
வித்யா, மதுரை: எலும்பு தேய்மானத்தை சரிசெய்ய சித்த மருத்துவத்தில் வழி உள்ளதா
பெண்களைப் பொறுத்தவரை 40 வயதிற்கு மேல் எலும்பு தேய்மானம் வர வாய்ப்புள்ளது. ஆண்களில் அதிகம் வேலை செய்பவர்களுக்கும் உடல் உழைப்பாளிகளுக்கும் கால்சியம் சத்து குறைவதால் எலும்பு தேய்மானம் வரலாம். பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, மாதவிடாய் நிற்கும் 'மெனோபாஸ்' பருவத்தின் போது உடலுக்கு தேவையான கால்சியம் முழுவதும் எடுத்துக் கொள்ளப்படுவதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்யும் நல்ல மருந்து பிரண்டை செடி. பிரண்டை உப்பு என்றே கடைகளில் கிடைக்கிறது, அதை வாங்கி சாப்பிடலாம்.
நிறைய சித்த மருத்துவ நிறுவனங்கள் பிரண்டை மாத்திரை, கேப்ஸ்யூல் மாத்திரைகளை தயாரிக்கின்றன. அதையும் சாப்பிடலாம். மாத்திரை சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் வாரம் ஒருமுறை பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிரண்டை துவையல், ரசமாக சாப்பிடலாம். பிரண்டையில் நா பிரண்டை (4 முனை) வகை முக்கியமானது. பிரண்டை ஊறுகாய், ரசம், துவையல் என அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். இதுதவிர சீந்தில், நொச்சியும் நல்ல மருந்தாக பயன்படும்.
அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவ பிரிவுக்கு சென்றால் சிகிச்சையுடன் மருந்துகளை இலவசமாக பெறலாம்.
- டாக்டர் சுப்ரமணியன், அரசு சித்தா டாக்டர் (ஓய்வு), மதுரை
ஆர்.நந்தகோபால், போடி: சிறுநீரில் ரத்தக்கசிவு எதனால் ஏற்படுகிறது. இப்பாதிப்பை எவ்வாறு சரி செய்யலாம்.
சிறுநீரகம், சிறுநீரகப் பை, சிறுநீரக குழாயில் புண், கல், அல்லது கட்டி இருந்தால் இதன் மூலம் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பது மூலமும், போதியளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும், உடலில் உள்ள கழிவுகள் சிறுநீரகத்தில் தேங்கி கற்களாக உருவாகிறது. தண்ணீர் குடிக்காமல் இருப்பது, தொற்று மூலமும் புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போல சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுவதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரத்த கசிவால் பாதிக்கப்பட்ட நபர்கள் இதனை நீர்க்கடுப்பு, சூட்டு கடுப்பு என மெத்தனமாக இருக்க கூடாது.
உடலில் கழிவுகள் தேங்காத வகையில் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், அன்னாசி பழம், எலுமிச்சை சாறு, நார்ச்சத்து நிறைந்த பழங்கள், நீர்சத்து நிறைந்த காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, நுங்கு, பாதாம், காரட் சாப்பிடலாம். அதிக உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கால்சியம், ஆன்டாசிட் மருந்துகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
- டாக்டர் பி.சண்முக அரவிந்த், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி
பிரியங்கா, நத்தம்: ரத்த சோகை என்றால் என்ன, அதன் அறிகுறிகள், உணவின் மூலம் சரி செய்ய முடியுமா.
ரத்த சோகை என்பது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது. அந்தந்த வயதிற்கு ஏற்றார் போல் ரத்த அளவு இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவைவிட குறைந்திருந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை இருப்பவர்களுக்கு உடல் அசதி, அதிக துாரம் நடக்க முடியாது. சிலருக்கு படபடப்பு, கால் வீக்கம், தலைசுற்றல் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். சி.பி.சி., ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் இந்த நோய் இருப்பதை கண்டறியலாம். இரும்புச்சத்து, பி12 ,போலிக் ஆசிட், புரோட்டின் உள்ள உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் சரியாக வாய்ப்பு உள்ளது.
- டாக்டர் ரவி, அரசு ஓய்வு மருத்துவர், கோபால்பட்டி
ப. சக்திவேல், ராமநாதபுரம்: எனது 7 வயது மகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது. பசி இல்லை என்கிறார். காரணம் என்ன. எப்படி சரியாகும்.
மழைக்காலம், குளிர் காலத்தில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் சளி பிடித்தால் பசியின்மை ஏற்படும். அதுவே நோய் வெளிப்பாடாக காய்ச்சல், இருமல் பாதிப்புகளும் வந்து விடும். அந்த மாதிரியான நேரங்களில் உணவு பழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.
வெந்நீர் அருந்த வேண்டும். குழந்தைகளுக்கு முதலில் காரட், தக்காளி சூப் தரலாம். பிறகு ஒரு இட்லி தரலாம். இஞ்சி, பூண்டு, மிளகு கலந்த சூப் குடிக்க வேண்டும்.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளித் தொந்தரவு நீங்கும். மழைக்காலத்தில் விட்டமின் 'ஏ' உள்ள பப்பாளி, ஆரஞ்சு, அன்னாசி பழங்கள் சாப்பிடலாம். தேன் கலந்த மிளகு, மஞ்சள், பூண்டு பொடிகளை நாக்கில் வைத்து சுவைத்து சாப்பிட்டால் அவற்றின் சக்தி பன்மடங்கு நமக்கு அதிகமாக கிடைக்கும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி தொந்தரவு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்.
-டாக்டர் எல்.டி.சர்மிளா, யோகா, இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம், புதுமடம்