
கிருபாகரன், மதுரை: எனது ஆண் குழந்தைக்கு 5 வயதாகிறது. காய்ச்சல் அதிகமாகும் போது சிலநேரம் வலிப்பு வருகிறது. இதற்கு என்ன செய்வது.
ஆறு மாத குழந்தைகள் முதல் ஆறு வயது வரையான சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் போது வலிப்பு நேரிட்டால் அதை ஜூர வெட்டு என்போம். இவ்வாறான வலிப்பு பெரும்பாலும் அபாயமானது அல்ல. தொடர்ச்சியாக வலிப்பு மருந்துகள் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. காய்ச்சல் ஏற்படும் போது மட்டும் வலிப்பு மருந்து கொடுத்தால் போதும். காய்ச்சலின் போது ஒரே நாளில் 2 அல்லது 3 முறை வலிப்பு வந்தாலோ, காய்ச்சல் இல்லாத போதும் வலிப்பு வந்தாலோ தொடர்ச்சியாக வலிப்பு மாத்திரைகளை கொடுக்க வேண்டும். வயது ஆறு மாதமாகும் முன்போ, ஆறு வயது ஆனபின்போ ஏற்படும் வலிப்புகளுக்கு காய்ச்சல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாத்திரைகள் கொடுக்க வேண்டும்.
ஜூரவெட்டு வருவதால் மட்டும் எந்த குழந்தைக்கும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது என்பதை புரிந்து கொண்டு பெற்றோர் நிம்மதியாக இருக்கலாம்.
- டாக்டர் மீனாட்சிசுந்தரம்மூளை நரம்பியல் சிறப்பு நிபுணர் மதுரை
கண்ணபிரான்கொடைக்கானல்: மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி கால் சுளுக்கு (சூகை) பிடித்தல், நரம்பு பிடித்தம் ஏற்படுகிறது இதை சரி செய்வது எப்படி.
மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தாகம் எடுப்பதில்லை. வியர்வை வராது.கால் சூகை (கோல்ட் கிராம்ஸ்) பொதுவாக ஏற்படுவது வழக்கம். இதை தவிர்க்க நாள்தோறும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உப்பு சர்க்கரை கரைசலை தண்ணீரில் கலந்து பருகினால் இப் பிரச்னையை சரி செய்யலாம்.
- டாக்டர் ஸ்ரீதர்நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கொடைக்கானல்
ஆர்.ஸாகம்பரி, சமதர்மபுரம்: முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் எத்தனை ஆண்டு இடைவெளி இருக்க வேண்டும். ஏன் அந்த இடைவெளி வேண்டும் என்பதை தெளிவு படுத்துங்கள்.
மகப்பேறு சிகிச்சையில் சுகப்பிரசவம், சிசேரியன் என இரண்டு முறைகளில் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் இரண்டு சிகிச்சை முறையில் அதிகபடியான ரத்தம் தாய் உடலில் இருந்து வெளியேறுகிறது. மேலும் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுாட்டும் காலமாகும். இக்காலங்களில் தாயின் உடலில் இருந்து குழந்தையின் உடலுக்கு சத்துக்கள் பரிமாறப்படும். இதில் தாயின் சராசரி உடல் நிலையில் இருந்த நுண்ணுாட்டச் சத்துக்கள் குறைந்து விடும்.
தற்போது பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியன் முறையில் நடக்கின்றன. இதில் தாயின் கருப்பை மேற்புற தோலில் 3 அடுக்கு போன்ற அமைப்பு இருக்கும். அதை கிழித்து குழந்தையை எடுத்துவிட்டு, மீண்டும் தைத்து விடுவதால் அத்தழும்பு ஆறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.
முதல் குழந்தை பிறந்த பின் மூன்றாவது ஆண்டில் அடுத்த குழந்தைக்கு கருவுற தயாரானால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து தையல் போட்ட இடம் திறன் அதிகரித்து இருக்கும். இதனால் கருப்பை தையல் பிரிந்து விடும் ஆபத்து இருக்காது.
