PUBLISHED ON : நவ 10, 2024

தினசரி உணவில், கார்போஹைட்ரேட் 50 - 55 சதவீதம், புரதம் 10 - 15 சதவீதம், கொழுப்பு 25 - 30 சதவீதம் இருக்க வேண்டும் என்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிஷன் அமைப்பு பரிந்துரை செய்கிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக புரத உணவிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. எனவே, புரதம் சார்ந்த இணை உணவுகள் பல வடிவங்களில் சந்தையில் கிடைக்கின்றன.
புரதம் ஏன் சாப்பிட வேண்டும்?
தினசரி உணவில் இடம் பெறும் புரதம், நம் திசுக்கள், என்சைம்கள், ஹார்மோன்கள், நோய் எதிர்ப்பு சக்தி என்று அனைத்திற்கும் தேவை. இதில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது, புரதச்சத்து என்பது 'சப்ளிமென்ட்' எனப்படும் துணை உணவு மட்டும் அல்ல.
வழக்கமாக சாப்பிடும் பருப்பு வகைகள், சுண்டல், பால், தயிர், பனீர், கோழி இறைச்சி, மீன் இவற்றில் புரதம் உள்ளது. சுலபமாக, குறைந்த விலையில் கிடைக்கும் முட்டையில், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் போதுமான அளவு இருப்பதால், முழுமையான புரதம் நிறைந்தது என்று சொல்கிறோம்.தானியத்தில் சில அமினோ அமிலம் குறைவாக இருந்தால், பருப்பில் உள்ளவை அதை ஈடு செய்து விடும்.
சிலர் புரதம் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தவறான புரிதலில், வழக்கமான உணவுடன் இணை உணவையும் சேர்த்து சாப்பிடுகின்றனர். இது அதிகமான கலோரியாகவே கணக்கிடப்படும். இப்படி தேவைக்கு அதிகமாக சாப்பிடும் எந்த உணவும் கொழுப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுவதால், உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
இன்னொரு தரப்பினர், சக்தியைத் தரும் கார்போஹைட்ரேட்டைத் தவிர்த்து, வெறும் புரதத்தை மட்டுமே மூன்று வேளையும் சாப்பிடுகின்றனர். ஒன்று இல்லாவிட்டால் அதன் வேலையை இன்னொன்று செய்யுமே தவிர, தன் வேலையை செய்யாது. இதனால் தசைகளுக்கு வலு சேர்ப்பதோ, புதிய செல் உருவாக்கவோ புரதம் பயன்படாது.
இணை உணவுகளில், புரதத்துடன், செயற்கை சுவையூட்டிகள், வேதிப் பொருட்கள், நிறமிகள் சேர்ப்பதால், செரிமான மண்டலத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சிதைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதிகப்படியான புரதம் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
புரதம் சாப்பிடும் போது தாகம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதனால் நார்ச்சத்து, தண்ணீர் அதிகம் சாப்பிட வேண்டும்.
புரதம் செரிமான மண்டலத்தில் அமிலங்களை அதிகம் சுரக்கச் செய்வதால், தாதுக்கள் அதிகமாக வெளியேறும். குறிப்பாக கால்சியம் பற்றாக்குறை ஏற்படலாம். அதனால் தான் 'பாடி பில்டர்ஸ்' தடுக்கி விழுந்ததும் எலும்பை உடைத்துக் கொள்கின்றனர்.
ஆரோக்கியமாக வளரும் குழந்தைக்கு, அதிகப்படியான புரதம் அவசியம் இல்லை. வழக்கமாக தரப்படும் உணவிலேயே தேவையான சக்தியும், புரதமும் கிடைத்து விடும். வழக்கமான உணவை சாப்பிடாத குழந்தைகளுக்கு வெறும் புரதம் மட்டுமே தர முடியாது. கார்போஹைட்ரேட்டுடன் சேர்த்துக் கொடுத்தால் மட்டுமே புரதம் தன் வேலையை சரிவரச் செய்யும்.
தேவையான புரதம் அமினோ அமிலமாக மாற்றப்பட்டு, மீதி இருப்பவை யூரியாவாக மாறி, கழிவாக சிறுநீரகம் வெளியேற்றும். இதனால் அதிகம் புரதம் சிறுநீரகங்களுக்கு வேலைப் பளுவாக அமையும்.
புரதச்சத்து நிறைந்தது என்று மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடுவது, பெருங்குடல், மார்பக, புராஸ்ட்ரேட் கேன்சர் வரும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.
டாக்டர் ரேஷ்மா அலீம், ஊட்டச்சத்து மற்றும் உணவு ஆலோசகர், ரேலா மருத்துவமனை,044-5555 7777 info@relainstitute.com