
ரெங்கநாதன், மதுரை: சைனஸ், அலர்ஜி இரண்டையும் எப்படி அறிந்து கொள்வது. ஜலதோஷம் வந்தால் மூக்கினுள் தைலம் அல்லது சொட்டு மருந்து விடலாமா.
அலர்ஜி என்பது மரபணு உட்பட பல்வேறு காரணங்களால் ரத்தத்தில் வருகிறது. சைனஸ், அலர்ஜியை டாக்டர் தான் வேறுபடுத்தி கண்டுபிடிக்க முடியும். நீங்களாகவே சுயசிகிச்சை எடுக்கக்கூடாது. சைனஸ் என்பது நாள்பட்ட நோய். மூக்கு அடைபட்டு சதை வீங்கி, எலும்பு வளைந்து சளி முற்றி வருவது சைனஸ். மூக்கு, தொண்டையில் சளி சேர பழுத்து சைனஸில் கொண்டு விடும். மூக்கின் இரு துவாரங்களும் சரியாக இருந்தால் வெளியில் இருந்து வரும் கிருமிகள் தடுக்கப்பட்டு தொண்டைக்கு சுத்தமான காற்று செல்லும். மூக்கில் தண்டு வளைந்திருந்தாலோ, சளி மூலம் அடைத்திருந்தாலோ காற்றின் மூலம் வரும் கிருமிகள் அங்கு குடிகொள்ளும். துாசியும் சேரும் போது கெட்ட நீராக மாறி சளியாகி சைனஸ் ஆகிவிடும்.
ஜலதோஷம் வந்தால் தைலம் தடவுவதோ சொட்டு மருந்து விடுவதோ சுயமாக செய்யக்கூடாது. இதனால் மூக்கில் உள்ள சதையில் அரிப்பு ஏற்பட்டு நாளடைவில் மூக்கின் சுத்திகரிக்கும் தன்மை குறையும். எனவே நாம் சுவாசிக்கும் மோசமான காற்று நுரையீரலுக்குச் சென்றுவிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மூக்கில் தைலம் தேய்க்கும் போது 20 வயதில் பிரச்னை ஏற்பட்டு ஆஸ்துமாவில் கொண்டு விடும். டாக்டர்கள் தரும் சொட்டுமருந்தை 3 நாட்கள் வரை மூக்கில் விட்ட பின் நிறுத்திவிட வேண்டும்.
- டாக்டர் சரவணமுத்து, காது மூக்கு தொண்டை நிபுணர், மதுரை
ராஜ்குமார், வடமதுரை: குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமலும் சில நேரங்களில் மூச்சு திணறலும் ஏற்படுகிறது. இதை குணப்படுத்த முடியுமா. இன்ஹேலர் மருந்துகள் பாதுகாப்பானதா.
சமீப காலமாக குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் அதிகரிக்கிறது. பரம்பரை காரணங்கள், குறைந்த எடையுடன் பிறத்தல், சில வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நுரையீரல் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல், காற்று மாசுபாடு, உடல் பருமன் போன்றவை முக்கிய காரணங்கள். மழையால் ஏற்படும் மண் வாசனை, செல்லப் பிராணிகளின் ரோமம், துாசிகள், புகை, வீட்டில் உள்ள குப்பை போன்றவையும் காரணமாகின்றன. இன்ஹேலர் மருந்துகளை டாக்டரின் பரிந்துரைப்படி பயன்படுத்தினால் நோயை கட்டுப்படுத்த முடியும். இன்ஹேலர்கள் பாதுகாப்பானவையே. பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. அடிமையாக மாற்றாது.
-டாக்டர் ஜே.சி.சேகர், பொது நல மருத்துவர், வடமதுரை
கே. சுமதி, ஆண்டிபட்டி: கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்.
முழு தானிய உணவுகள், பட்டை தீட்டப்படாத அரிசி உணவு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் தினமும் உணவில் சேர்க்க வேண்டும். அசைவ உணவில் மீன் சேர்ப்பது நல்லது. மிதமான உடற்பயிற்சி அல்லது வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். டாக்டர் அறிவுரைப்படி கால்சியம், வைட்டமின் டி3 மாத்திரைகளை சாப்பிட வேண்டும். சிவப்பு இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், இனிப்பு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. உப்பை குறைவாக உணவில் சேர்க்க வேண்டும்.
