PUBLISHED ON : செப் 29, 2024

எலுமிச்சை சாறு, கற்றாழை, மஞ்சள் போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால், தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. இதற்கு எந்தவித அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை.
பெரும்பாலான இயற்கை பொருட்கள், தோலுக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தக்கூடியவை. சில வகை பொருட்கள் தோலில் நிரந்தரமாக தழும்பு, கருப்பு புள்ளிகளை உண்டாக்கலாம்.
'ஸ்கின் ஒயிட்டனிங்' எனப்படும் தோலின் இயல்பான நிறத்தை சற்று வெளிரச் செய்யும் சிகிச்சை நிரந்தர தீர்வு என்பதும், சில காலம் மட்டுமே பலன் தரும் என்று நினைப்பதும் தவறு.
சிகிச்சை முடிந்த பின், டாக்டர் பரிந்துரைக்கும் லோஷன்கள், டோனர், சன் ஸ்கிரீன் தவறாமல் பயன்படுத்தி, முறையாக பராமரித்தால் மட்டுமே தோல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிகிச்சையின் பலன் தெரிவதற்கு சில வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம். ஸ்கின் ஒயிட்டனிங் சிகிச்சை பல சமயங்களில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, பயிற்சி பெற்ற திறமையான டாக்டரிடம் சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது.
ஆயுர்வேத தயாரிப்புகள், வீட்டில் வைத்து தரப்படும் தெரபிகள் நல்ல பலன் தரும் என்பதை விட, டாக்டர் பரிந்துரைக்கும் அவரவரின் தோலுக்கு தகுந்த கிரீம்கள், லோஷன்கள் வெளிப்புற மாசுக்களில் இருந்து பாதுகாப்பு தரும்.ஒயிட்டனிங் செய்வது ஆபத்தானது. தோல் கேன்சரை உண்டாக்கும் என்று சொல்வதும் உண்மையில்லை. டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியான அளவில் பயன்படுத்தினால் பாதிப்பு வராது.
தோலின் நிறம் பளிச்சிடச் செய்யும் ஸ்கின் பிளீச்சிங்கிற்கு கடினமான வேதிப் பொருட்கள் உபயோகிக்கப்படுகிறது. இதை கண்டிப்பாக செய்யவே கூடாது.
நிறைய தண்ணீர் குடிப்பது தோலை பளபளப்பாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, நீர் சத்து குறையாமல் பாதுகாக்கும்.
டாக்டர் ஜெயலட்சுமி தேவி,
தோல் மருத்துவ ஆலோசகர் மற்றும்லேசர் அறுவை சிகிச்சை நிபுணர், அரசு ராஜாஜி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மதுரை 94877 81175dr.jayacosmoderm@gmail.com