"காண்டம்' பயன்படுத்துவது "வேஸ்ட்' என்கிறான் என் நண்பன்...
"காண்டம்' பயன்படுத்துவது "வேஸ்ட்' என்கிறான் என் நண்பன்...
PUBLISHED ON : ஜன 23, 2011

* லூர்துசாமி, லாஸ்பேட்டை: என் குழந்தைக்கு தடுப்பூசி போட அழைத்து செல்லும் போது, ஒவ்வொரு மாதமும் ஒரே மருந்து போடப்படுகிறது. 18வது மாதத்திலும் அதே மருந்து போடப்படுகிறது. மருத்துவரிடம் கேட்ட போது, அது ஊக்க மருந்து, மிகவும் அவசியமானது என்கின்றனர். எனக்கு விளங்கவில்லை. ஊக்க மருந்து என்றால் என்ன?
நோய் தடுப்பு மருந்து என்பது, உயிருள்ள, சக்தி குறைந்த அல்லது உயிரற்ற பாக்டீரியாக்களும், வைரஸ்களும் கொண்டது. இந்த மருந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியோகவோ, ஊசி மூலமாகவோ உடலில் செலுத்தக் கூடியது. இந்த மருந்து, நோய் எதிர்கிருமியை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து நாளடைவில் உடலில் குறைந்து விடும். எனவே, இந்த மருந்தை மீண்டும், மீண்டும் போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். பருவ வயது வரும் வரை இது தொடர வேண்டும். 16 வயது நிறையும் போது தான், இந்த தடுப்பூசி முறை முழுமையடையும்.
* சின்ன கண்ணப்பன், வடக்கம்பட்டி: என் மகனுக்கு 6 வயதாகிறது. முட்டியில் வீக்கம் காணப்படுகிறது. எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, அது கட்டி என்றும், ஒன்றும் செய்ய முடியாது என்றும், டாக்டர் கூறி விட்டார். ஆறு மாதமாக, அந்த கட்டி அப்படியே உள்ளது...
ஆண் மகனுக்கு, வலியில்லாத கட்டிகள் உருவாவது சகஜமே. முட்டியின் உள்பகுதியில் இதுபோல் தோன்றும். இதற்கு, 'பாப்லிடீல் சிஸ்ட்' அல்லது 'பேக்கர்ஸ் சிஸ்ட்' என்று பெயர்.
அல்ட்ராசவுண்டு ஸ்கேன் எடுத்துப் பார்த்து, அது எந்த வகைக் கட்டி என்பதை அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக கட்டிகள், 10 முதல் 20 மாதங்களுக்குள், தானாகவே சரியாகி விடும். சில நேரங்களில், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
* கணேஷ், கோவை: நான் 'காண்டம்' உபயோகப்படுத்துகிறேன். ஆனால், அது பயன்படாமல் போகுமோ என்ற பயம் ஏற்படுகிறது. என் நண்பன், அது நம்பத்தகுந்ததல்ல என கூறுகிறான். உண்மையா?
கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்க, 'காண்டம்' பயன்படுத்தப்படுகிறது. பாலியல் தொடர்பாக ஏற்படும் நோய்களையும் தவிர்க்க, இதைப் பயன்படுத்தலாம். இதை, உடலுறவின் முழு நேரத்திற்கும் பயன்படுத்தாமல் போனாலோ, கிழிந்திருந்தாலோ, காலாவதியாகிப் போயிருந்தாலோ, ஒரு முறை பயன்படுத்தியதை, மறுமுறை பயன்படுத்தும்போதோ, கருத்தரிப்பு ஏற்படுவது நிகழலாம். எனவே, அதை வாங்கும் போது, தேதி பார்த்து வாங்க வேண்டும். பயன்படுத்திய உடனேயே நீக்க வேண்டும்.
