PUBLISHED ON : செப் 29, 2024

கொழுப்பில், கெட்ட கொழுப்பு - எல்.டி.எல்., நல்ல கொழுப்பு - ஹெச்.டி.எல்., என்ற இரு வகைகள் உள்ளன. எல்.டி.எல்., 100 மி.கி., / டெ.லி.,க்குள் இருக்க வேண்டும். ஹெச்.டி.எல்., பெண்களுக்கு 50 - 60 மி.கி., / டெ.லி., ஆண்களுக்கு40 மி.கி., / டெ.லி., இருக்க வேண்டும்.
நல்ல கொழுப்பு ஆண்களை விடபெண்களுக்கு அதிகம் இருக்கும் விதமாகவே இயற்கையில் உடலமைப்பு உள்ளது.
எனவே, அத்தனை எளிதில் பெண்களுக்கு மாரடைப்பு வராது.
வாழ்க்கை முறை மாறியதால், இதுவும் இப்போது மாறி வருகிறது. நல்ல கொழுப்பு 40 மி.கி., / டெ.லி.,க்கு மேல் இருக்கும் பெண்களை, சமீப ஆண்டுகளில் பார்ப்பதே அபூர்வமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
மிக அரிதாக 60 - 70 மி.கி., /டெ.லி., நல்ல கொழுப்பு உள்ள பெண்களை பார்ப்பதாகவும் கூறுகின்றனர்.
நல்ல கொழுப்பை அதிகப்படுத்த இயற்கை கொடுத்த ஒரே வழி நடைபயிற்சி. ஓட்டமும், நடையுமாக வாரத்தில் ஐந்து நாட்கள் தினமும் 45 நிமிடங்கள் நடந்தால், ஆறு மாதங்களில் நல்ல கொழுப்பு 4 - 6 மி.,கிராம் அதிகமாகும். ஒரு ஆண்டு நடந்தால், 10 மி.கி., அதிகமாகும்.
கெட்ட கொழுப்பை குறைக்க, நுாற்றுக்கணக்கான மாத்திரைகள் வந்து விட்டன. ஆனால் மாத்திரைகள் வாயிலாக கெட்ட கொழுப்பைக் குறைப்பதோ, நல்ல கொழுப்பை அதிகரிப்பதோமுழுமையாக சாத்தியமில்லை என்பதும் பல ஆராய்ச்சிகளில் நிரூபணமான ஒன்று.
தேங்காய் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா?'டிஸ்லிபிடெமியா' என்பது ரத்தத்திலுள்ள கொழுப்புகளின் அளவில் ஏற்படும் மாற்றம். அது குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம். ரத்தத்திலுள்ள கொழுப்புகளில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவற்றில், ஹெச்.டி.எல்., என்பது நல்ல கொழுப்பு; எல்.டி.எல்., - டி.ஜி.எல்., ஆகிய இரண்டும் கெட்ட கொழுப்புகள்.
இவற்றின் அளவுகளை பரிசோதிப்பது போன்றே, 'ஆப்போ லிப்போ பிராப்பர்டிஸ் பி'யைபரிசோதிப்பதும் அவசியம். ஏனெனில், இது இதய ரத்த குழாயில் ஏற்படும் பாதிப்புகளை கண்டுபிடிக்க உதவுகிறது.
இதய நோய் அபாயத்தை அத்தெரோஜெனிக் திறன் மூலம் அளவிட முடியும். உடலில் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பே, முறையற்ற கொழுப்பு அதிகரிக்க காரணம்.
கொழுப்பின் அளவை, 39 எம்.ஜி.,/டி.எல்., என்ற அளவிற்கு குறைப்பதன் மூலம், இதய ரத்தக் குழாயில் அடைப்பு உட்பட கோளாறுகள் ஏற்படுவதை, 20 சதவீதம், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைக்க முடியும். 'டிரான்ஸ்' கொழுப்புகள் எனப்படும் நிறைவுறாத கொழுப்புகள், அதிக அளவில் இதய நோயை ஏற்படுத்துகின்றன.
எனவே, நிறைவுற்ற கொழுப்புகளும் தினசரிஉணவில், 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. 'மோனோ, பாலி அன்சாச்சுரேடெட்' கொழுப்புகள், அதாவது கரையும் கொழுப்புகள், பொதுவாக கொழுப்பு அளவை பாதிக்காது.
தேங்காய் சாப்பிடுவதால் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது என்பது தவறான கருத்து. தேங்காயில் அதிகமாக உள்ள கொழுப்பு அமிலங்கள், கொழுப்பு அளவை பாதிக்காது.