- டாக்டர் எஸ்.தீபிகா, தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருத்துவ அலுவலர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எம்.சுப்புலாபுரம்
வி.அசோக், ராமநாதபுரம்: எனது தந்தை கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பார்வை இழந்து விட்டார். இது பரம்பரையாக வருமா. எனக்கு ஏற்படுமா
கண் நீரழுத்த நோய் என்பது கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரித்து கண் நரம்புகளை பாதிப்பிற்குள்ளாக்கி நிரந்தரமாக கண் பார்வையை பாதிக்கும். இது பரம்பரையாக வரக்கூடிய கண் பிரச்னை. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், கிட்ட பார்வை குறைபாடு உள்ளவர்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஸ்டீராய்டு மருந்துகளை நீண்ட காலமாக பயன்படுத்துவோரையும் பாதிக்கும். 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் 200 பேரில் ஒருவரையும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 10 பேரில் ஒருவரையும் பாதிக்கும். ஆரம்ப நிலையில் கண்ணில் வலியையோ, பார்வை பாதிப்பையோ உண்டாக்காது.
பக்கவாட்டு பார்வையை மிகவும் பாதிக்கும். ஒரு சிலருக்கு தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி எடுத்தல் இருக்கும். விளக்குகளை சுற்றி வட்டம் போன்ற தோற்றம் போன்ற பார்வை இடையூறுகள் ஏற்படலாம். ஆண்டுக்கு ஒரு முறை உள் விழி அழுத்தம், கருவிழி பருமன், கண் நரம்பு சோதனை செய்ய வேண்டும். கண் நீரழுத்த நோய் கண்டறியப்பட்டால் சொட்டு மருந்து, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
-டாக்டர் அ.மு.ராஜா, கண் மருத்துவத்துறை தலைவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லுாரி, (இருப்பு)ராமநாதபுரம்
அ.பிரியா, சிவகங்கை: 'மெனோபாஸ்' காலத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்
மெனோபாஸ் நடைபெறும் போது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் தோன்றுகின்றன. மாதவிடாய் நின்ற சமயத்தில் அதைத் தொடர்ந்து ஏற்படும் அறிகுறி நபருக்கு நபர் வேறுபடும். முகம், கழுத்து, மார்பு பகுதிகள் சிவந்து போகும். இரவில் அதிகப்படியான வியர்வை ஏற்படும். மன ரீதியான சோர்வு, பதட்டம் அதிகரிக்கும். மெனோபாஸ் நடக்கும் போது தொடர் ரத்தப்போக்கு ஏற்படும்.
ஹார்மோன் மாற்றங்களினால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். மாதவிடாய் நிறுத்தத்தில் எலும்பு அடர்த்தி குறைவது முக்கிய குறைபாடாகும். இந்த பிரச்னைகளுக்கு ஹார்மோன் தெரபி எனும் ஹார்மோன் மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. விட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.
டாக்டர் மு.தென்றல், மகப்பேறு நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
மா.செல்வ சத்யா, விருதுநகர்: என் குழந்தைக்கு ஒரு வயதாகியும் பால்பற்கள் வளரவில்லை என்ன செய்வது
குழந்தைகளுக்கு ஆறு மாதத்தில் இருந்து இரண்டரை வயதிற்குள் பால்பற்கள் வளரும். ஆறு வயதில் இருந்து 12 வயது வரை பற்கள் விழுந்து முளைக்கும். 18 வயது வரை பற்கள் விழுந்து சீராக முளைப்பதால் தெத்து பற்கள் வளர்வது தவிர்க்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் பால் பற்கள் முளைக்கவில்லை என்றால் மரத்திலான கடிக்கும் பொருட்களை கொடுக்கலாம். இதை குழந்தைகள் நன்றாக கடிக்கும் போது பால் பற்கள் முளைத்து வளரும். குறிப்பிட்ட காலத்திற்குள் பற்கள் வளராமல் இருந்தால் கால்சியம் குறைபாடாகவும் இருக்கலாம்.
- டாக்டர் எம். பாலமுருகன், உதவிப் பேராசிரியர், பல் மருத்துவத்துறை, அரசு மருத்துவக்கல்லுாரி, விருதுநகர்