போன்ற பல பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கொசுக்களை விரட்டும் கொசுவர்த்திச் சுருள் மற்றும் எலக்ட்ரானிக் லிக்குடேட்டர் போன்றவை, நம் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துமா? - சரவணன், சிவகாசி
மலேரியா, 'டெங்கு' போன்ற நோய்கள் வர, கொசுக்கள் காரணமாக உள்ளன. அவற்றை அழிப்பது முக்கியமே. ஆனால், அதற்காக நாம் வீடுகளில் பயன்படுத்தும், கொசுவர்த்திச் சுருள், எலக்ட்ரானிக் லிக்குடேட்டர் போன்ற சாதனங்கள், நச்சுத் தன்மை கொண்டவை. அவை, கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை; நம் நுரையீரலையும் பாதிக்கின்றன.
ஒருவர் புகை பிடிப்பது எவ்வளவு ஆபத்தானதோ, அவ்வளவு ஆபத்தானது, இந்த கொசுவர்த்திச் சுருள்களும். இதை நாம், தொடர்ந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இதனாலேயே, நம் குழந்தைகளுக்கும், நமக்கும், ஆஸ்துமா போன்ற பல பின்விளைவுகள் ஏற்படலாம். எனவே, கொசுக்களிடம் இருந்து நம்மை பாது காக்க, கொசு வலைகள், உடலில் பூசிக் கொள்ளக் கூடிய கிரீம்கள் பயன்படுத்துவது நல்லது.
என் மகன் வயது, 25. உடல் பருமனாக இருக்கிறான். இதனால், நுரையீரலில் பாதிப்பு ஏற்படும் என, அறிந்தேன். எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது? - கார்த்திகேயன், நெய்வேலி
உடல் பருமன், பல வியாதிகளுக்கு காரணமாக உள்ளது. இந்தியாவில், பல கோடி பேர், உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். இதனால், ஆஸ்துமா, மாரடைப்பு, மூட்டுவலி, குறட்டை விடுதல், காலில் வீக்கம் போன்ற, பல வியாதிகள் ஏற்படுகின்றன.
உடல் பருமன், கட்டுப்படுத்தக் கூடியதே. சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இன்று பல குழந்தைகள், கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவதால், ஓடி, ஆடி விளையாடுவது குறைந்து கொண்டே போகிறது. நம் உயரத்திற்கு ஏற்ப, நம் உடல் எடை இருப்பது அவசியம். அதற்கு, அன்றாட வாழ்வில் நல்ல உணவு பழக்கம், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இன்றியமையாதது. இதனால், நம் உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆகையால், பிற்காலத்தில் வரக்கூடிய ஆஸ்துமா, குறட்டை போன்ற நுரையீரல் நோய்களை தவிர்க்க, உங்கள் மகன் உடல் எடையை கட்டுப்படுத்துவது அவசியம்.
எனக்கு, 45 வயதாகிறது. பல ஆண்டுகளாக மூச்சுத் திணறல் உள்ளதால், தினமும் 'இன்ஹேலர்' பயன்படுத்தும்படி டாக்டர் கூறுகிறார். ஆனால், மூச்சுத் திணறல் இருக்கும் நாட்களில் மட்டும், இன்ஹேலர் பயன்படுத்துகிறேன். இது சரியான மருத்துவ முறையா? - இளங்கோவன், மதுரை
மூச்சுத் திணறலுக்கு, தினமும் இன்ஹேலரை பயன்படுத்த வேண்டும். நம் சுவாசப் பாதையில் ஏற்படும் சுருக்கம் மற்றும் வீக்கத்தால், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மூச்சுத் திணறல் இல்லாத நாட்களிலும் கூட, சுவாசப் பாதையில் சுருக்கமும், வீக்கமும் இருக்கும். நுரையீரலுக்குள் இருக்கும் சுருக்கம் மற்றும் வீக்கத்தின் பாதிப்பு, பல நேரங்களில் நமக்கு வெளியே தெரிவதில்லை. அதனால், மூச்சுத் திணறல் இல்லாத நாட்களிலும், நீங்கள் இன்ஹேலர் பயன்படுத்த வேண்டும். டாக்டரின் ஆலோசனை இன்றி, நீங்களாக இன்ஹேலரை நிறுத்தினால், பிற்காலத்தில் மூச்சுக் குழாயில் தழும்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவ பரிசோதனை மற்றும் 'ஸ்பைரோமெட்ரி' பரிசோதனை நார்மலாக இருந்தால் மட்டும், இன்ஹேலர் பயன்படுத்துவதை நிறுத்தலாம்.
டாக்டர் எம். பழனியப்பன்,
94425 24147