sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்

/

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


PUBLISHED ON : ஆக 04, 2024

Google News

PUBLISHED ON : ஆக 04, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செல்வி, மதுரை: தொண்டையில் புண் ஏன் ஏற்படுகிறது. உணவுக்குழாய் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன வழி.

தொண்டையில் புண் வருவதற்கு நுாறு காரணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு பொதுவாக டான்சில் பகுதியில் புண் வரும். அதிகமான சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிடுவது, குளிர்பானங்கள் குடிப்பதும் புண் வர முக்கிய காரணங்கள்.

நடுத்தர வயதினருக்கு வயிறு பிரச்னைகளால் தொண்டையில் புண் வரலாம். வயிற்றில் அதிகளவில் அமிலம் உற்பத்தியாகி இரவில் அது உணவுக்குழாய் வழி வந்து தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக குறட்டை விடுபவர்கள், சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், துாக்கத்தில் வாய் வழி சுவாசிப்பவர்களுக்கு, வாய் சுத்தம் இல்லாமல் கிருமிகள் உருவானால் தொண்டையில் புண் வரும்.

உதட்டில், நாக்கில், தொண்டையில், உணவுக்குழாயில் புற்றுநோய் வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. வாய் சுத்தமாக குறிப்பாக பற்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். துரித உணவு சாப்பிடுபவர்கள், சிகரெட் புகைப்பவர்கள், அதிக மது அருந்துபவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு எளிதாக உணவுக்குழாய் புற்றுநோய் வருகிறது. மது, புகையால் ஏற்படுவதை விட கலப்பட உணவுகளால் தான் புற்றுநோய் வருவது அதிகம்.

உணவில் சாதத்தை குறைத்து காய்கறி, பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். பெண்களுக்கு குறிப்பாக பி 12 விட்டமின் சத்து குறைபாடு காரணமாக உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடிப்பதும் இதற்கு காரணம். புற்றுநோய் ஓரிடத்தில் ஆரம்பித்து பரவும். முதல் நிலையில் பிரச்னை ஆரம்பித்த உடனே கவனிக்க வேண்டும். தொண்டையில் சிறு புண் ஏற்பட்டாலும் அல்சர் தான் என நினைக்கக்கூடாது. ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற வேண்டும்.

- டாக்டர் சரவணமுத்துகாது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் மதுரை

ஆர்.மகிழ்திருமேனி மேலக்கூடலுார்: எனக்கு திருமணம் முடிந்து 5 மாதங்கள் ஆகின்றன. நான் கருவுற்றதை கண்டறிய மருந்து கடையில் கரு பரிசோதனை கார்டு வாங்கி சிறுநீரில் சோதனை செய்தேன். அதில் 'பாசிட்டிவ்' என காண்பித்ததால் மகிழ்ச்சி அடைந்தோம். ஸ்கேன் செய்த போது கருவுறவில்லை என்றனர். கருவுற்றதை முறையாக அறிய என்ன செய்ய வேண்டும்.

கருவுற்ற பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது முதல் அறிகுறி. ஆனாலும் தள்ளிப்போன நாட்களை கணக்கிட்டு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் சிசுவின் இதய துடிப்பு தெரிந்த பின்தான் உறுதிப்படுத்த முடியும். பொதுவாக பெண்கள் கருவுற்றிருந்தால் அவர்களுக்கு ஐந்து வாரங்கள் முடிந்த பின் ஸ்கேனில் தெளிவாக கருவின் இதயத்துடிப்பை கண்காணித்து அறிந்து கொள்ள முடியும். அனைத்து பெண்களுக்கும் இந்த அறிகுறிகள் தெரியாது. ஒவ்வொருவரின் உடல் திறனை பொறுத்து இது மாறுபடும்.

கருவுற்றதை அறிந்து கொள்ள Beta hCG என்ற ஹார்மோன் பெண்கள் உடலில் சுரக்கும். இந்த ஹார்மோனின் அளவு நாட்கள் கூட கூட அளவு அதிகரிக்கும். இதனை ரத்த பரிசோதனையில் அறியலாம். பின் 40 நாட்களில் 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை அதிகரிக்கும். இதை வைத்து பெண்கள் கருவுற்றதை உறுதிப்படுத்த முடியும். இதில் பெண்கள் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் ஒரு சில நேரங்களில் கருவுற்றதை தெரிவிக்கும் மெடிக்கல் கார்டு 2 கோடுகளில் ஒன்றில் மிக அதிகமாகவும், ஒன்றில் மெளிதான அளவிலும் ரெட் மார்க் காண்பிக்கும். இதை பார்த்து உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். ஏனெனில் Luteinizing Hormone (LH) என்ற ஹார்மோன் சுரப்பு இருந்தால் கருவுறுவதில் பிரச்னை இருக்கும்.

