PUBLISHED ON : செப் 29, 2024

ஒரு நாளைக்கு தேவையான கலோரியை விடவும் அதிகப்படியான கலோரிகளை சாப்பிடும் போது, சக்தியாக செலவிடப்பட்ட கலோரி தவிர, மீதமுள்ளவை கொழுப்பாக மாற்றப்பட்டு, முதலில் தோலுக்கு அடியில் சேமிக்கப்படும். அதன்பின் வயிற்றை சுற்றியுள்ள தோலுக்கு அடியிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் சேமிக்கப்படும்.
கார்ட்டிசால் ஹார்மோன்
ஹார்மோன் சீரற்ற தன்மையால் இப்படி அதிகப்படியான கொழுப்பு சேர்கிறதா என்றால், தேவைக்கு அதிகமாக சாப்பிட்டு, அதற்கேற்ப உடலுழைப்பு இல்லாமல் இருந்தாலும், சரியான நேரத்தில் போதுமான அளவு துாக்கம் இல்லாமல் இருந்தாலும், 'கார்ட்டிசால்' என்கிற ஹார்மோன் அதிகமாக சுரக்கும்.
பொதுவாக, காலையில் எழுந்தவுடன் கார்ட்டிசால் ஹார்மோன் அதிகமாக இருக்கும். பகலில் எல்லா வேலைகளையும் முடித்து, இரவில் துாங்கும் நேரத்தில் கார்ட்டிசால் அளவு வெகுவாக குறைந்து விடும். நேரம் கழித்து துாங்குவது, இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுவது, இரவு நேர வேலை செய்யும் போது, கார்ட்டிசால் அளவு குறையாமல் காலையில் இருந்தது போன்றே இருக்கும்.
வயிற்றுப் பகுதியைச் சுற்றிலும் கொழுப்பு சேமிக்கப்படுவது, தொப்பை விழுகிறது. உடல் எடை அதிகரிப்பது, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பது உட்பட பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.
இன்சுலின் ஹார்மோன்
கணையத்தில் ஆல்பா, பீட்டா, டெல்டா செல்கள் உள்ளன. ஆல்பா செல்கள் குளுக்ககான் ஹார்மோனையும், பீட்டா செல்கள் இன்சுலினையும் உற்பத்தி செய்கின்றன. இன்சுலின் இருந்தால் மட்டுமே ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
நாம் சாப்பிடும் உணவு குளுக்கோசாக மாறி, தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு செல்லும் போது, தசைகளில் உள்ள குளுக்கோஸ் ரிசெப்டார்கள், குளுக்கோசை வாங்கி பயன்படுத்துவதற்கு இன்சுலின் உதவி செய்யும். 'இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்' எனப்படும் இன்சுலின் செயல்பாடு முழுமையாக இல்லாமல் போனால், தசைகளுக்கு சக்தி கிடைக்காமல், கொழுப்பாகவே சேமிக்கப்படும்.
எப்படி தவிர்ப்பது?
அதிக கலோரி, சர்க்கரை அதிகமுள்ள உணவுகள், ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதை தவிர்ப்பது, சரியான நேரத்திற்கு துாங்காதது, குழந்தைகள் 9 - 10 மணி நேரமும், பெரியவர்கள் 7 - 8 மணி நேரமும் துாங்க வேண்டும். துாக்கம் மட்டுமே கார்ட்டிசால் ஹார்மோனை இயல்பாக நிர்வகிக்கும்.
கார்ட்டிசால் ஏன் அவசியம்?
உடலின் பலவித செயல்பாடுகளுக்கு கார்ட்டிசால் அவசியம். நிற்கும் போது, நடக்கும் போது புவியீர்ப்பு விசை காரணமாக ரத்த ஓட்டம் கால்களுக்கு செல்லும். இந்த சமயங்களில் மூளைக்கும் இதயத்திற்கும் தடைஇல்லாமல் ரத்த நாளங்களில் 'பம்ப்' செய்யும் வேலையை கார்ட்டிசால் செய்கிறது.
மன அழுத்தத்தின் போது, இதயத் துடிப்பு அதிகரிக்கும்; மூச்சு வாங்கும். இந்த சமயத்தில் ரத்த ஓட்டம் அதிகமாக தேவை. இதற்கு கார்ட்டிசால் அதிகமாக சுரப்பது அவசியம்.
கல்லீரலில் இருந்து வரும் குளூக்கோஸ் அளவை, ரத்தத்தில் சீரகா நிர்வகிப்பது இன்சுலின்.
சர்க்கரை அளவு குறைந்தால், உடம்பில் இருக்கும் அதிக புரதம், கொழுப்பில் இருந்து குளுக்கோசை தயாரிக்கும் வேலையை குளுக்ககான், கார்ட்டிசால் செய்யும்.
டாக்டர் குருலட்சுமி மூர்த்தி,
நாளமில்லா சுரப்பிகள் மருத்துவ ஆலோசகர்,
கிளனீகல்ஸ் குளோபல் மருத்துவமனை, சென்னை
79967 89196info.chngleneagleshospitals.co.in