sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்

/

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


PUBLISHED ON : ஜன 26, 2025

Google News

PUBLISHED ON : ஜன 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.ராஜ்குமார், மதுரை: எனக்கு எந்தநோயும் இல்லை. கொலஸ்ட்ரால் மட்டும் கட்டுக்கடங்காமல் உள்ளது. என் இதயம் பாதுகாப்பானதா

வெளிநாட்டில் ஒருவருக்கு 60 வயதில் இதயநோய் வருகிறது என்றால் இந்தியாவில் 45 வயதிலேயே இதயநோய் வந்து விடுகிறது. இப்போதெல்லாம் 30 வயதில் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. இதில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு 100 மி.கி.,க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் இருந்தால் மாரடைப்பு வரும் தன்மை கூடுகிறது. இந்தியர்களுக்கு இது அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கும் அதிகமாக இருக்கும்.

ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாகிறது. ஸ்டேட்டின் வகை மாத்திரைகள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தக்கூடியவை. காய்கறி, கீரை, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். உணவில் சாதத்தை விட காய்கறிகளின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். பொரித்த உணவு, சீனி, வெல்லம், நாட்டு சர்க்கரை தவிர்க்க வேண்டும்.

தினமும் 45 நிமிடம் வேக நடைபயிற்சி, நல்ல துாக்கம் அவசியம். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக மனதை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும்.

- டாக்டர் சி. விவேக் போஸ், இதய நோய் சிகிச்சை நிபுணர், மதுரை

அ.வேல்ராகவன், சின்னாளபட்டி: காய்ச்சலால் வலிப்பு ஏற்படுமா, என்ன முதலுதவி அளிக்கலாம், வலிப்பு நோயால் பாதித்தோர் தவிர்க்க வேண்டிய உணவுகள்

அலைபேசியில் வெப்பம் அதிகரிக்கும் போது தானே 'ரீ-ஸ்டார்ட்' ஆவதை போன்று உடல் வெப்பநிலை 101 டிகிரியை தாண்டும்போது மூளையின் வெப்பம் அதிகரித்து வலிப்பு ஏற்படுகிறது. காய்ச்சலுடன் கூடிய வலிப்பின்போது இரு கை, கால்கள் வெட்ட ஆரம்பித்தல், சிறிது நேரம் மூர்ச்சை நிலையில் இருப்பது, சுயநினைவின்றி சிறுநீர், மலம் கழிக்கவும் வாய்ப்புண்டு. வாந்தி எடுத்தல், வாயில் நுரை தள்ளுதல், கண்கள் மேல் எழும்பி நிலை குத்தி நிற்பது என சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை இதே நிலை நீடிக்கலாம். பொதுவாக 5 நிமிடங்களுக்குள் தானாகவே குணமாகி பழைய நிலைக்கு திரும்பிவிடுவர். காய்ச்சல் துவங்கிய 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த வலிப்பு வரும் . குழந்தை பருவத்தில் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை இதற்கான வாய்ப்பு உண்டு.

இச்சூழலில் பதற்றமடையாமல் அணுக வேண்டும். வலிப்பு ஏற்படும் போது அதை தடுக்கவோ, கையை கொண்டு அழுத்தம் தரவோ கூடாது. துவங்கிய நேரம் முதல் நீடிக்கும் நேரம் வரையிலான காலத்தை குறித்துக் கொள்ள வேண்டும். அருகில் கடினமான, கூர்மையான பொருட்கள் இருக்கக்கூடாது. வாய் வழியே தண்ணீரோ, மருந்துகளோ ஊற்றக்கூடாது. இவை புரை ஏறி நுரையீரலுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டால் இனிப்பு, கொழுப்பு , அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

டாக்டர் ஜெ.காமராஜ், முதுநிலை உதவி பேராசிரியர், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி.

கே.போதுமணி, பெரியகுளம்: எனது உறவினருக்கு சுகப்பிரசவமாக ஒரு குழந்தை பிறந்து இரு மாதங்களாகிய நிலையில் அவர் தானாக புலம்புகிறார். நாங்கள் யாராவது அருகில் சென்றால் பேச்சை நிறுத்தி விடுகிறார். தனிமையில் இருந்தால் மீண்டும் புலம்பலை தொடர்கிறார். குழந்தையை துாக்குவதற்கும், பாலுாட்டவும் பதட்டமாகிறார்.

