PUBLISHED ON : டிச 15, 2024

மனித உடல், இயற்கை நமக்கு வழங்கிய சிறந்த பரிசு. இதை நாம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். உடல் மலர்ச்சியாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற நம்மை உற்சாகப்படுத்தும். சரியான உணவு, சில உடற்பயிற்சிகள், நல்ல அணுகுமுறைகள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நல்ல அணுகுமுறைகள் என்கிற போது மது, சிகரெட் போன்ற போதைப்பொருட்களைத் தவிர்த்தல், நல்ல துாக்கம் போன்றவற்றைக் கூறலாம். துாக்கத்தின் போது உடல் நன்றாக ஓய்வெடுக்கிறது. வாழ்க்கை முறை ஆரோக்கியமானதாக இருந்தால் புற்றுநோய், இதயக் கோளாறுகள், நீரிழிவு நோய் இல்லாமல் ஆயுள் அதிகரிக்கும். இது பெண்களுக்கு 10 ஆண்டுகளும், ஆண்களுக்கு ஏழு ஆண்டுகளும் அதிகரிக்கும் என்று உடல்நலம் குறித்த ஆய்வு ஒன்று கூறுகிறது.
உடல்நலத்துக்கு முக்கியமானது ஆரோக்கியமான உணவு. இதய நோய்களைத் தடுப்பதற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுப்பது சிறந்த தீர்வாகும். பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது இதய நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். பீன்ஸ், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைவான கொழுப்புக் கொண்ட பால் பொருட்கள், இறைச்சி, மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பாதாம், அக்ரூட், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது இதயத்திலுள்ள கெட்ட கொழுப்புச்சத்தைக் குறைக்க உதவுகின்றன.
இன்றைய இளம் தலைமுறையினர் பலர், 'எனக்கு எப்போதும் சோர்வாக இருக்கிறது, என்னால் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை,' என பல நேரங்களில் கூறக் கேட்டு இருப்போம். இப்படிச் சோர்வாக இருக்கிறது என்று சொல்லும் இளம் தலைமுறையினருக்கு உண்மையாகவே ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். காரணம் வளர்ந்து வரும் துரித உணவுக் கலாசாரம்.
முதன்மையான இரும்புச்சத்து குறைபாடு
இந்திய குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட ஆய்வுகளின்படி 15-19 வயதாகும் பெண்களில் 59.1 சதவீதம் பேருக்கும், 15-19 வயதுடைய ஆண்களில் 31.1 சதவீதம் பேருக்கும் இரும்புச் சத்து குறைபாடால் ரத்த சோகை இருப்பதாகத் தெரியவந்துள்ளது. பெண்களுக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 18 மில்லி கிராம் வரை இரும்புச் சத்துத் தேவைப்படுகிறது. இது பெண்களின் வயது, கர்ப்பமாக இருப்பது, பாலுாட்டும் தாய்மார்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடுகிறது.
உலகில் அதிகமாகக் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இரும்புச் சத்து குறைபாடு முதன்மையாக இருக்கிறது. உலகச் சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் மக்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு உள்ளது.
உடலுக்கு ஆதாரபூர்வமாக விளங்கும் எலும்பு மண்டலம், அதை மறைத்து அமைந்துள்ள தசை மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம், ரத்தக்குழாய்கள் ஆகியவற்றின் திறன் மேம்படச் செய்ய நாம் நாளும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. மூட்டுகளின் அசைவுகளைப் பாதுகாத்தால் தான் நாம் பிறர் உதவியின்றி எந்த வயதிலும் நமது வேலைகளை நாமே செய்தல் சாத்தியமாகும். அசைவுகள் தான் வாழ்க்கை என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவரவர் வயதுக்கு ஏற்றபடி ஓடுதல், வேகமாக நடத்தல், மெதுவாக நடத்தல் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்தால் நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்தினை எளிதில் பெற முடியும்.
முடிந்த வரை லிப்ட்டைப் பயன்படுத்தாதீர்கள். படிக்கட்டுகளில் ஏறிச் செல்லுங்கள். அலுவலகத்தினுள் சக ஊழியர்களிடம் அலைபேசியில் உரையாடுவதைத் தவிர்த்து, அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று நேரில் பேசுங்கள். சின்ன வாக்கிங் என்பதோடு பரஸ்பர நட்பும் வலுவடையும்.
போதுமான துாக்கம் இல்லாதவர்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்குச் சாத்தியம் அதிகம்.
மனநலம் பேணுவது அவசியம்
உடல் நலம் பேணுவதோடு நிறுத்தி விடாமல் மனநலம் பேணுவதும் அவசியமாகும். மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, தியானம் போன்றவைதான் சரியான தீர்வாக இருக்கும்
குழந்தைகள் கூட மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். நன்னெறிகள், மதம் கடந்த ஆன்மிகச் சிந்தனைகளை நாம் குழந்தைகள் மத்தியில் விதைக்கத் தவறியதே இதற்குக் காரணம். மனக்கவலையோடு இருப்பவரால் சாதிக்கமுடியாது. துாய்மையான எண்ணங்கள் இருந்தால்தான் அறிவும் திறமையும் மேம்படும். கலங்கிய நீரில் தெளிவு பிறக்காது. நேர்நிலை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.
பாராட்டுவோம்
பொதுவாக எல்லா மனிதனும் எதிர்பார்க்கும் ஒரு சாதாரண உணர்வு பாராட்டு. பாராட்டுவதில் பாரபட்சம் பார்க்காதீர்கள். அது மிக்கி மௌஸ் வரைந்த குழந்தையாக இருக்கலாம், சமையல் செய்த மனைவி அல்லது கணவராக இருக்கலாம், இலக்கை அடைந்த ஊழியராக இருக்கலாம். பாராட்டு என்பது அங்கீகாரத்ததின் ஒரு வெளிப்பாடு. பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கியவரிடம் உங்கள் பேச்சு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது எனச் சொல்லிப் பாருங்கள். அடுத்த முறையாவது நன்றாகப் பேசவேண்டும் என்ற எண்ணமும் உங்கள் மீதான பிரியமும் அவருக்கு அதிகரிக்கும். மதிக்கப்படுவதும் பாராட்டப்படுவதும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்று கலிபோர்னியாவின் மருத்துவ சமூகப் பணியாளரும் உளவியல் நிபுணருமான மார்சியா நவோமி பெர்கர் விளக்குகிறார்.
இசை கேட்போம்
உங்களுக்காகக் குறைந்தது 30 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்நேரத்தில் மிகவும் அமைதியாக இருங்கள். அலைபேசிக்கு ஓய்வு கொடுங்கள். இசையைக் கேளுங்கள். மனதை ஈர்க்கும் விஷயங்களைப் படியுங்கள். மன இறுக்கம் அவிழும். நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். பிடித்த பாடலை மனதுக்குள் பாடுங்கள். சக மனிதர்கள் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுத்து என்ன செய்யப்போகிறோம்? முதலில் புன்னகைக்கப் பழகுவோம். பின்னர்ச் சிரிப்பினை சொந்தமாக்குவோம். மனம் விட்டு சிரிக்கும் போது முகத்தில் உள்ள அனைத்து தசைகளும் வலுப்பெறுகின்றன. நாம் அழகாக மாறுகிறோம். இவையனைத்தையும் கடைபிடித்தால் உடலும் உள்ளமும் நலமாகவே இருக்கும்.
- டாக்டர் பி.எஸ்.சண்முகம்
முடநீக்கியல்துறை பேராசிரியர் (ஓய்வு)
மதுரை.
94437 15525