PUBLISHED ON : ஆக 04, 2024

குழந்தை பிறந்து, தாய்ப்பால் தர வேண்டிய கட்டாயம் வரும் போது தான், தாய்ப்பால் தர வேண்டியது எந்த அளவு முக்கியம் என்பதை ஒரு பெண் உணருகிறார். தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன மாதிரியான உணவு சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்கலாம், எவ்வளவு நேரம், எப்படித் தர வேண்டும் இப்படி தாயின் மனதில் பல சந்தேகங்கள்,, கேள்விகள் வருகிறது.
சமீபத்தில் டாக்டர் ஒருவர் தன்னுடைய பச்சிளங் குழந்தையை எடுத்துக் கொண்டு, என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். 'என் குழந்தை ரொம்ப நெளியுது, விக்கல் வருது' என்று ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலே அவரிடம் இருந்தது. தன்னுடைய குழந்தை என்று வரும் போது ஒரு டாக்டருக்கே எத்தனை சந்தேகங்கள், குழப்பங்கள் வருகிறது.
தாய்ப்பால் கொடுப்பது என்பது ஏதோ ஆறு மாதங்கள் கொடுத்து விட்டு, அத்துடன் கடமை முடிந்தது என்கிற விஷயம் இல்லை. குழந்தை பிறந்த நொடியில் இருந்து, அதன் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக, அறிவுத் திறனுடன் இருப்பதற்கான ஆதாரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தாய்ப்பாலில் இருந்து குழந்தைக்கு ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது ஒரு பக்கம் என்றால், அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையேயான பிணைப்பை உறுதி செய்யும் பாலம்.
வேலைக்கு செல்லும் சில பெண்கள் என்னிடம், பாலை எடுத்து பிரிஜ்ல் வைத்துவிட்டு செல்வதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் புட்டிப்பாலை தவிர்க்க அதைச் செய்யலாம். குழந்தையை மடியில் வைத்து, ஆதரவாக அதனுடைய கண்களைப் பார்த்து தாய்ப்பால் தரும் போதுதான், குழந்தை பாதுகாப்பாக உணரும்.
தாய்ப்பால் வங்கி ஏன் அவசியம் என்றும் பலர் கேட்கின்றனர். குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பது அதிகரித்து வரும் நிலையில் நீண்ட நாட்களாக பச்சிளங் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவான என்ஐசியூவில் சிகிச்சை பெற வேண்டிய நிர்பந்தம் குழந்தைக்கு ஏற்படுகிறது. நேரடியாக தாய்ப்பால் தர முடியாத நிலையில் தாய் இருக்கிறார். குறைந்தபட்சம், எவ்வளவு விரைவாக தாய்ப்பலை குழந்தைக்கு தருகிறமோ அந்த அளவு குழந்தையின் குடல் அதை ஏற்று செரிமானம் செய்யும் சக்தியைப் பெறுகிறது.
டாக்டர் ரெமா சந்திரமோகன்,
இயக்குனர்,
அரசு குழந்தைகள் நல மருத்துவமனை,
சென்னை