எனவே, உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பின் தன்மையை புரிந்து கொள்வதும், அதன் சரியான பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம், இதய ரத்தக் குழாய் பாதிப்புகளை குறைக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளில், இளம் வயதினருக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுவது அதிகரித்து உள்ளதைப்பார்க்கிறோம். இதற்கு அடிப்படையே குழந்தை வளர்ப்பில் தான் ஆரம்பிக்கிறது. குழந்தைகள், 'கொழு கொழு'வென்று இருக்க வேண்டும் என்பதற்காக, துரித, பதப்படுத்திய, கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் தருகிறோம். பழங்கள், காய்கறிகள் குழந்தைக்கு பிடிக்காது என்று நாமாகவே நினைத்து தருவது இல்லை.
இரண்டு வயதிற்குள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடப் பழக்கினால் தான், அதன் சுவை மூளையில் பதிந்து, வாழ்நாள் முழுதும் அதை சாப்பிடப் பிடிக்கும். அதனால் ஆறு மாதம் முடிந்து, திட உணவுகளை தர ஆரம்பிக்கும் போது, சில விஷயங்களை கவனமாக தவிர்த்து விட வேண்டும். அதில் முக்கியமானது சர்க்கரை, மைதா. எனவே பிஸ்கட், கேக் போன்றவற்றை இரண்டு வயது வரை தருவது கூடாது.
துரித, பதப்படுத்திய, கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் தருவதால், 10 வயதிலேயே ரத்த நாளங்களில் கொழுப்பு படிய ஆரம்பித்து விடும். உடற்பயிற்சி கிடையாது; விளையாட்டு என்றால், மொபைல் போனில் மட்டுமே. ஓடியாடி விளையாடுவது இல்லை. 10 வயதில் படியத்துவங்கும் கொழுப்பு, அடுத்த, 15 ஆண்டுகளில் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு என்று வெளிப்படும்.
குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையான, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, ஏதாவது ஒரு விளையாட்டு பயிற்சி என்று வளர்த்தால், இளம் வயதில் மாரடைப்பு வருவதை தடுக்க முடியும்.
பிறவி இதயக் கோளாறுகளை தடுக்க முடியாது; ஆனால், ஆரோக்கியமான இதயத்துடன் பிறந்த குழந்தையை தவறான உணவு, வாழ்க்கை முறைகளால், ஒரே இடத்தில் உட்கார வைப்பது, எல்லா நேரமும், 'படி படி' என்று சொல்வது, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து கெடுக்காமல் இருந்தால், மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.
படிப்பை விடவும் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.'டாக்டர், பைலட்' என்று என்னவாக ஆனாலும், அதை அனுபவிப்பதற்கு ஆரோக்கியம் வேண்டும்!
குறைவான இதய துடிப்பு: உடனடி மருத்துவ கவனிப்பு தேவை…
குறைவான மற்றும் சீரற்ற இதயத் துடிப்புகள் (Arrhythmia) அபாயகரமான ஒன்றாக சிலருக்கு மாறலாம். மேலும் சீரற்ற இதயத் துடிப்பு எதை வெளிப்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொள்வதும் மிக அவசியம். உங்கள் இதயத் துடிப்பின் வேகத்தில் ஏதோ கோளாறு இருப்பதை படபடப்பு, மயக்கம் அல்லது நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் மூலம் நீங்கள் உணர்ந்தால், இதயநோய் மற்றும் மின் இதயத்துடிப்பு (Electrophysiologist) நிபுணரை அணுகவேண்டிய நேரம் இது.
பொதுவாக, நம் இதயம் சீரான ஒரு தாளத்தில் துடிக்கிறது. நம் உடலில் உள்ள மின் செயல்பாடுகளால் இது கட்டுப்படுத்தப்படுகிறது. இதயத்தில் உள்ள சைனஸ் கணு நம் உடலுக்கு எவ்வளவு ரத்தம் தேவை என்பதை கண்காணித்து, நம் உடலின் தேவைக்கு ஏற்ப சரியான வேகத்தில் இதயத்தின் அறைகளை சுருங்கவைக்கும் மின் துாண்டுதல்களை அனுப்புகிறது.
பெரும்பாலானவர்களுக்குஓய்வெடுக்கும் நிலையில் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது (BPM). உடற்பயிற்சிஅல்லது மன அழுத்த சூழ்நிலைகளின்போது இது வேகமடைகிறது. அரித்மியா (Arrhythmia) என்பது உங்கள் இதயம் மிக வேகமாக, மிக குறைவாக அல்லது சீரற்ற வேகத்தில் துடிக்கும்போது, அதன் இயல்பான நிலையில் ஏற்படும் மாற்றமாகும்.
இதயம் நிமிடத்திற்கு 50-க்கும் குறைவாக துடித்தால், நீங்கள் பிராடியாரித்மியா (Bradyarrhythmia) எனப்படும் தீவிர மருத்துவ நிலையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.குறைவான இதயத் துடிப்பின் விளைவாக மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம்குறைந்து மயக்கம், தலைசுற்று (Syncope) என்னும் நினைவிழப்பு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படலாம். இதயத் துடிப்பின் வேகம் குறைவதால் ஏற்படும் திடீர் இதய செயலிழப்பு (Cardiac Arrest), குறிப்பாக முதியவர்களிடம் ஏற்படும் மயக்கம், இதயத்துடிப்பு குறைவாக உள்ளதுக்கான இருக்கலாம்.
