PUBLISHED ON : செப் 29, 2024

வழக்கமாக மழைக்காலம் துவங்கும் போது, புளூ தொற்று பரவுவது வழக்கம். சுருக்கமாக, புளூ எனப்படும் இன்புளூயன்சா என்பது ஹெச்1என்1, ஹெச்2என்2 வைரஸ் தொற்றுகள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் புளூ தொற்று பரவ ஆரம்பிப்பது வழக்கம் தான் என்றாலும், இந்த ஆண்டு தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளது.
தொற்று பாதித்த பலருக்கு, குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், ஏற்கனவே இதய கோளாறு, சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்களை, இந்த தொற்றின் தீவிரம் நிமோனியா பாதிப்பு வரை கொண்டு செல்கிறது.
இதன் அறிகுறிகள் கொரோனா வைரஸ் போன்றே இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா டெஸ்ட் எடுப்பதில்லை. அதனால், இது மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரசா என்று தெரியவில்லை. பல நாடுகளில், 'எக்ஸ்ஈசி' என்ற கொரோனா வகை பரவலாக உள்ளது.
'ரெஸ்பிரேட்டரி பேனல் வைரஸ் டெஸ்ட்' செய்கிறோம். இதில், ஹெச்1என்1 பாதிப்பு அதிகம் இருக்கிறது. இதற்கு, 'டேமி புளூ' மாத்திரைகளை ஏழு நாட்கள் கொடுத்தால் சரியாகி விட வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் இருந்தால், மாத்திரை சாப்பிட்டவுடன் ஒரே நாளில் காய்ச்சல் சரியாகி விடுகிறது. இருமல் மூன்று வாரங்கள் வரை இருக்கிறது.
தீவிர தொற்று உள்ளவர்களுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, வென்டிலேட்டர், செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது.
இவர்களுக்கும் மற்ற அறிகுறிகள் சரியானாலும், இருமல் ஒரு மாதம் வரை நீடிக்கிறது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு இன்ஹேலர் தந்தாலும், இருமல் இரண்டு வாரங்கள் வரை தொடர்கிறது.
இதற்கு காரணம், இந்த ஆண்டு பரவும் புளூ வைரசின் வீரியம் அதிகமாக உள்ளது. சைனஸ், அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு, வழக்கமாக வரும் அலர்ஜியா, புளூ தொற்றா என்று புரியாமல் குழப்பம் ஏற்படும். அதனால், தீவிரம் அடைந்த பின் தான் ஆலோசனை பெறுவர்.
அதனால், அனைவரும் புளூ தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.
சமீபத்தில் புளூ பாதிப்பு வந்தவர்களுக்கு தடுப்பூசி தேவைப்படாது. குளிர்காலம் ஆரம்பிக்கும் வரை புளூ பரவல் இருக்கும் என்பதால் தடுப்பூசி பாதுகாப்பு தரும்.
ஆண்டிற்கு ஒரு டோஸ். ஜூலை மாதமே போட்டால் பாதிப்பு இந்த அளவுக்கு இருக்காது. தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இருக்காது. அடுத்த பரவல் வரும் வரை பாதுகாப்பு கிடைக்கும்.
கொரோனா பரவலுக்கு முன், இதற்கான தடுப்பூசியை பெரிதாக யாரும் சிபாரிசு செய்ததில்லை.
டாக்டர் ஐஸ்வர்யா ராஜ்குமார்,
சுவாச கோளாறுகள் சிறப்பு மருத்துவர்,
ரேலா மருத்துவமனை, சென்னை
73974 92472info@relainstitute.com