
ஆர்.எழிலரசி, ராமநாதபுரம்: இடுப்பு எலும்பு வலியால் அவதிப்படுகிறேன். இதிலிருந்து விடுபட முடியுமா
தற்போது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இடுப்பு எலும்பு தேய்வால் பாதிக்கப்படுகின்றனர். முன்பு போல் உடலுக்கு நாம் வேலை கொடுப்பதில்லை. அலுவலக வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்கின்றனர்.
இளம் வயதினர் விளையாட்டு, உடற்பயிற்சி செய்வதில்லை. 40 வயது நிறைவடைந்த பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைபாட்டால் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படுவதால் முதுகு தண்டு வடம் தேய்வு ஏற்படுகிறது.
இதன் காரணமாக இடுப்பு எலும்பில் வலி ஏற்படுகிறது. இதனை எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை மூலம் அறிந்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கால்சியம் சத்து குறைபாடு இல்லாமல் பார்த்து கொள்வதற்கு தினமும் ஒரு நேரம் சிறு தானியங்களால் ஆன உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
புரத சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பிசியோதெரபி சிகிச்சை பெற வேண்டும். இடுப்பில் பெல்ட் அணிந்து கொள்ளலாம். தண்டுவடத்தை பலப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
-டாக்டர் ஆர்.கண்ணன், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
ரமேஷ், அருப்புக்கோட்டை: என் வயது 29. 20 நாட்களாக லேசான நெஞ்சு எரிச்சல், சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, இரவில் துாக்கம் இல்லை. காரணம் என்ன
உங்களுடைய ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். நேரம் தவறி சாப்பிடும் பட்சத்தில் அல்சர் பாதிப்பு உண்டாக வாய்ப்பு அதிகம் உள்ளது. அது தவிர மசாலா, அஜினோமோட்டோ நிறைந்த உணவு வகைகளான பிரியாணி, சிக்கன் ரைஸ், நுாடுல்ஸ் இது போன்ற துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. இரவில் நேரம் கழித்து உணவு உட்கொள்வதால் செரிமானம் ஆகாது.
அல்சர் வரும்போது துாக்கமின்மை வர வாய்ப்பு அதிகம். மன அமைதியுடன் பதட்டம் அடையாமல் வேலை பார்க்க வேண்டும். இரவில் அலைபேசியில் அதிக நேரம் செலவழிப்பது தவிர்க்கப்பட வேண்டும். உடல் உறுப்புகள் சீராக இயங்க குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் துாக்கம் அவசியம். லேசான நெஞ்சு எரிச்சல் தானே என்று அலட்சியமாக இருக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
- டாக்டர் சந்திரமவுலி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அருப்புக்கோட்டை.
சுவேதா, கொடைக்கானல்: ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்த நிலையில் இடுப்பு வலி அடிக்கடி ஏற்படுகிறது. இதன் தீர்வுக்கு வழி சொல்லுங்கள்
பொதுவாக பெண்களுக்கு பிரசவம் இயல்பாக நடக்காத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்துவது வழக்கம். இருந்த போதும் இதனால் இடுப்பு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதை தவிர்க்க பிரவசத்திற்கு பின் பெண்கள் கால்சியம் சத்து, இரும்பு சத்து மாத்திரைகளை இரு ஆண்டுகள் இடைவிடாமல் உட்கொள்ள வேண்டும். முதுகுத்தண்டு தசையை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை டாக்டர் அறிவுரையின் படி மேற்கொள்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.
- டாக்டர் பொன்ரதி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், கொடைக்கானல்