- டாக்டர் எஸ்.சவிதா

மகப்பேறு மருத்துவர், தேனி


ராஜேஷ் காமயகவுண்டன்பட்டி: எனக்கு வயது 28. இப்போது சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருப்பதாக பரிசோதனையில் தெரிகிறது. நடைப்பயிற்சி மூலம் குணப்படுத்த முடியுமா.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். குறைந்த பட்சம் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். மன அழுத்தம் இன்றி இருக்க வேண்டும். சர்க்கரை நோய் ஆரம்ப நிலை என்றால் நடைப்பயிற்சியுடன் டாக்டரின் பரிந்துரைப்படி மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். நடைப்பயிற்சி மட்டும் போதாது. பிரி டயாபடிக் சிகிச்சை அவசியம். அதாவது ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு நடைப்பயிற்சியுடன் மாத்திரைகளும் அவசியம். சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்க நடைப்பயிற்சி, காய்கறிகள், கீரைகள் எடுத்து கொள்வது, மாமிச உணவுகள், துரித உணவுகளை தவிர்ப்பது, பொரித்த உணவுகளை தவிர்ப்பது, மது, சிகரெட், புகையிலைக்கு குட் பை சொன்னால் தப்பிக்க முடியும்.

- டாக்டர் ஏ. சையது சுல்தான் இப்ராகிம்

சர்க்கரை மற்றும் இதய நோய் சிறப்பு மருத்துவர், கம்பம்


எம்.இளவரசன், ராமநாதபுரம்: சர்க்கரை நோய் பாதிப்பால் கால்களில் ஆறாத புண் ஏற்பட்டு அவதிப்படுகிறேன். தீர்வு என்ன?

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சீரான தொடர் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். டாக்டர்கள் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு கட்டுப்பாடு அவசியம். பழங்களில் மா, பலா, வாழை முக்கனிகளையும் தவிர்க்க வேண்டும்.

உணவு முறையில் 3 வேளைக்கு பதில் ஆறு வேளைகளில் சிறிது, சிறிதாக உண்ண வேண்டும். தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினந்தோறும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

சர்க்கரை நோய் பாதிப்பால் கால் நரம்புகளில் பாதிப்பு இருந்தால் உணர்ச்சியற்ற நிலை காணப்படும். இது போன்று இருந்தால் டாக்டர்கள் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். காலில் புண்கள் ஆறுவதற்கு முதலில் உணவு கட்டுப்பாடு, அடுத்ததாக தினமும் புண்ணை சுத்தம் செய்ய வேண்டும். அதிக ஊட்டச்சத்துள்ள புரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாதந்தோறும் சர்க்கரை பரிசோதனை உணவுக்கு முன், உணவுக்கு பின் 2 மணி நேரத்திற்கு பிறகு ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை அளவை பொறுத்து அதற்கேற்ப டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொண்டால் கால்களில் உள்ள புண்கள் ஆறும்.

-டாக்டர் சு.நுாருல் முகமது

பொது அறுவை சிகிச்சை நிபுணர்

அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்


எஸ்.கண்ணன், சிவகங்கை: தோள்பட்டையில் வலி வருவது ஏன்

வயது, காயம் மற்றும் மரபியல் உள்ளிட்ட பல காரணிகளால் தோள்பட்டை வலி வரலாம். பொதுவாக அதிகப்படியான பயன்பாட்டினால் தசைநாண்கள் வீங்கிய நிலை, எலும்பு மூட்டு, கழுத்து அல்லது தோள்பட்டை நரம்பு சுருக்கம், தோள்பட்டை அல்லது கை எலும்பு முறிவு போன்ற காரணங்களாலும் வரலாம். மாரடைப்பின் அறிகுறி இருந்தாலும் தோள்பட்டை வலி வரலாம்.

சுவாசிப்பதில் சிரமம் அல்லது மார்பில் அழுத்தம் போன்ற உணர்வுடன் தோள்பட்டை வலி இருந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறு உணர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். உடல் பரிசோதனை செய்ய வேண்டும். இல்லை வேறு பிரச்னை என்றால் அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சை பெறவேண்டும். தோள்பட்டையில் உள்ள திசுக்களில் பிரச்னை என்றால் அறுவை சிகிச்சையின் மூலமும் சரிசெய்யலாம்.



- டாக்டர் கிருஷ்ணராஜன்

பொது மருத்துவம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை

சிவகங்கை


மா. கீர்த்திஅருப்புக்கோட்டை: மன அழுத்தம், மன நோய் உண்டாக காரணம் என்ன?

பதில்: மரபு ரீதியாக, பரம்பரை ரீதியாக, வாழ்க்கையில் இழப்பு, மது பழக்கம், பதட்டம் உள்ளிட்ட காரணங்களால் மனச்சோர்வு ஏற்பட்டு மன அழுத்தம், மன நோய் உருவாகிறது. மனம் என்பது மூளையின் ஒரு பகுதி. நரம்புகள் பாதிக்கப்பட்டு, ரசாயனம் சமநிலை தவறும் போது மூளை பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் மூடப்பழக்கவழக்கத்தால் செய்வினை என நினைத்து சிகிச்சை எடுத்துக் கொள்ள காலதாமதப்படுத்துவர். அவ்வாறு இருக்கக் கூடாது. தகுந்த ஆலோசனைகள், மருந்து மூலம் 90 சதவீதம் குணப்படுத்த முடியும். தாலுகா அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மனநல திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- டாக்டர் நிஷாந்த்

மனநல மருத்துவர்

காரியாபட்டி






      Dinamalar
      Follow us