குறைவான இதயத்துடிப்பானது வயது முதிர்வு மற்றும் உடலியல் சார்ந்த பிரச்னையாக இருக்கலாம் அல்லது பிறக்கும்போதே இதய மின் துாண்டுதலில் குறைபாடு, அல்லது மின் கடத்தலில் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படலாம்.
நோயாளிகள், மற்றும் மருத்துவர்கள் ஆகிய இரு தரப்பினரும் அதிக விழிப்புணர்வுடன் இருந்தால் குறைவான இதயத்துடிப்புடன் தொடர்புடைய பெரும்பாலான இறப்புகளைத் தவிர்த்துவிட முடியும்.இந்த நிலையைப் பற்றி அறிந்துகொள்வதும், ஆபத்து அறிகுறிகள் எவை என்பதையும் கவனிக்க வேண்டும். அத்துடன் அவற்றை எவ்வாறு முன்கூட்டியே கண்டறிவது என அறிந்திருப்பதும் முக்கியமானது.
குறைவான இதயத்துடிப்பின் அறிகுறிகள் பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். இந்த நிலையால் பாதிக்கப்படும் நோயாளிகள் எளிதில் சோர்வடைவதும், உடலுக்கு அதிக வேலை கொடுத்த பிறகு சுவாசிக்க சிரமமும் ஏற்படலாம். சில நேரங்களில் மங்கலான பார்வை மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் மோசமான ஆக்ஸிஜனேற்றத்தால் குழப்பமான நிலை ஏற்பட்டு கண்களின் மாறுபட்டாள் தோன்றலாம்.
குறைவான இதயத்துடிப்பின் அறிகுறிகளான தலைசுற்றல், மயக்கம்மற்றும் அகால மரணம் போன்ற தீவிர-அச்சுறுத்தலான சிக்கல்களை உருவாக்கும்போது, பேஸ்மேக்கர் என்ற கருவி மார்பில் தோலுக்கு அடியில் பொருத்தப்படும். பேஸ்மேக்கர் என்பது சிறிய பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒரு சாதனம் ஆகும். இது காலர் எலும்பின்கீழ் பொருத்தப்பட்டு, கம்பிகள் வழியாக இதய அறைகளுடன் இணைக்கப்படுகிறது. அசாதாரணமான குறைந்த இதயத் துடிப்பைக் கண்டறிந்து, இதயத்திற்கு மின் சமிக்ஞையை அனுப்பி, அதை மீண்டும் சாதாரணமாகத் துடிக்க வைக்க பேஸ்மேக்கர் உதவும்.
ஒருவருக்கு இதயப் பிரச்னை ஏதும் இல்லாவிட்டாலும்கூட, தங்கள்நாடித்துடிப்பை நன்கு அறிந்து, முடிந்தவரை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்வது, புகையிலை பொருட்கள் அனைத்தையும் கைவிடுவது, ஆரோக்கியமான எடையைப் பராமரித்தல் ஆகியவை உங்கள் இதயத்தை சிறந்த நிலையில் வைத்திருக்க எளிதான வழிகள். முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற இதயத்துக்கு ஆரோக்கியமான உணவுகளை நிறைய சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
இதயமே, இதயமே
'புளூடூத்' போன்ற தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இதயத்தில் பொருத்தப்பட்ட கருவிகளின் செயல்பாட்டை எந்த இடத்தில் இருந்தும் டாக்டரால் கண்காணிக்க முடியும்.
சீரற்ற இதய செயல்பாட்டை சரி செய்ய பொருத்தப்படும் பேஸ்மேக்கர்ஸ், இம்பிளாண்டபுள் கார்டியோவர்ட்டர் - டிபிப்ரிலேட்டர்கள், சி.ஆர்.டி.டி. போன்ற கருவிகளை இதன் வயிலாக இருந்த இடத்தில் இருந்தே மருத்துவர் கண்காணிக்கலாம்.
இதன் வாயிலாக நோயாளியின் இதயம் எப்படி செயல்படுகிறது என்பதை துல்லியமாக அறிய முடியும்.சீரற்ற இதயத்துடிப்பு, இதய செயலிழப்பு பற்றிய தகவல்களைப் பெற, அந்தக் கருவியுடன் டிரான்ஸ்மீட்டரை மொபைல் போனுடன் இணைப்பதும் இதில் சாத்தியம்.
தேவையான நேரத்தில் உடனடியாகசிகிச்சையோ, வழிகாட்டுதலோ தர ஏதுவாக இருக்கும்.