PUBLISHED ON : டிச 22, 2024

உடம்பில் வலி என்று டாக்டரிடம் சென்றால், உடற்பயிற்சி செய்யுங்க என்று சொல்வதைத் தாண்டி, தசைகளை வலிமையாக்க, 'ரெசிஸ்டென்ஸ் டிரைனிங்' மற்றும் உடலை பலப்படுத்த 'ஸ்ட்ரெந்த் டிரைனிங்' செய்யுங்கள் என்று ஆலோசனை தரப்படுகிறது.
முறையான வழிகாட்டுதல் இல்லாமல் செய்வதால் பல பிரச்னைகள் வருகின்றன. எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும், 'வார்ம் -அப்' செய்வது முக்கியம் என்றாலும், உடல், தசைகளை வலிமையாக்கும் பயிற்சி செய்யும் போது இது மிகவும் முக்கியம்.
காரணம், இயல்பான பயிற்சிகள் செய்யும் போது, உடல் எடையால் ஏற்படும் உளைச்சல், மிதமான வலி மட்டுமே இருக்கும். ஆனால், வெயிட் லிப்டிங், ஸ்ட்ரெந்த் டிரைனிங் செய்யும் போது, டம்ளிங், ரப்பர் குழாய் போன்றவற்றை உபயோகிப்போம்.
இதனால், உடல் எடை, புவியீர்ப்பு விசையுடன், இந்தக் கருவிகளின் எடையும் சேர்ந்து, தசைப் பிடிப்பு, முதுகு தண்டில் உள்ள டிஸ்க் எனப்படும் வட்டு நகர்வது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
எடை துாக்கும் பயிற்சியை முறையாக செய்யாததால், 70 சதவீதம் பேருக்கு தசைப் பிடிப்பு, முதுகு வலி வருவதாக சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன.
இது ஒரே நாளில் நடக்காது. தினமும் முறையற்ற பயிற்சி செய்யும் போது, சிறிது சிறிதாக ஏற்படும் பிரச்னை ஒரு நாளில் வெளிப்படும். 'தினசரி பயிற்சி செய்கிறேன்; ஏன் திடீரென்று தசை பிடிப்பு வந்தது' என்று புரியாது.
இது போன்ற பிரச்னை, குறிப்பாக கீழ்முதுகு, தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் வரலாம். இதில் நடை, ஓட்டம் பெரிய மூட்டுகளை தயார்படுத்துவது போன்ற பொதுவான வார்ம் அப், உடலின் எந்த பகுதிக்கு உடற்பயிற்சி செய்ய விரும்புகிறோமோ அந்தப் பகுதியை தயார்படுத்தும் பிரத்யேக வார்ம் அப் இரண்டும் செய்ய வேண்டும்.
பல நேரங்களில் இந்த இரண்டு வார்ம் -அப்களில் ஏதேனும் ஒன்றை விட்டாலும் தசைப் பிடிப்பு, வலி வரும் வாய்ப்பு உள்ளது.என்ன பயிற்சி செய்கிறோமோ அதற்கேற்ற கருவிகளை பயன்படுத்த வேண்டும். ஒரே கருவியை வைத்து எல்லா பயிற்சிகளையும் செய்வது தவறு.
பாடி வெயிட் டிரைனிங் எனப்படும் உடல் எடையை பயன்படுத்தி முதலில் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். வெயிட் லிப்ட் பயிற்சியில் உடலை ஒட்டியபடி எடையை எடுப்பது, முட்டியை மடக்காமல் செய்வது என்று பல நுணுக்கங்கள் உள்ளன. அவற்றையும் முறையாக கற்க வேண்டும்.
எடையை துாக்கும் போது மூச்சை இழுப்பது, எடையை கீழே எடுத்து வரும் போது மூச்சை விடுவது போன்ற சுவாசப் பயிற்சி மிகவும் முக்கியம். இதை தவறாக செய்தாலும் பரவாயில்லை. மூச்சை பிடித்துக் கொண்டு எடையை துாக்குவது தான் ஆபத்தானது.
மூச்சுப் பயிற்சியை தவறாக செய்வதால் உயிரிழக்கும் அபாயம் அதிகம். தினமும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஆழ்ந்த துாக்கத்திற்கு பின் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது போல பயிற்சிக்கு இடையில், தசைநார்களுக்கு ஓய்வு தருவதும் அவசியம்.
உடல் வலிமையுடன் இருந்தால் மட்டுமே, உணவில் இருந்து தாதுக்கள் முழுமையாக உறிஞ்சப்படும். உடலின் உள்செயல்பாடு நடைபயிற்சி செய்வதை விட, ஸ்ட்ரெந்த் டிரைனிங்கில் 70 சதவீதம் அதிகமாக இருக்கும்.
சி. விஜய்,
பிட்ஜெஸ் பயிற்சியாளர்,
ஸ்மார்ட் 7 லெவல்னெஸ், சென்னை
75500 26267
smart7wellness@gamil.com