PUBLISHED ON : ஜன 26, 2025

ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது, சில வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்; சிலவற்றை சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்வர்.
அந்த வகையில், பொதுவான பத்திய உணவுகளையும்; பத்தியத்திற்கு எதிரான உணவுகளையும் பார்க்கலாம்.
கத்தரி பிஞ்சு, முருங்கை பிஞ்சு, வாழைக்காய் பிஞ்சு, அவரை பிஞ்சு, அத்தி பிஞ்சு, முளைக்கீரை, சுண்டைக்காய் வற்றல், பொன்னாங்கண்ணி கீரை, புடலங்காய், பீர்க்கங்காய், நெய், பால், மோர், வெள்ளாட்டு மாமிசம் போன்றவை பொதுவாகவே பத்தியத்திற்கு உகந்த உணவுகள்.
சில வகை நோய்களுக்கு இவற்றில் சிலவற்றை தவிர்த்து, வேறு சிலவற்றை சேர்க்க வேண்டியதும் வரலாம்.
செரிமான கோளாறுகள், செரிமான சக்தி குறைவாக உள்ளவர்கள், கீரை வகைகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் செரிமானம் ஆகாத அவரைக்காயை சில கோளாறுகளுக்கு சாப்பிடக் கூடாது. அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பூசணிக்காய் போன்றவை பத்தியத்திற்கு எதிரானவை.
இப்படி நான் சொன்னால், இரும்பு சத்து மிகுந்த முருங்கைக் கீரையை தவிர்க்கச் சொல்கிறாரே என தோன்றும். சத்து இருப்பதால் மட்டும் அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.
நோய், அதன் அறிகுறி, செரிமான சக்தியை எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் பத்திய உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். பொதுவாகவே கீரை வகைகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது. வாரத்திற்கு ஏழு வகையான கீரை சாப்பிட, 'யு டியூப்'பில் ஆலோசனை சொல்கின்றனர்.
இது தவறு. சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை தரும் பாகற்காயை அடிக்கடி சாப்பிடக் கூடாது. சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிட்டால் போதும்.
தேங்காய், மாங்காய், எள்ளு, கொள்ளு, மாவு பண்டங்கள், சுரைக்காய், கடுகு, நல்லெண்ணெய், கிழங்கு வகைகள், முட்டை, மீன், கருவாடு, மது, சிகரெட் ஆகியவை பத்தியத்திற்கு உகந்தவை அல்ல.
செரிமான சக்தியை துாண்டக்கூடிய திறன் கடுகிற்கு இருப்பதால், தினசரி சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்தலாம்.
கஞ்சி தயாரிக்கும் போது, கடுகை தவிர்த்து மிளகு தாளிக்கலாம். நெய்யில் சீரகம் தாளித்து சேர்க்கலாம். கடுகு, மீன், கருவாடு போன்றவை மருந்தின் தன்மையை முறிக்கக்கூடியவை; மருந்து வேலை செய்யாது.
டாக்டர் எம்.ஹரிகிருஷ்ணன், ஆயுர்வேத மருத்துவர் 80159 58409healerhari@gmail.com