PUBLISHED ON : டிச 15, 2024

நம் நாட்டில், சென்னையில் முதன் முறையாக 1986ம் ஆண்டு டாக்டர் சுனிதி சாலமன், சிலரின் ரத்த மாதிரிகளில் ஹெச்ஐவி வைரஸ் தொற்று இருப்பதைக் கண்டுபிடித்தார். பாதுகாப்பற்ற தாம்பத்திய உறவால் தொற்று பரவும் என்பதால், ஆரம்ப காலத்தில் பாதிப்பை வெளியில் சொல்வதற்கே தயக்கம், பயம் இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிலை வெகுவாக மாறிவிட்டது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் 'நேக்கோ' எனப்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளால், ஹெச்ஐவி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது.
ஹெச்ஐவி பரிசோதனை செய்ய விரும்பினால், டாக்டரின் பரிந்துரை அவசியம் இல்லை. சுய விருப்பத்தின் பேரில் தாமாகவே சென்று செய்து கொள்ளலாம். முடிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் தவிர வேறு யார்க்கும் தெரியப்படுத்த மாட்டோம். இதனால் மக்களிடையே நம்பிக்கை அதிகரித்து உள்ளது.
ஹெச்ஐவி 'பாசிடிவ்' என்றால், பரிசோதனை மையங்களில், இதற்கென்று உள்ள பயிற்சி பெற்ற ஆலோசகர்கள், தேவையான ஆலோசனைகள் தந்து, ஐசிடிசி எனப்படும் ஒருங்கிணைந்த பரிசோதனை மற்றும் ஆலோசனை மையத்திற்கு அனுப்புவோம். அடுத்து செய்ய வேண்டிய அனைத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முழுமையாக அங்கு வழிகாட்டுவார்கள்.
குறிப்பாக, தொற்றுக்கு எதிராகப் போராடும் வெள்ளை அணுக்களான சிடி4 செல்களின் எண்ணிக்கையை அவ்வப்போது பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். சிடி4 செல்களை தொடர்ந்து தாக்குவது இந்த வைரசின் இயல்பு. ஒரு கியூபிக் மி.மீ., ரத்தத்தில் 500-1200 சிடி4 செல்கள் இருக்க வேண்டும். இது 200க்கும் கீழ் குறையும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, காசநோய், கேன்சர் உட்பட பல நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த நிலை தான் எய்ட்ஸ்.
ஹெச்ஐவி தொற்றால் ஏற்படும் உயிரிழப்பைவிட, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களே அதிகம். இதுதவிர, ஹெச்ஐவி தொற்றுக்கு தரப்படும் ஏஆர்வி கூட்டு மருந்துகள், பலன் அளிக்கிறதா, கிருமி அதை எதிர்க்கும் திறனைப் பெற்றுள்ளதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.
நான்காம் தலைமுறை டெஸ்டிங்
வைரஸ் நம் உடலில் நுழைந்ததும் ஆன்டிஜென் - நோய் எதிர்ப்பணுக்களை உருவாக்கத் துாண்டும் மூலக்கூறு உருவாகும். அதனபின் அதற்கு எதிராக ஆன்டிபாடிஸ் -நோய் எதிர்ப்பணுக்கள் உருவாகும். பழைய பரிசோதனை முறையில், ஆன்டிபாடிஸ் எண்ணிக்கையை மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். தற்போதைய நவீன முறையில் ஆன்டிபாடிஸ், ஆன்டிஜென் இரண்டையும் தெரிந்து கொள்ளலாம்.
இதனால் இதில் நெகடிவ் என்று முடிவு வந்தால், ஹெச்ஐவி தொற்று இல்லை என்று உறுதியாக சொல்லலாம். வைரஸ் தன்னை வெளிப்படுத்தும் முன்பு உள்ள 'விண்டோஸ் பீரீயட்' என்ற ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைய துவக்க முடிகிறது. ஆனால், பழைய முறையில் பாசிடிவ்என்று வந்தாலும், கூடுதலாக இரண்டு வேறுபட்ட பரிசோதனை செய்த பின் தான் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும்.
டாக்டர் ஆர்.லட்சுமி பிரியா,
மூத்த நுண்ணுயிரியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆலோசகர்,
மெட்ரோபாலிஸ் ஹெல்த்கேர்,
சென்னை
89259 54486
lakshmipriyar@metropolisindia.com