இதனால் முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் 3 ஆண்டுகள் இடைவெளி மிக மிக அவசியம். இதனால் தாயின் உடலும் நன்றாக இருக்கும். ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
குறிப்பாக அறுவை சிகிச்சையின் போது ரத்தம் வெளியேறி ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருக்கும். 3 ஆண்டுகள் இடைவெளி இருக்கும்போது தாயின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதனால் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். எனவே 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் அடுத்த குழந்தைக்கு தயாராவது சிறந்தது.
- டாக்டர் எஸ்.சவிதா, மகப்பேறு சிகிச்சை சிறப்பு நிபுணர், தேனி
ப.சிங்காரவேலன், ராமநாதபுரம்: நீண்ட நாட்களாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதிலிருந்து விடுபட வழியுண்டா.
நீண்ட நாள் மூட்டு வலி, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாச குழாயில் வீக்கம், ரத்தக்குழாயில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். 'சி-' ரியாக்டிவ் புரோட்டீன் அதிகமாவதால் இந்த பிரச்னை ஏற்படும். இதனால் ரத்தக்குழாய், கிட்னி பாதிப்பு, மற்றும் உடலுறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது. யுனானி மருத்துவ முறையில் ரத்தக்குழாய் வீக்கத்தினை குறைப்பதற்கான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். மஞ்சள் சிறு துண்டு, 10 மிளகு, பூண்டு 2 பல், சின்ன வெங்காயம் 4 இவை அனைத்தையும் இடித்து அதனை உருண்டையாக எடுத்துக்கொண்டு வாயில் வைத்து விழுங்க வேண்டும். சுவைத்து உண்ணக்கூடாது. அப்படி உண்டால் வாயில் புண் ஏற்படும். தினம் ஒரு வேளை இந்த மருந்தினை தொடர்ந்து 40 நாட்களுக்கு எடுத்துக்கொண்டால் ரத்தக்குழாய் வீக்கம் சரியாகும், அதே போல் ஆஸ்துமா, மூட்டு வலி போன்றவை குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஒவ்வாமைகளையும் போக்கும்.
- டாக்டர் ஏ.கலில் அஹமதுயுனானி மருத்துவ அலுவலர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
கே.சுஜிதா, சிவகங்கை: தொடர் மழை, சீதோஷ்ண நிலை மாற்றத்தால் எவ்வித காய்ச்சல் பரவும், அதில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி
தற்போதைய சூழலில் 60 வயதுக்கும் மேற்பட்டோர், 2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு எளிதில் 'புளு காய்ச்சல்' பரவ வாய்ப்புண்டு. எனவே இதில் இருந்து தற்காத்து கொள்ள கூட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்லக்கூடாது. கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். தும்மல், இருமல் வரும் போது காற்றின் மூலம் 'கிருமி தொற்று' எளிதல் பிறருக்கு பரவும். 'புளு காய்ச்சல்' வருவதை தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி போடலாம். நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும்.
காய்ச்சலுடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால், பிற குழந்தைகளுக்கு பரவும். அதை தவிர்க்க வேண்டும். தொடர் காய்ச்சல் 'நிமோனியாவாக' மாறுவதற்கு கூட வாய்ப்பு ஏற்படும். எனவே காய்ச்சல் அறிகுறி தென்பட்டாலே சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
- டாக்டர் இ.சிவக்குமார்துறை தலைவர்குழந்தை நலப்பிரிவு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவனை, சிவகங்கை
மா.கிருஷ்ணன்கோட்டைப்பட்டி: எனது குழந்தைக்கு தொடர்ந்து காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீள சிகிச்சை சொல்லுங்களேன்.
இது போன்ற தருணங்களில் டெங்கு, மலேரியா, புளு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், சளி பிடித்தல், தண்ணீரால் கிருமி தொற்றுகள் ஏற்பட்டு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, சூடு போனதும் குடிக்க வேண்டும். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். துரித உணவுகள் சாப்பிடக்கூடாது. இந்த சீசனில் கிடைக்கக்கூடிய பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். புரதச்சத்து உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். சூடான உணவுகளை சாப்பிட வேண்டும்.
-- டாக்டர் பிருந்தா, பொது மருத்துவம், காரியாபட்டி