
மனோகரி, மதுரை:-என் மகனுக்கு நான்கு வயதாகிறது. அவனுக்கு அடிக்கடி அதிகமாக வியர்க்கிறது. இது நல்லதா.
குழந்தைகளில்
அதிகமாக வியர்வை சுரப்பது சாதாரணமானதாக இருக்கலாம். பொதுவாக சூடான மற்றும்
ஈரமான சூழல், உடற்பயிற்சி அல்லது விளையாட்டு காரணமாக உடல் வெப்பத்தை
கட்டுப்படுத்த உடல் அதிகமாக வியர்வை சுரக்கிறது.
இது இல்லாமல் மருத்துவ
ரீதியாக பார்த்தால் தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்படும் போது (ஹைப்பர்
தைராய்டிசம்) வியர்வை அதிகரிக்கிறது. வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள்
உடல் வெப்பத்தை உயர்த்துவதால் வியர்வை அதிகமாக சுரக்கக்கூடும். காரமான
உணவுகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கின்றன. சிலருக்கு உஷ்ணநிலை
கட்டுப்பாட்டில் பிரச்னை இருந்தால் அதிகமாக வியர்வை ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிக வியர்வை இருந்தால் டாக்டரிடம் காண்பிப்பது
நல்லது.
- டாக்டர் முருகன் ஜெயராமன், குழந்தைகள் நல நிபுணர், மதுரை
திலகம், பழநி: ஆஸ்டியோ போரோசிஸ் வருவதை தடுப்பது எப்படி.
ஆஸ்டியோ போரோசிஸ் (எலும்பு புரை நோய்) என்பது எலும்புத்தாது அடர்த்தி குறைவதாகும். இது அதிக எலும்பு முறிவு ஏற்படுத்தும் நோய். அதிநவீன
ஸ்கேன் மூலமே இதை கண்டுபிடிக்க முடியும். இதனை தடுக்க புகை பிடிக்கக்
கூடாது. மது அருந்தக்கூடாது. 20 வயது முதல் எடை சுமத்தல், நீந்துதல்,
நடத்தல், உடல் பயிற்சிகள் மேற்கொள்ளுதல், வளர் இளம் பருவத்தினர்
ஊட்டச்சத்துள்ள கால்சியம், 'விட்டமின் டி' உணவுகளை உட்கொண்டால் தடுக்கலாம்.
-டாக்டர் முருகேஷ், எலும்பியல் நிபுணர், அரசு மருத்துவர், பழநி
பெயர்
வெளியிட விரும்பாத வாசகர், பெரியகுளம்: எனது இளைய மகன் பிளஸ் 1 படித்து
வருகிறார். 3மாதங்களுக்கு முன் அலைபேசி வாங்கி கொடுத்தேன். சாப்பிடும்
போதும், தண்ணீர் குடிக்கும் நேரத்தில் கூட அலைபேசி பார்க்கிறார். பத்தாம்
வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர், தற்போது மதிப்பெண் குறைந்துள்ளது.
யாருடனும் அதிகம் பேசுவதில்லை. எங்களுக்கு பயமாக உள்ளது. தீர்வு கூறுங்கள்.
மாணவர்களிடத்தில்
தொடர்ந்து 2 முதல் 3 மணி நேரம் அலைபேசி பார்ப்பது அதிகரித்துள்ளது
வேதனையானது. மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில் 50 க்கு 2 என்ற
கணக்கில் 13 வயது முதல் வளர் இளம் பருவத்தினர் 'அலைபேசி அடிக் ஷன்'
பாதிப்பின் ஆரம்ப நிலையில் உள்ளனர்.
இப் பாதிப்புள்ளவர்களுக்கு உடல்
இயக்கத்திற்கு முக்கியமாக மூளை நரம்பில் சுரக்கும் 'காமா அமினோ பியூட்ரிக்
ஆசிட்' தேவையில்லாத நேரத்தில் சுரக்கும், தேவையான நேரத்தில் சுரக்காது.
இதே போல் இரவில் தொடர்ந்து அலைபேசி பார்ப்பதால் துாக்கத்திற்கு மூளையில்
சுரக்கும் 'மெலட்டோனின்' சுரப்பது குறைந்து துாக்கமின்மை ஏற்படும்.
இதனால்
அதிக கோபம், மன அழுத்தம் அதிகரிக்கும். மறுநாள் மந்த நிலையில்
செயல்படுவர். உங்களது மகன் மன அழுத்த ஆரம்ப நிலையில் உள்ளார். பள்ளி
விட்டுவந்தவுடன் அவரிடம் அலைபேசி அதிகமாக பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்
குறித்து அன்பாக பேசி பாருங்கள். பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை
அவரை கூறச் சொல்ல வேண்டும். மாற்றம் ஏற்படும்.
- டாக்டர் கோ.ராஜேஷ், மனநல மருத்துவர், மாவட்ட அரசு மருத்துவமனை பெரியகுளம்
திருமூர்த்தி, சாத்துார்: தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் இருமல் காய்ச்சல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்.
தொடர்ந்து
இரண்டு வாரங்களுக்கு மேல் குழந்தைகளுக்கோ, முதியவர்களுக்கோ தொடர் இருமல்
காய்ச்சல் இருந்தால் சளியை எடுத்து டிபி டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.
தொடர் இருமல், சளி, மாலை நேரத்தில் காய்ச்சல், உடல் மெலிவது டி.பி.யின்
அறிகுறி. சளி பரிசோதனை செய்தால் தான் எந்த மாதிரியான பாதிப்பு என்பது
தெரியவரும். தற்போது நவீன முறையிலான டெஸ்ட் கருவி வந்துள்ளது. குட்நாட்
எனும் கருவி மூலம் டிபி பாதிப்பு உள்ளதா என்பதை உடனடியாக அறிந்து சிகிச்சை
அளிக்க முடியும்.
சாதாரணமாக பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் இருமல் காய்ச்சல் போன்றவை 3 அல்லது 4 நாட்களில் குணமாகிவிடும்.
- டாக்டர் முனிசாயி கேசவன், சாத்துார்