கர்ப்பம் ஆகும் 3 வது மாதம் முதல் பிரசவத்திற்கு பின் 6 வது மாதம் வரை ஹார்மோன் சுரப்பு மாறுபடும். இதனால் சில பெண்கள் பதட்டமாக காணப்படுவர். குழந்தைகளுக்கு பாலுாட்டுவது முதல் கொஞ்சுவது, தொட்டில் ஆட்டுவது வரை வேண்டா வெறுப்பாக செயல்படுவர். இதனால் தானாக புலம்புகின்றனர். அவர்களுக்கு சில எளிய மனப்பயிற்சிகள் மூலம் இந்த பிரச்னையை சீராக்கலாம். பயப்பட வேண்டியதில்லை.

- டாக்டர் டி.மகாலட்சுமி. மன நல மருத்துவர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்

எம்.சிவகண்ணன், திருப்புல்லாணி: பனிக்காலத்தில் அதிக சளியும், வறட்டு இருமலும் பாடாய்ப் படுத்துகிறது. இதற்கான சிகிச்சை பற்றி கூறுங்கள்.

பனிகாலங்களில் வெளியே செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களை தற்காத்துக் கொள்வது அவசியம். உறங்கச் செல்லும் போது கம்பளிப் போர்வையை போர்த்தி தரை விரிப்பாக பருத்தி ஆடைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெளியில் செல்லும் போது தலைக்கு மப்ளர் மற்றும் வெளிக்காற்று காதுகளுக்குள் செல்லாதவாறு தடுப்பு துணியை அணிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் தலை பாரம் அதிகமாக இருக்கும். கபால நீர் அதிகமாக சுரக்கக்கூடும். அச்சமயத்தில் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சைனஸ் பிரச்னையை சரி செய்ய உரிய முறையில் நீராவி பிடிக்க வேண்டும். நொச்சி இலை, வேப்பிலை, யூகலிப்டஸ் இலை உள்ளிட்டவைகளை ஒரு சேர வேக வைத்து நன்றாக நீராவி பிடிக்க வேண்டும்.

-டாக்டர் எம்.எஸ்.ரிஹானா, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரெகுநாதபுரம்

அ.சஞ்சய், சிவகங்கை: அம்மாவிற்கு வயது 70 . முதுகுவலி. முதுகுதண்டு வட தோற்றம் மாறுதலாக காணப்படுகிறது எவ்வாறு சரிசெய்வது.

வயது முதிர்வு அடையும் பட்சத்தில் எலும்பின் தன்மையில் எலும்பு புரை எனும் நோய் ஏற்படும். இதனால் எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்பு உண்டு. இதனால் முதுகுதண்டுவட எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ச்சியான வலி மற்றும் முதுகு தண்டுவட கூன் விழுதல் ஏற்படும். எலும்புகள் அதன் அடர்த்திகளை இழப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது. இது பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்குதான் அதிகமாக ஏற்படும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு மற்றும் பிற நோய்களின் தாக்காத்தால் கூட இது ஏற்படும். அவர்களுக்கு டாக்டரின் ஆலோசனை படி ஹார்மோன் சிகிச்சை அளிக்கவேண்டும். ஊட்டச்சத்தான உணவுகளை வழங்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். தொடர்ந்து டாக்டரின் ஆலோசனை படி நடந்துகொண்டால் எலும்பு மேலும் சேதம் அடைவதையும் எலும்பு முறிவுகளுக்கான ஆபத்துக்களையும் குறைக்கலாம்.

டாக்டர் அர்விந்த் மனோஜ், உதவி பேராசிரியர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.

பி.தர்மர், காரியாபட்டி: சர்க்கரை நோய் உள்ளது. காலில் லேசான புண் ஏற்பட்டுள்ளது. சரிவர குணமாகவில்லை. எவ்வாறு குணப்படுத்துவது.

40 வயதை கடந்து விட்டாலே சர்க்கரை அளவு குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். உடலில் சர்க்கரை அதிக அளவு இருக்கும் பட்சத்தில், பாதத்தில் புண் ஏற்படும். பாதத்தை அடிக்கடி கண்காணித்து, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சரியான அளவில் செருப்பு அணிய வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் செருப்பை மாற்றி விட வேண்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு பாதத்தில் புண் ஏற்பட்டால் ஆரம்பகட்டத்திலே மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை எடுத்தால் குணப்படுத்த முடியும். சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொண்டு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

- டாக்டர் காமாட்சி சங்கர், கல்குறிச்சி






      Dinamalar
      Follow us